பத்திரிகைகள்!

இங்கிலாந்தில் 1621 ஆம் ஆண்டு "வாரச் செய்தி' என்னும் பத்திரிகை முதன்மதலாகத் தொடங்கப்பட்டது.
பத்திரிகைகள்!

இங்கிலாந்தில் 1621 ஆம் ஆண்டு "வாரச் செய்தி' என்னும் பத்திரிகை முதன்மதலாகத் தொடங்கப்பட்டது. 1665ஆம் ஆண்டில் அரசுச் செய்திகள் மட்டும் அடங்கிய "அரசு கெஜட்' பத்திரிகை ஒன்றும் தொடங்கப்பட்டது. 1702ஆம் ஆண்டு இங்கிலாந்தின் முதல் தினசரிப் பத்திரிகை (DAILY COURANT) என்னும் பெயரில் "எலிசெபத் மாலெட்' என்னும் பெண்மணியால் ஆரம்பிக்கப்பட்டது. 1785ஆம் ஆண்டு லண்டன் டைம்ஸ் என்னும் புகழ் பெற்ற பத்திரிகையை ஜான் வால்டர் என்பவர் ஆரம்பித்து வைத்தார். லண்டன் டைம்ஸ் பத்திரிகையின் ஆரம்ப காலப் பெயர் "டெய்லி யுனிவர்சல் ரிஜிஸ்டர்' என்பதாகும். சோவியத் ரஷ்யாவில் அரசாங்கமே இரு தினசரிப் பத்திரிகைகளைத் தொடங்கியது. அப்பத்திரிகைகளின் பெயர் "இஸ்வெஸ்டியா'...,"ப்ராவ்டா' என்பதாகும். 

அமெரிக்காவில் முதலில் தோன்றிய பத்திரிகையின் பெயர் "பப்ளிக் அக்கரன்ஸ்' என்பதாகும். இப்பத்திரிகையை "பெஞ்சமின் ஹாரிஸ்' என்பவர் 1690ஆம் ஆண்டு பாஸ்டன் என்னும் நகரில் ஆரம்பித்து வைத்தார். 1704ஆம் ஆண்டில் "செய்திக் கடிதம்' என்னும் பத்திரிகையை "ஜான் காம்பெல்' என்பவர் தொடங்கினார்.

1833ஆம் ஆண்டில் "சன்' என்னும் பெயரில் "பெஞ்சமின் ஹெச்டே' என்பவர் நியூயார்க்கிலிருந்து ஒரு தினசரிப்பத்திரிகையை வெளியிட்டார். இது மிகவும் பிரபலமானது. 1919ஆம் ஆண்டு திடுக்கிடும் செய்திகள் நிறைந்த "டெய்லி நியூஸ்' என்னும் பத்திரிகையை "ஜே.எம்.பட்டர்சன்' என்பவர் வெளியிட்டார். 

உலகச் செய்திப் பத்திரிகைகள்!
 உலகத்தில் முதன்முதலாக வந்த செய்திப் பத்திரிகையின் பெயர் "ட்ஸிங் பவோ' (TSING PAO) என்பதாகும். ஆறாம் நூற்றாண்டில் சீன நாட்டின் தலைநகரான "பீகிங்' நகரத்திலிருந்து வெளியான உலகின் முதல் செய்திப் பத்திரிகையான இதில், அரசவைச் செய்திகள் மட்டுமே அடங்கியிருந்தன. 

இந்தப் பத்திரிகையை அச்சுக்கோர்த்து அச்சிட்டு வெளியிடவில்லை! எழுத்துகளைச் செதுக்கிய பிளாக்குகளைக் கொண்டு ஒற்றி வெளியிட்டுள்ளார்கள்! இப்பத்திரிகை 1835 ஆம் ஆண்டுவரை வெளிவந்தது சாதனையாகும்!

ஐரோப்பாவில் உள்ள ரோமில் முதன்முதலாக ஒரு செய்திப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது! அதில் ரோமில் நடக்கும் நிகழ்ச்சிகளை கடிதங்கள் போல் எழுதி பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வந்தார்கள். இதற்குச் செய்திக் கடிதங்கள் என்று பெயர். இம்முறை 18ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் தொடர்ந்து நடந்தது. அன்றாடச் செய்திகளை ஒர் அறிவிப்புப் பலகையில் தினமும் பாதைகளில் எழுதி வைக்கும் முறையும் ரோம் நகரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

ஜெர்மன் நாட்டிலிருந்து ஒழுங்கான முறையில் 1609ஆம் ஆண்டு "ஸ்ட்ராஸ் பர்க்' என்னும் நகரத்திலிருந்து "உறவு' என்னும் பத்திரிகை முதன் முதலாக வெளிவந்தது. 

"ஜான் கூட்டன்பர்க்' என்பவர் அச்சடிக்கும் முறையைக் கண்டு பிடித்தபிறகு, அச்சடித்து முதலில் உலகில் வெளிவந்த பத்திரிகை இதுதான்! 

இந்தியாவின் முதல் செய்திப் பத்திரிகை!

இந்தியாவில் ஒளரங்கசீப் காலத்திலேயே அரசுச் செய்திகள் மட்டும் தாங்கிய அரசு கெஜட்டுகள் வெளியிடப்பட்டன! 1555ஆம் ஆண்டு இந்தியாவில் போர்ச்சுகீசியர்கள் தங்கள் அச்சு இயந்திரங்கள் மூலம் மத சம்மந்தமான நூல்களை மட்டும் வெளியிட்டார்கள்! 

இந்தியாவில் "போஸ்ட் அகஸ்டஸ் ஹிக்கி' என்பவர் கொல்கத்தாவில் முதன் முதலாக செய்தித்தாளை வெளியிட்டார்! 1780ஆம் ஆண்டு  ஜனவரி 29ஆம் நாள் "வங்காள கெஜட்' என்னும் பெயருடன் இச்செய்தித்தாள் வெளியிடப்பட்டது! 

சென்னை நகரில் 1785ஆம் ஆண்டு, அக்டோபர் பன்னிரெண்டாம் நாள் "சென்னை கூரியர்' என்னும் செய்தித்தாள் "ரிச்சர்ட் ஜான்ஸ்டன் கம்பெனி' என்னும் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டது! 

தமிழில் தோன்றிய முதல் தமிழ்ப் பத்திரிகையின் பெயர் "தமிழ் இதழ்' என்பதாகும்! கிறிஸ்துவ மத சங்கத்தார் இப்பத்திரிகையை சென்னையில் 1831ஆம் ஆண்டு தோற்றுவித்தார்கள்! 

தமிழில் தோன்றிய முதல் வாரப்பத்திரிகையின் பெயர் "தினவர்த்தினி' என்பதாகும்! இது 1856ஆம் ஆண்டு அரசு கல்வி இலாகாவால் தொடங்கப்பட்டது! 

தமிழில் தோன்றிய முதல் தமிழ் மாத இதழின் பெயர் "ஜனவினோதினி' என்பதாகும்! இதுவும் அரசு கல்வி இலாகாவால் 1870ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது! 

சென்னையில்  முதன் முதலில் இந்தியர் ஒருவரால் ஆரம்பக்கப்பட்ட பத்திரிகை "தி இந்து' ஆகும்! இச்செய்தித்தாள் 1878ஆம் ஆண்டு முதல் வெளிவருகிறது! 

1857ஆம் ஆண்டு வரை இந்தியப் பத்திரிகைகளில் இலக்கியம், மதம், சமூக நலம், சீர்திருத்தம் பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் இடம் பெற்றன. அரசியல் செய்தி ஒன்று கூட இடம் பெறவில்லை. 1857ஆம் ஆண்டுக்குப் பிறகே அரசியல் செய்திகள் அதிகம் வரத்தொடங்கின! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com