குருதட்சிணை!

குருகுலம் ஒன்றில் சீடர்கள் கல்வி கற்று முடித்தார்கள். குருவைப் பணிவாக வணங்கிய அவர்கள்,
குருதட்சிணை!

குருகுலம் ஒன்றில் சீடர்கள் கல்வி கற்று முடித்தார்கள். குருவைப் பணிவாக வணங்கிய அவர்கள், "தங்களுக்கு குருதட்சிணை தர விரும்புகிறோம்!....என்ன வேண்டும்? கேளுங்கள்! தங்களிடம் கற்ற எங்களால் செய்ய இயலாத செயலே இல்லை!'' என்றார்கள்.

அவர்களின் தற்பெருமை நீங்க வேண்டும் என்று நினைத்தார் குரு!

"மாணவர்களே!....நம் குருகுலத்திற்குப் பின்னால் காடு உள்ளது. அங்கே சென்று எதற்கும் பயன்படாத பொருளை ஒரு கூடையில் கொண்டு வாருங்கள்'' என்றார்.
இதைக் கேட்ட அவர்கள்,... பயன் இல்லாத பொருள் என்னவாயிருக்கும்? ...என்று சிந்தித்தார்கள். காய்ந்த சருகுகள் அவர்கள் நினைவிற்கு வந்தன.

ஒரு கூடையை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் நுழைந்தனர். அங்கே ஒரு மரத்தடியில் நிறைய சருகுகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. அந்தக் குவியலிலிருந்து சருகுகளை அள்ளிக் கூடைக்குள் போடத் தொடங்கினர்.

அங்கு வந்த ஒருவன், "எதற்காக இந்தச் சருகுகளை எடுக்கிறீர்கள்?....நான்தான் இவற்றை இங்கே குவியலாக வைத்தேன்.......இவற்றை எடுத்துச் சாம்பலாக்கி என் நிலத்திற்கு உரமாகப் போட உள்ளேன். அதனால் பயிர்கள் செழிப்பாக வளரும்'' என்றான்.

சருகுகளுக்கு இப்படி ஒரு பயனா?....என்று நினைத்த அவர்கள் அந்தச் சருகுகளை அங்கேயே போட்டனர். சிறிது தொலைவு சென்றனர். அங்கே மூன்று பெண்மணிகள் உலர்ந்த சருகுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து, "எதற்காக இந்தப் பயனற்ற சருகுகளைப் பொறுக்குகிறீர்கள்?'' என்று கேட்டார்கள்.

முதலாமாவள், "இந்தச் சருகுகளை எரித்து நான் உணவு சமைப்பேன்!'' என்றாள்.
இரண்டாமாவள், " இந்தச் சருகுகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து இலை தைப்பேன்...பிறகு இவற்றை விற்பேன்!'' என்றாள்.

மூன்றாமாவள், ""நான் குறிப்பிட்ட ஒரு மரத்தின் இலைகளையே திரட்டுகிறேன்...இந்தச் சருகுகளுக்கு மருத்துவ குணம் உண்டு....இவற்றைக் கொண்டு மருந்து தயாரிக்கிறேன்...அது பல நோய்களைக் குணப்படுத்துகிறது'' என்றாள்.

பயனற்றது என்று நினைத்த சருகுகளால் இவ்வளவு பயன்களா?...,என்று நினைத்த அவர்கள் மேலும் காட்டுக்குள் சென்றனர். அங்கேயும் சருகுகள் கிடந்தன. " இந்தச் சருகுகளால் எந்தப் பயனும் இல்லை....இதை எடுப்போம்! என்றான் சீடர்களில் ஒருவன்! அப்பொது ஒரு பறவை அதில் சில சருகுகளை எடுத்துக் கொண்டு பறந்தது! ""கூடு கட்ட இந்தச் சருகுகள் பயன்படுகின்றன!'' என்றான் மற்றொருவன். பயனற்ற சருகுகளே கிடைக்காது போலிருக்கிறது என்று ஏமாற்றதுடன் திரும்பினர் சீடர்கள்.

வழியில் ஒரு குளத்தில் சருகு ஒன்று மிதந்து கொண்டிருந்தது! " இதனால் எந்தப் பயனும் இருக்காது'' என்றான் சீடர்களில் ஒருவன்! ஆனால் அந்த சருகிலும் இரண்டு எறும்புகள் இருப்பதைப் பார்த்தார்கள்! இந்தச் சருகும் மிகப் பயனுள்ளதே....,இந்த எறும்புகளின் உயிரையல்லவா இவை பாதுகாக்கின்றன?....என்பதை அறிந்தார்கள்.

எல்லோரும் வெறுங்கையுடன் குருவை அடைந்தனர். ""குருவே!...,உலர்ந்த சருகுகள் கூட பல வழிகளில் பலருக்குப் பயன்படுகின்றன. பயனற்ற ஒரு சருகையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை...!'' என்று வருத்தத்துடன் சொன்னார்கள்.

மகிழ்ச்சி அடைந்த குரு, " என் எண்ணம் நிறைவேறி விட்டது!....நான் விரும்பிய குருதட்சிணை இதுதான்! உலர்ந்த சருகே பல வழிகளில் பயன்படுமானால் பகுத்தறிவுள்ள மனிதன் உலகத்திற்கு எவ்வளவு பயன்பட வேண்டும்....பிறர்க்கு இன்பம் பயக்கும் எவ்வளவு செயல்களைச் செய்ய வேண்டும்?'' என்றார்.

"குருவே!....உலர்ந்த சருகினால் நல்ல பாடம் கற்றுக் கொண்டோம்!....இனி நாங்கள் பிறர்க்காகவே வாழ்வோம்!'' என்று அவரிடம் விடை பெற்றார்கள்!
- ஆர்.அஜிதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com