புத்தகத்துக்கும் வெளியே!

எழுதிக்கிட்டிருக்கிற புள்ளைய எதுக்கு வேலை வாங்கறே?....பணத்தையும் பையையும் கொண்டு வா. நான் போய் வருகிறேன்.
புத்தகத்துக்கும் வெளியே!

அரங்கம்
காட்சி-1,
இடம்- வீடு, மாந்தர்-பூங்குன்றன், அனிச்சம், அருள், மகிழ்நன்.
(காலைப்பொழுது. பூங்குன்றன் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருக்கிறான். அம்மா சமையல் வேலையில் இருக்கிறார். அப்பா புடலங்காய் பந்தலுக்கு உரிய பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார். தாத்தா மகிழ்நன் பூச்செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்.)
அனிச்சம்: பூங்குன்றா! ...என்ன செய்யறே?
பூங்குன்றன்: எழுதிக்கொண்டிருக்கிறேன்...
அனிச்சம்: முடிஞ்சுதா?...
பூங்குன்றன்: இன்னும் ஐந்து நிமிடம் ஆகும்...ஏம்மா...?
அனிச்சம்: கடைக்குப் போயிட்டு வரயா....,இன்று ஞாயிறுதானே....,பொறுமையா எழுதலாமே....
பூங்குன்றன்: சரி அம்மா...
மகிழ்நன்: எழுதிக்கிட்டிருக்கிற புள்ளைய எதுக்கு வேலை வாங்கறே?....பணத்தையும் பையையும் கொண்டு வா. நான் போய் வருகிறேன்.
அருள்: (தன் தந்தை மகிழ்நனைப் பார்த்து) கொஞ்சம் இருங்கப்பா!....அவன் ஆறாவது படிக்கிறான்....இதெல்லாம் எப்பத் தெரிஞ்சுக்கறது?....போய் வரட்டும்!.....எல்லாத்தையும் புத்தகத்திலிருந்து மட்டும் தெரிஞ்சுக்க முடியாது. புத்தகத்துக்கும் வெளியே தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு. நீ போய் வாடா கண்ணு!...
பூங்குன்றன்: சரிப்பா!...
அனிச்சம்: என்னென்ன வாங்க வேண்டுமென்று இதிலே எழுதியிருக்கிறேன். ஒவ்வொண்ணா விலையைக் கேட்டு வாங்கணும். நல்ல பொருள்தானா என்று பார்க்கணும். எடை சரியா கவனமா பாரு. வாங்கின பொருளை சீட்டோடு ஒத்துப் பார்க்கணும். சரியா?...அப்படியே உனக்கும் பாப்பாவுக்கும் பத்து ரூபாய்த்துப் பொட்டுக்கடலை வெல்லம் வாங்கிக்க....ஆங்...மறந்துட்டேன் புதினா பத்து ரூபாய்க்கும் வாங்கிக்க....மீதி சில்லறையைக் கணக்கு பண்ணி வாங்கிட்டு வா!
மகிழ்நன்: (பேரனைப் பார்த்து) பார்த்துப் போ...,தெருவிலே நாய்ங்க நிற்கும்....,குரைச்சுதுன்னா ஓடாதே...,பொறுமையா போ. ஓடினா துரத்தும்!.....சாலையில் இடது புôகவே போ....அதுதான் நல்லது பாதுகாப்பு....
பூங்குன்றன்: சரிங்க தாத்தா....பார்த்துப் போறேன்.
மகிழ்நன்: அவன் சின்ன புள்ளை....500 ரூபா கொடுத்துக் கணக்கு பண்ணி வாங்குடான்னா எப்படி வாங்குவான்? இதுக்குத்தான் நான் போய் வர்றேன்னேன்....கேட்டாத்தானே....
அருள்: (தன் தந்தையைப் பார்த்து) கணக்கு தப்பா ஆனா என்ன? நாளைக்கு எச்சரிக்கையா இருக்க அது உதவுமில்லே? வீட்டிலே பூட்டி வெச்சா உலகம் எப்படித் தெரியும்? "படிப்பறிவைவிட பட்டறிவே மேலானதுன்னு நீங்க சொல்லித் தந்ததை நான் இன்னும் மறக்கலே....உங்க பேரன் பக்குவப்படறதுக்கு உங்க பாசம் இடையூறா இருக்கக் கூடாது.

காட்சி-2,
இடம்-கடை, சாலை, வீடு. மாந்தர்-பூங்குன்றன், கடைக்கு வந்த இருவர்.
பூங்குன்றன்: (கடைக்காரரைப் பார்த்து) வணக்கம்...இந்தாங்க சீட்டு...,இதிலே எழுதியிருக்கிற பொருளைக் கொடுங்க. அப்படியே சீட்டுல பொதினா 10ரூபா, பொட்டுக் கடலை, வெல்லம் 10 ரூபா எழுதிக்குங்க...
கடைக்காரர்: அப்படியே ஆகட்டும்! சீட்டிலேயே விலையைக் குறிச்சிடறேன்...,சரியா?
பூங்குன்றன்: ஒவ்வொரு பொருளையும் மாதிரி காட்டுங்க...தரமான பொருளா பார்ப்போம். எடையும் விலையும் சரியா இருக்குமில்லே..."புதினா' பழுப்பு இல்லாம இருக்கட்டும்...பொட்டுக் கடலை வெல்லத்தை ஒண்ணாவே கட்டுங்க....
கடைக்காரர்: தம்பி...,நீங்க கவலையே படாதீங்க...,ஞாயத்துக்கும் நேர்மைக்கும் பொறுப்புக்கும் பெயர் போனது எங்க கடை!...நீங்க யாரை வேணும்னாலும் கேட்டுப் பாருங்க...
பூங்குன்றன்: சரி, சரி,....எல்லாம் சரியா இருந்தா சரி.
கடைக்காரர்: தம்பி...,பொருள்களை எடுத்துக்குங்க...
பூங்குன்றன்: சீட்டிலே உள்ள பொருளைப் படிங்க...பொருள் சரியா என்று ஒப்பிட்டுப் பார்த்துக்கறேன். (ஒப்பிட்டுப் பார்த்தபின்) சரியா இருக்குங்க. எவ்வளவு ரூபா ஆகுதுங்க?
கடைக்காரர்: 365ரூபா ஆகுது தம்பி.
பூங்குன்றன்: இந்தாங்க 500 ரூபா.
கடைக்காரர்: பாக்கி 135 ரூபா...இந்தா தம்பி.
பூங்குன்றன்: முதலில் சீட்டைக் கொடுங்க....நான் ஒரு முறை கூட்டிப் பார்க்கிறேன்...(கூட்டிப் பார்த்துவிட்டு) தப்பா இருக்கு. 375 ரூபா வருது. நீங்க பத்து ரூபா குறைச்சுக் கூட்டியிருந்தீங்க. மீதி 125ரூபா கொடுங்க போதும். அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படக் கூடாதுன்னு ஆசிரியர் சொல்லியிருக்காரு.
கடைக்கு வந்தவர்:பையன் சின்னவனா இருந்தாலும் எவ்வளவு விவரமா இருக்கான் பாரு. பிள்'ளைன்னா இப்படித்தான் இருக்கணும்.
மற்றொருவர்:விவரம் மட்டுமில்லே....நேர்மையாகவும் இருக்கான் பாரு.' விளையும் பயிர் முளையிலே தெரியும்'என்பதை இவன் ஒரு பாடமாகவே நடத்திட்டுப் போறான்.

காட்சி-3,
இடம்-சாலை, வீட்டுத் தோட்டம், மாந்தர்-
பூங்குன்றன், மூதாட்டி, அருள், மகிழ்நன்.
(பூங்குன்றன் போகும் வழி. கடுமையான பசியில் மூதாட்டி ஒருவர் வருவோர் போவோரிடம் உதவி கேட்கிறார். யாருமே கண்டுகொள்ளவில்லை. அதைப் பூங்குன்றன் பார்க்கிறான். முடியாதவர்களுக்குத்தான் உதவணும். "பாத்திரமறிந்து பிச்சை இடு'என்பார்கள். பாட்டியை நோக்கிச் செல்கிறான்)

பூங்குன்றன்: பாட்டி பசிக்குதா?....
பாட்டி:ஆமப்பா...
பூங்குன்றன்:இதிலே பொட்டுக் கடலை வெல்லம் கலந்திருக்கு. முதலில் இதைச் சாப்பிடுங்க....கொஞ்ச தூரம் என்னோட வாங்க. இட்லிக் கடை இருக்கு. (கொஞ்ச தூரம் நடந்து இட்லி கடையை அடைந்ததும்)கடைக்காரரே...,இட்லி 5 ரூபாதானே....பாட்டிக்கு 5 இட்லி கொடுங்க....இந்தாங்க 25 ரூபா. (பாட்டியிடமிருந்து விடை பெற்றுக் கொள்கிறான். அவனைப் பாட்டி வாழ்த்துகிறாள்)
அருள்:ஏண்டா இவ்வளவு நேரம்?
(பூங்குன்றன் நடந்தவற்றைச் சொல்லக் கேட்டு)
மகிழ்நன்: இதுக்குத்தான் போறேன்னேன்.....பொட்டுக்கடலை போனாப் போகட்டும்....,25 ரூபா போயிருக்குமா?
அருள்: (தன் தந்தையைப் பார்த்து) அப்பா!....பணம் என்ன பணம்? நாம ஓடியாடி ஈட்டும் பொருளெல்லாம் தக்கார்க்குக் கொடுத்து உதவத்தானே. அவன் சரியானவருக்கு உசவி செய்யணும்னு கத்துக்கிட்டு வந்திருக்கிறான்...மூதாட்டியின் பசியைப் போக்கிவிட்டு வந்திருக்கிறான். அவனைப் பாராட்டாம திட்டறீங்க....
(பூங்குன்றனை அவன் தந்தை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தார்)

காட்சி-4
இடம்-பூந்தோட்டம். மாந்தர்-பூங்குன்றன், தாத்தா மகிழ்நன்.

பூங்குன்றன்: தாத்தா!....செடிகளுக்கு இன்னும் தண்ணீர் பாய்ச்சி முடிக்கலையா? உதவிக்கு நானும் வரட்டுமா?
மகிழ்நன்: வேலை இல்லேன்னா வா. இந்தக் குழாயைப் பிடித்துப் பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சு. குழாயிலே தண்ணீர் வேகமா வருது! தண்ணீர் வரும் வாய்ப்பகுதியிலே கையை வெச்சு தெளிச்ச மாதிரி விடு.
பூங்குன்றன்: ஏன் தாத்தா அப்படிச் செய்யணும்?
மகிழ்நன்: நீரைத் தெளிக்கிற மாதிரி விட்டா பத்துச் செடிகளுக்குப் பாய்ச்சலாம். தண்ணீரும் வீணாகாது. சரி...நீ தண்ணீர் தெளிச்சிக்கிட்டு வா. நான் பூக்களைப் பறிச்சுக்கிட்டு வரேன்.
பூங்குன்றன்: தாத்தா...,பூக்களின் முகத்தைப் பாருங்க....பச்சக் குழந்தைகள் சிரிக்கிற மாதிரி இல்லையா? அவற்றைப் பறிக்க உங்களுக்கு எப்படித் தாத்தா மனசு வருது?
மகிழ்நன்: பூக்களைப் பறிச்சா அந்தச் செடியிலே நாளைக்கு வேறே பூ பூக்கும். மக்கள் பயன்பாட்டுக்கு இயற்கை கொடுத்த கொடைதான் பூக்கள்! வழிபாட்டுக்குக்கூட பூக்களைப் பயன்படுத்தறதில்லையா? அப்படியே பறிக்காம விட்டாலும் அவை வாடி வதங்கி உதிர்ந்துதானே போகும்? அப்படியிருக்க அதைப் பறிச்சிப் பயன்படுத்தினால் என்ன தப்புய
பூங்குன்றன்: வாடி வதங்கி உதிர்ந்து போகும் என்பதற்காகப் பூக்களைப் பறிச்சிப் பயன்படுத்துறேன் என்பது அவ்வளவு சரியா தாத்தா? இது எப்படி இருக்குன்னா...,ஒரு கோழி வளர்க்கிறோம்...,எப்படி இருந்தாலும் அவை வயதாகிச் சாகத்தான் போகுது என்பதால் இப்பவே அதைக் கொன்று சாப்பிடுகிறேன் அதிலென்ன தப்பு? ...என்பது போல இருக்கு.
மகிழ்நன்: சரி....சரி...,இதைத் தொடர்ந்தால் முடிவில்லாமல் பேச்சு நீளும்....அதை விட்டுவிட்டு எடுத்த வேலையைப் பார்ப்போம்.
பூங்குன்றன்: தாத்தா...,இந்த ரோஜாப் பூவிலே தேனி தேன் எடுக்கும் அழகைப் பாருங்களேன்....பூவைச் சுத்தி நிறைய முட்கள். ஆனாலும் முள்ளிலே குத்திக்காம தேனீ என்ன நேர்த்தியா தேன் எடுக்குது பாருங்க...
மகிழ்நன்: அது மட்டுமில்லே....அதுல நாம கத்துக்க வேண்டிய உயர்ந்த கல்வியும் இருக்கு...
பூங்குன்றன்: என்ன அது சொல்லுங்களேன்...
மகிழ்நன்: வாழ்க்கைங்கிறது இன்பமும், துன்பமும் நிறைஞ்சது. இன்பம் பெறணும்னா துன்பத்தைக் கடந்துதான் ஆகணும். வாழ்க்கை என்பது ஒரு ரோஜாச் செடி. முள்ளும் இருக்கும்....மலரும் இருக்கும்...அதில் சுரக்கும் தேன்தான் நாம் தேடும் இன்பம்....சுற்றியிருக்கிற முட்களைக் குத்திக்காம தேனெடுக்கிற தேனீதான் நாம....முட்களைக் குத்திக்காம தேனெடுப்பது எப்படி என்பதை நாம தேனீயிடமிருந்து கத்துக்கணும்....
பூங்குன்றன்: அருமை...அருமை!

காட்சி-5
இடம்-காய்கறித்தோட்டம், மாந்தர்-பூங்குன்றன், மகிழ்நன்.

பூங்குன்றன்: தாத்தா....,அப்பா புடலங்கொடிக்குப் பந்தல் போட்டிருக்காரே...., பார்த்தீங்களா?....சுருண்டிருக்கிற புடலங்காய் நுனியிலே ஒரு சின்ன கயிற்றைச் சுருக்குப் போட்டு ஒரு முழம் இடைவெளியிலே சின்னதா ஒரு கல்லைக் கட்டித் தொங்க விட்டிருக்கிறாரே....அது ஏன்?
மகிழ்நன்: அதுவா? சுருண்டிருக்கிற புடலங்காயை நாம கையாலே நிமிர்த்த முடியாது. அப்படி நிமிர்த்த முயன்றால் அது ரெண்டா முறிஞ்சிடும். அப்பா செய்திருக்கிற மாதிரி செய்தால் நாளடைவில் கல்லின் எடையாலே கொஞ்சம் கொஞ்சமா கோணலும் நிமிரும். புடலங்காயும் நீண்டு வளரும்.
பூங்குன்றன்: தாத்தா....இதிலேயும் ஏதோ ஒரு கருத்து மறைஞ்சிருக்கிற மாதிரி தெரியுது....மனசிலே இருக்கு....ஆனா உங்களைப் போல சரியா சொல்லத் தெரியலே...
மகிழ்நன்: எங்கே....நீயே முயன்று பாரு...சரியா சொல்லத் தெரியலேன்னா குற்றமில்லை....
பூங்குன்றன்: (சிறிது சிந்தனைக்குப் பின்) ‘அடங்காத முரட்டுப் பையனை அறிவுரையால் நாளடைவில் திருத்த முடியும்' என்பதோடு ஒப்பிடலாமா?
மகிழ்நன்: மிக மிகச் சரி....எங்கே....ஒப்புமை படுத்திக் காட்டு....
பூங்குன்றன்: அடங்காத முரட்டுப் பையன்தான் சுருண்டிருக்கிற புடலங்காய்!...உருட்டி, மிரட்டி அவனைத் திருத்த முயற்சிப்பது புடலங்காயைக் கையால இழுப்பது போல!...அப்படிச் செய்தால் புடலங்காயைப் போல அவனும் பயனற்றுப் போவான். அணுகுமுறை என்ற மென்மையான நூலைக் கட்டி, அறிவுரை என்ற கல்லை அதிலே இணைத்து நாள்தோறும் முயற்சித்தால் புடலங்காய் கோணல் அகன்று நிமிர்ந்து நீண்டு வளர்வது போல அவனும் முறையா வளர்ந்து வாழ்விலே நிமிர்வான். இது சரியா தாத்தா?
மகிழ்நன்: (கையைத் தட்டிப் பாராட்டுகிறார்) மிக மிக அருமை. சின்ன வயசிõலேயே உனக்குப் பெரிய அறிவு. உன் அறிவு இந்த உலகின் வளர்ச்சிக்கு உதவட்டும். வாழ்க.
பூங்குன்றன்: தாத்தா!....காலையிலே அப்பா சொன்னதுபோல புத்தகத்துக்கும் வெளியே நான் படிக்க வேண்டியது நிறைய இருக்கு...!

சின்னமணல்மேடு த.இராமலிங்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com