தங்கக் காசு!

கடைக்குப் போன அப்பாவும், சித்தப்பாவும் திரும்பி வந்துட்டாங்க.... தங்கக் காசு கடைக்காரரோடது இல்லியாம்!.....
தங்கக் காசு!

...சென்ற இதழ்த் தொடர்ச்சி....

கடைக்குப் போன அப்பாவும், சித்தப்பாவும் திரும்பி வந்துட்டாங்க.... தங்கக் காசு கடைக்காரரோடது இல்லியாம்!..... இப்ப பொங்கல் வியாபார பரபரப்பில் இருக்கறதால தங்கக் காசை அப்பாவையே வெச்சுக்க சொல்லிட்டாராம்.... "யாராவது தேடி வந்தா அனுப்பி வைக்கிறேன்....அப்படி யாரும் வரலேன்னா...ரெண்டு நாள் கழிச்சு என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்''ன்னு சொல்லிட்டாராம்....அப்பா தங்கக் காசோடு வீட்டுக்குத் திரும்பி வந்துட்டாரு.....
 பாட்டி அப்பா கிட்டே, "நீ அந்த தங்கக் காசை சுவாமி படத்திலே ஒரு மஞ்சள் சரட்டிலே கோர்த்துப் போட்டுடு...அப்புறம் பார்த்துக்கலாம்...இப்ப பொங்கல் கொண்டாடுற வேலையைப் பாரு'' அப்படீன்னு சொன்னாங்க....அப்பாவும் அதே மாதிரி செஞ்சாரு...
 எல்லோருக்கும் கொஞ்சம் மனசு கஷ்டமாத்தான் இருக்கு...என்ன செய்யறது...அடுப்பில் வெல்லமும் அரிசியும் வெந்து ஆவியடிச்சுக்கிட்டு இருக்கு....வெள்ளை வெளேர்னு பஞ்சு மேகம் மாதிரி ரொம்ப அழகா பானையிலிருந்து பொங்கல் பொங்க ஆரம்பிச்சுது... எல்லோரும்..... "பொங்கலோ பொங்கல்!'...."பொங்கலோ பொங்கல்'னு சந்தோஷமா குரல் கொடுத்தோம்....எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துச் சிரிச்சிக்கிட்டோம்!.... அப்பா பூஜையை ஆரம்பிச்சாரு....ஒரு அம்மன் படத்தில் அந்த தங்கக் காசு மின்னிக்கிட்டு இருந்தது.  அப்பா எல்லா சாமி படத்துக்கும் தூபம், தீபம், பொங்கல், பழங்கள் எல்லாம் நிவேதனம் செஞ்சு கற்பூரம் காண்பிச்சாரு....நான், ரமா, பாட்டி, சித்தப்பா, அம்மா, அப்பா எல்லாரும் விழுந்து கும்பிட்டோம்! அப்போ வாசலிலே கேட் திறக்கிற சத்தம்....
 ஒரு அண்ணா கேட்டைத் திறந்து கொண்டு வந்தாரு...தோளில் ஒரு பை....எல்லோரும் வாசலுக்கு விரைந்து போனோம்...
 அந்த அண்ணா அப்பாவிடம், "நான் எஸ்.ஆர். சீட்டுக் கம்பெனியிலிருந்து வரேன்..."ரமா' வீடு இதுவா?''என்று கேட்க...
"ஆமாம்''என்றார் அப்பா.
 "நீங்க என்னை மன்னிச்சுக்கணும்.....இந்த விலாசத்துலே "ரமா'ங்கிற பேர்ல எங்க கம்பெனியிலே சீட்டுக் கட்டியிருந்தாங்க...''
"நீ ஏதாவது தங்கச் சீட்டு கட்டினியா?''அப்படீன்னு அம்மாவைப் பார்த்துக் கேட்டாரு அப்பா. 
"ஆமாங்க....ரமா பேர்லே..கட்டியிருக்கேன்...நம்ம எஸ்.ஆர் சீட்டுக் கம்பெனியிலேதான்.''
"அப்படியா....சரி....,சொல்லு தம்பி''என்றார் அப்பா.
அந்த அண்ணா அப்பாவைப் பார்த்து, "ஆனா...''
"ஆனா?...''
"அதை நான் தொலைச்சுட்டேன்...அந்த தங்கக் காசை போகி அன்னிக்கு சாயங்காலம் டெலிவரிக்கு எடுத்து வந்திகிட்டு இருந்தேன்...ஆனா எங்கேயோ அது விழுந்திடுச்சு...எங்க முதலாளி ஒரேயடியா சம்பளத்திலே பிடிச்சுடுவாரு...நீங்க கொஞ்சம் தயவு பண்ணா....நான் ஆயிரம்...,ஆயிரம் ரூபாயா திருப்பிக் குடுத்திடறேன்...தயவு செஞ்சு மன்னிச்சுக்குங்க....''என்றான். 
 அப்பாவுக்கு முகத்தில் ஒரு பிரகாசம் தெரிஞ்சுது....அவர் அந்த அண்ணாவிடம், "நீ அன்னிக்கு வேறே எங்கியாவது போனியா?'' என்று கேட்டார்.
 "ஆமாம் சார்....எங்கம்மா வரும்போது  கொஞ்சம் அரிசியும், வெல்லமும் வாங்கி வரச்சொன்னாங்க...அதுக்காக ஒரு கடைக்குப் போயிருந்தேன்...மேல் பாக்கெட்டிலே தங்கக் காசையும் பத்துப்பத்து ரூபாயா இருநூறு ரூபாய்களையும் வெச்சிருந்தேன்...ஆங்...ஒரு வேளை....காசை எடுத்துக் குடுக்கும்போது.....கொஞ்சம் இருங்க...,அந்தக் கடைக்காரர் கிட்டே கேட்டுட்டு வந்துடறேன்..., கடவுளே....''அப்படீன்னு வெளியிலே போகத் திரும்பினாரு அந்த அண்ணா.
 "எந்தக் கடைக்குப் போனே''
 அவன் சொன்ன கடையும் நாங்க அரிசி வாங்கின கடையும் ஒண்ணாத்தான் இருந்தது! 
 அப்பா முகத்தில் புன்னகை! "தம்பி, அந்தக் காசு எங்கேயும் போகலை....கடவுள் அதை எங்க வீட்டுக்கு அரிசியோட அனுப்பியிருக்காரு....''என்று அன்று காலை நடந்ததைச் சொன்னார். அந்த அண்ணா முகத்தில் ஆச்சரியமும் நிம்மதியும் கலந்த ஒரு பார்வை தெரிஞ்சுது.
 "சரி பூஜை இப்பத்தான் முடிஞ்சுது....சாப்பிடறயா?''
 "வேணாங்க...எங்க வீட்டுலேயும் இன்னிக்குப் பண்டிகை...நீங்க வேறே ஒரு சந்தோஷமான சமாச்சாரம் சொல்லியிருக்கீங்க......அம்மாகிட்டே விஷயத்தைச் சொல்லி வெச்சுட்டேன்...அவங்க வேற கவலையா இருப்பாங்க....முதல்லே இந்த நல்ல விஷயத்தைச் சொல்லணும்...நானும் இனி ஜாக்கிரதையா இருக்கணும்''
  "சரி கொஞ்சம் பொங்கலாவது சாப்பிட்டுட்டுப் போ!''
என்ற அம்மா,அந்த அண்ணாவுக்கு இலையிலே கொஞ்சம் பொங்கலைக் கொண்டுவந்து கொடுத்தாங்க....''
 நெய் கலந்த பொங்கலை ருசிச்சிக்கிட்டே சாப்பிட்டாரு அந்த அண்ணா. அப்பாவுக்கும் நன்றி சொல்லிட்டுப் போனாரு...
 அன்னிக்கு சாயங்காலம் நான், ரமா, சித்தப்பா, எல்லோரும் கடைத்தெரு வரைக்கும் வாக்கிங் போனோம்....கடைக்காரரிடம் நடந்த விஷயத்தைக் கூறினார். கடைக்காரர் அப்பாவிடம், "அந்தத் தம்பி இங்கே வந்து நடந்ததைச் சொல்லிட்டுப் போயிடுச்சு...''என்றார். 
 "நல்ல பையனாத்தான் தெரியறான்...காசைக் கூடக் கொஞ்சங்கொஞ்சமா திருப்பிக் குடுத்துடறேன்னு சொன்னான்''என்றார் அப்பா. 
நாங்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தோம்.
 பூஜை அறையில் அம்மன் படத்தில் அந்தத் தங்கக் காசு மின்னிக்கொண்டிருந்தது.
 ஒரு நல்ல நாளில் அதை எடுத்துத் தன் தாலிச் சரட்டில் கோர்த்துக் கொண்டாள் அம்மா!

- சுமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com