கருவூலம்: சேலம் மாவட்டம்!

நெல், கரும்பு, வாழை, பருத்தி, கம்பு, சோளம், மரவள்ளிக் கிழங்கு, காப்பி, பாக்கு, நிலக்கடலை, ஆமணக்கு, வெற்றிலை, பழவகைகள், பருப்பு வகைகள்
கருவூலம்: சேலம் மாவட்டம்!

(சென்ற வாரத் தொடர்ச்சி...)
விவசாயம்:
மாம்பழமாம் மாம்பழம் - மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் - தித்திக்கும் மாம்பழம்
என சிறுவர் பாடலில் வரும் வரிகள் உண்மையானதுதான். சேலத்தின் அடையாளமாக சுவையான தனிச்சிறப்புமிக்க மல்கோவா மாம்பழங்கள் பிரசித்தி பெற்றவை. அதிக அளவில் மாம்பழ உற்பத்தி செய்யப்படும் இடங்களில் சேலமும் ஒன்று.
நெல், கரும்பு, வாழை, பருத்தி, கம்பு, சோளம், மரவள்ளிக் கிழங்கு, காப்பி, பாக்கு, நிலக்கடலை, ஆமணக்கு, வெற்றிலை, பழவகைகள், பருப்பு வகைகள் உள்ளிட்ட பல வகையான விவசாயப் பொருட்கள் இங்கு விளைகின்றன. புகழ்பெற்ற "ஆத்தூர் கிச்சடி'' அரிசி இப்பகுதியில் விளைவதுதான். மேலும் ரோஜா, மல்லிகை தோட்டங்களும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் உள்ளன.

கால்நடை வளர்ப்பு
 தமிழகத்தின் கால்நடைகளில் 7% இங்குதான் வளர்க்கப்படுகின்றன. காங்கேயம், நெல்லூர், ஒசூர், சித்தி என தரமான பசுக்களும் மற்றும் தரமான ஆடுகளும் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. அதிக அளவிலான பால் பதனிடப்பட்டு பிற பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. மேச்சேரியில் வாரந்தோறும் நடைபெறும் மாட்டுச் சந்தை முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் கோழிப் பண்ணைகளும் நிறைய உள்ளன. அதனால் பால் சார்ந்த பொருட்கள், முட்டைகள், இறைச்சி, கோழி வியாபாரம் சிறப்பாக நடைபெறுகின்றன.

கனிம வளம்
சேலம் மாவட்டத்தில் இரும்பு, மாக்னசைட், பாக்சைட் போன்ற கனிமங்கள் கிடைக்கின்றன. பாக்சைட் என்பது அலுமினியம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. சேர்வராயன் மலைப்பகுதியில் வெட்டியெடுக்கப்படும் பாக்சைட் இந்தியாவிலேயே தரத்தில் உயர்ந்ததாகும்.
சேர்வராயன் மலைத்தொடரின் ஒரு பகுதியாகிய கஞ்சமலையில் 45 கோடி டன் எடையுள்ள இரும்புத்தாது இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 643 மீ உயரம் கொண்ட இந்த மலையிலிருந்து இதுவரை சுமார் 300 டன்னுக்கும் அதிகமான இரும்புத்தாது வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர தீர்த்தமலை பகுதியிலும் இரும்புத்தாது உள்ளது.

மின் உற்பத்தி:
சேலம் மாவட்டத்தின் தொழில் வளத்திற்கு இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் முக்கிய காரணமாகும்.

மேட்டூர் அனல்மின் நிலையம்
 மேட்டூர் அணை அருகே உள்ள இந்த அனல் மின் நிலையத்தில், நிலக்கரியிலிருந்து மின் உற்பத்தி செய்யும் நான்கு மின்கலங்கள் உள்ளது. 1987-இல் செயல்படத் தொடங்கிய இந்த நிலையத்தில் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேட்டூர் நீர்மின் நிலையம்
 மேட்டூர் அணைப் பகுதியில் உள்ள இந்த நீர்மின் நிலையம் மூலம் 40 மெகாவாட்டும், சுரங்க மின் நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இவற்றைத் தவிர காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள செக்கானூர், நெருஞ்சிப்பட்டி, ஊராட்சி கோட்டை உள்ளிட்ட தடுப்பணைப் பகுதிகளிலும் நீர்மின் உற்பத்தி அமைப்புகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் தனியாருக்குச் சொந்தமான MALCO மின் நிறுவனம் மூலம் 100 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.

தொழில் வளம்
சேலம் மாவட்டத்தில் நிலவும் நல்ல சீதோஷ்ண நிலை, தாதுப்பொருள் கிடைப்பது, நீர்வளம், மின் உற்பத்தி போன்ற பல காரணங்களால், பல வகையான தொழிற்சாலைகளும் பரவலாக உள்ளன.
சங்ககிரி பகுதியில் உள்ள லாரி கட்டுமான மனைகள், மோகனூர் சர்க்கரை தொழிற்சாலை, பள்ளிபாளையம் காகிதத் தொழிற்சாலை, சங்ககிரி துர்க்கம் இந்தியா சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் ஆத்தூர், உடையார்பட்டி, குமாரபாளையம், மேட்டூர் பகுதிகளில் அமைந்துள்ள பெரிய நூற்பாலைகள், ரசாயனப் பொருள் உற்பத்தி நிலையங்கள், அலுமினியத் தொழிற்சாலை, முலாம் பூசும் தொழிற்சாலைகள், சந்தன எண்ணெய் தொழிற்சாலைகள், வனஸ்பதி தொழிற்சாலை, வாகன உதிரிபாக உற்பத்தி ஆலைகள் என பலவகையான தொழிற்சாலைகள் இந்த மாவட்டத்தில் உள்ளன. இங்கு தொழில்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

காடு சார்ந்தவை - 37
விவசாயம் சார்ந்தவை - 125
கனிமப்பொருள் சார்ந்தவை - 38
துணி உற்பத்தி (ஜவுளி) ஆலைகள் - 393
பொறியியல் சார்ந்தவை - 20
வேதிப்பொருள் உற்பத்தி சார்ந்தவை - 95
ஸ்டார்ச் - 726
ஏனையவை - 410

தொழில் வளங்கள் பற்றி மேலும் சில சிறப்பான தகவல்கள்: 
சேலம் இரும்பு உருக்காலை
கஞ்சமலையில் கிடைக்கும் இரும்புத் தாதுவை உருக்குவதற்காக மத்திய அரசால் நிறுவப்பட்டது இந்த உருக்காலை. சுமார் 4000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையில் எவர்சில்வர் தகடுகளும்கூட தயாரிக்கப்படுகிறது. இதைத் தவிர சங்ககிரியைச் சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட இரும்பு உருக்காலைகள் இருக்கின்றன.

ஜவ்வரிசி உற்பத்தி
இம்மாவட்டத்தில் சுமார் 650 ஜவ்வரிசி உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இந்தியாவிலேயே இங்குதான் ஜவ்வரிசி மிக அதிகமாகத் தயாரிக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தேவையில் 80% அளவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஜவ்வரிசி உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளே மரவள்ளி கிழங்குதான். இங்கு 34,000 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது. இம்மாவட்டத்தில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 25 முதல் 30 டன் மரவள்ளிக் கிழங்கு விளைகிறது. இது உலக அளவில் மிக உயர்ந்த அளவாகும். உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஹெக்டேருக்கு 10 டன்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தின் பெருமைக்குரிய விஷயங்களில் இதுவும் ஒன்று! 

ஜவுளி உற்பத்தி
இங்கு பழமையான குடிசைத் தொழிலாக பல்லாண்டு காலமாக கைத்தறி நெசவு நடைபெறுகிறது. தற்போது 75000 க்கும் அதிகமான கைத்தறிக் கூடங்கள் இயங்குகிறது. இவற்றின் மூலம் சுமார் 5000 கோடி ரூபாய் மதிப்பினாலான துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு பருத்தி மற்றும் பட்டு வேஷ்டி, சேலை, திரைச்சீலை, உள் அலங்காரத் துணிகள் முதலியவை நெய்யப்படுகின்றன. சேலம் ஜமுக்காளம் மிகப் பிரசித்தி பெற்றது. 
 இவற்றைத் தவிர விசைத்தறி நிலையங்களும், துணி மற்றும் நூல்களுக்குச் சாயமேற்றும் நிலையங்களும் உள்ளன! 

தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் உற்பத்தி
நூற்றுக்கும் அதிகமான தங்கநகை உற்பத்தி நிலையங்களும்,ஆயிரக்கணக்கான வெள்ளிப் பொருட்கள் உற்பத்தி நிலையங்களும் சேலம் மாநகரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 3000 கோடி ரூபாய் அளவுக்கு வெள்ளிப் பொருட்கள் இம்மாவட்டத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே இங்குதான் மிக அதிக அளவில் கொலுசுகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் ஆண்டிற்கு இம்மாவட்டத்திலிருந்து மட்டும் 1500 டன் வெள்ளிப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. 

சேலம் ஆவின் நிறுவனம்
பால்பண்ணை ரோட்டில் 47 ஏக்கர் பரப்பளவில் ஆவின் நிறுவனம் உள்ளது. இங்கு தமிழகத்திலேயே மிக அதிகமாக (4.50 லட்சம் லிட்டர்) பால் நாள்தோறும் கொள்முதல் செய்யப்படுகிறது. இதிலிருந்து பதப்படுத்தப்பட்ட பால் தவிர பால்பவுடர், வெண்ணை, நெய், பால்கோவா, மைசூர்பாகு, மில்க் ஷேக் ஆகிய பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

இந்நிறுவனத்திலிருந்து தினமும் வெளியாகும் 7லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வயல்களுக்கு பாய்ச்சப்படுகிறது. இந்தக் கழிவுநீர் சுத்திகரிப்பு நடவடிக்கையின்போது மீத்தேன் வாயு எனப்படும் பயோகாஸ் உற்பத்தி செய்வதற்காக, தமிழக அரசினால் சமீபத்தில் இந்த வளாகத்திற்குள்ளேயே இரண்டு ஏக்கப் பரப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் பயோகாஸ் உற்பத்திக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே பால் நிறுவனத்தில் முதல்முறையாக இங்குதான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும் 1100 மெட்ரிக் மீட்டர் கியூப் பயோகாஸ் உற்பத்தியாகிறது. 

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

தொகுப்பு: கே. பார்வதி,
திருநெல்வேலி டவுன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com