அரங்கம்: எல்லாம் நானே!

சார்...,நான் ஐந்தாம் வகுப்பிலே "காட்டு ராஜா'ங்கற நாடகத்திலே "முயலா' நடிச்சேன்....
அரங்கம்: எல்லாம் நானே!

காட்சி-1
இடம்-உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் 
குமரன் அறை
மாந்தர்-குமரன், செந்தில், மாணவர்கள். 

(பள்ளி ஆண்டுவிழாவில் மாணவர்கள் பங்கேற்கும் நாடகம் போட  ஏற்பாடு. குமரன், விருப்பமுள்ள மாணவர்களைத் தன் அறைக்கு அழைக்கிறார்.)

வேலன்: சார்...,நான் ஐந்தாம் வகுப்பிலே "காட்டு ராஜா'ங்கற நாடகத்திலே "முயலா' நடிச்சேன்....
பூபதி: நான் ஏழாம் வகுப்பிலே "சிங்கமா'வே நடிச்சேன்....
ரமணி: நான் கட்டபொம்மனா நடிச்சேன்....
சேகர்: நான் கதை எழுதுவேன்.... நாடகமும் எழுதத் தெரியும்.

(குமரன் பொறுமையாகக் கேட்கிறார்)

செந்தில்: நான் எழுதுவேன்...,நடிப்பேன்...,நடத்துவேன்....நாடக வேலை எல்லாமும் நானே செய்வேன்...! 
(அவனை வியப்போடு பார்க்கிறார்)
குமரன்: முன் அனுபவம் இருக்கா?
செந்தில்: இருக்கு....!
குமரன்: "சர்க்கஸ்'லே ஒருத்தர் ஏழெட்டுப் பந்தைக் கையிலே வெச்சுக்கிட்டு ஒண்ணுகூட கீழே விழாம வித்தை காட்டுவார். அதற்குப் பயிற்சிதானே காரணம்....,கவனத்தை ஒரே இடத்திலே குவிக்கிறதுதானே காரணம்!....நாடகம் பல பேரோட கூட்டு முயற்சி...
செந்தில்: எல்லாம் நானே கவனிப்பேன்....தேவைன்னா இவங்களைக் கூப்பிடறேன்.... வாய்ப்பை எனக்குக் குடுங்க....செஞ்சு காட்டறேன்....

(அவர் சிலவற்றை அவனிடம் கேட்கிறார். "தெரியும்....முடியும்' என்று பதில் சொல்கிறான்.)
குமரன்: சரி தம்பி...,நீ இவ்வளவு சொல்றதாலே சம்மதிக்கிறேன்...திறமை உள்ள மாணவர்களையும் சேர்த்துக் கொள். என்ன உதவின்னாலும் கேளு. 
செந்தில்: (தயக்கத்தோடு) சரி சார். 
குமரன்: கவனம்...! ஆண்டு விழா...,கேலிக்கு உள்ளாகக் கூடாது....,திட்டமிட்டு வேலையைத் தொடங்கு....ரெண்டு தடவை நாடகப் பிரதியைக் கொண்டு வந்து காட்டு.

காட்சி-2

இடம்-குமரன் அறை
மாந்தர்-குமரன், மாணவர்கள். 

(சேகர் என்ற மாணவன் குமரனிடம் வருகிறான்)
சேகர்: செந்திலிடம் நாடகப் பொறுப்பைத் தந்தீர்களே....
குமரன்: எல்லாம் நல்லா முடிச்சிருப்பானே....விழா நெருங்குது...நாடகக் குழுவோடு இங்கே வரச்சொல்.....நான் பார்க்கணும்....
சேகர்: நீங்க வேறே சார்....! அவனை வந்து பாருங்க...,நாடகத்துக்கான் பொருளோட வீட்டிலே சோர்ந்து போய்க் கிடக்கிறான்....காய்ச்சல் அடிக்குது.

(அவர் உடனே புறப்படுகிறார்)

காட்சி-3

இடம்-செந்தில் வீடு
மாந்தர்-குமரன், செந்தில், பெற்றோர், 
மருது, ரமேஷ்.

(பெற்றோர் செந்திலை அறையிலிருந்து கூடத்துக்குக் கைத்தாங்கலாக அழைத்து வருகிறார்கள். குமரனையும், மாணவர்களையும் கண்ட அவன் நெஞ்சு படபடக்கிறது)

தாய்: ஒரு வாரமா பைத்தியம் பிடிச்சவன் மாதிரி இருந்தான். கடைக்கு ஓடினான்....அட்டை, ஜிகினா..., கம்பு..., கத்தி...., கிரீடம் வாங்கினான்..... மொட்டை மாடிக்கு ஓடி வசனம் பேசினான்....
தந்தை: ராத்திரியெல்லாம் சரியா தூங்கவே இல்லே....
குமரன்: அதெல்லாம் அப்புறமா பேசலாம்....முதல்லே டாக்டர் கிட்டே அழைச்சிட்டுப் போறோம்...

காட்சி-4

இடம்-செந்தில் வீடு
மாந்தர்-குமரன், பெற்றோர், செந்தில்,
மாணவர்கள்.

(செந்திலை வீட்டிற்குக் கொண்டு வந்து விடுகிறார்கள்)
செந்தில்: என்னை மன்னிச்சிடுங்க சார்....
குமரன்: (முதுகில் தட்டிக் கொடுக்கிறார்)....கவலைப்படாதே....,உடம்பை முதலில் கவனி....உடம்பு எந்திரம் இல்லே....அது ஓரளவு வேலைகளைத்தான் தாங்கும்....அடுத்த ஆண்டு உன்னோட நாடகம் நடக்கும்....நல்லா திட்டமிடலாம்....நாங்களும் உதவியா இருப்போம்! (செந்திலின் கண்கள் கலங்குகின்றன) ....நீ நல்லா குணமடைஞ்சு ஆண்டு விழாவிற்கு வந்திடு.....(செந்தில் அவருடைய பெருந்தன்மையைக் கண்டு வியப்படைகிறான்)

காட்சி-5

இடம்-பள்ளி, குமரன் அறை
மாந்தர்-குமரன்,மருது,ரமேஷ்.

(அவர்கள் பள்ளிக்குத் திரும்புகிறார்கள்)

குமரன்: நாடகம்னு சொன்னதும் தலைமையாசிரியர் விவரம் கேட்டார்..., நல்லவிதமா நடத்தறோம்னு சொன்னேன்....இப்படி ஆயிடுச்சே.....
மருது: மருது....ஒண்ணும் ஆகலே சார்....
குமரன்: (வியப்போடு) என்ன சொல்றே?....
மருது: செந்திலோட ஆர்வத்தைப் பற்றி எனக்குத் தெரியும்....எல்லாத்தையும் நான் ஒருத்தனே செய்வேன்னு முழங்குவான்.....இது பேராசைதான் எதார்த்தத்துக்கு ஒத்து வருமா?.....ஒண்ணையும் உருப்படியா செய்ய முடியாது....ஏதாவது ஒரு விஷயத்திலே கவனம் செலுத்தினா அது நல்ல விதமா முடியும்....இது முன்பே நீங்க எங்களுக்குச் சொன்னது....
குமரன்: உன்னோட நினைவாற்றலுக்கு மகிழ்ச்சி....நாடகம்?.....
மருது: நீங்க நாடகப் பிரதியை செந்திலிடம் வாங்கிய அன்றைக்கு...,பார்த்திட்டுத் தர்றேன்னு வாங்கினேன்....அதை நான் நகல் எடுத்துட்டேன்...."எதுக்கும் நீ கவனமா
இரு.... எனக்கு நிறைய வேலை இருக்கு'ன்னு சொன்னீங்க....செந்தில் பொறுப்பு ஏற்று ஒரு வாரம் ஆச்சு....எல்லாத்துக்கும் அவன் ஒருத்தனே அலைஞ்சான்...யாரையும் கூப்பிடலே....அவனே எல்லாத்தையும் செஞ்சு பேர் வாங்கணும்னு ஆசை....! 
ரமேஷ்: எறும்பு குண்டூசியைத் தூக்கலாம்....,இரும்புக் குண்டைத் தூக்க ஆசைப்படலாமா?....குண்டூசியைத் தூக்க விரும்பினாலும் நாலு எறும்புத் துணையோடதான் தூக்கும்....இதுவும் நீங்க சொன்ன பொன்மொழிதான். 
மருது: நிலைமை புரிஞ்சு போச்சு....நாங்க நாடக வேலையிலே இறங்கிட்டோம்....

(குமரனுக்கு மிகுந்த வியப்பு ஏற்படுகிறது)

ரமேஷ்: பள்ளிக்குப் புதுசா வந்தானே குறும்புக்கார தங்கராசு....அவனோட அப்பா ஒரு காலத்திலே நாடகம் போட்டவராம்....அழைச்சிக்கிட்டு வந்தான். நல்லா உதவி செஞ்சார்! 
மருது: வேலையை பத்துப் பேருக்குப் பிரிச்சுக் கொடுத்தோம்.
குமரன்: எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு....நாடகம் இப்போதே என் மனசிலே ஓடுது....."எல்லாம் நானே'ங்கறது ஆர்வக் கோளாறு! எதுவும் உருப்படியா நடக்காது. குழப்பம்தான் மிஞ்சும்.....திறமையுள்ளவர்களை ஒருங்கிணைச்சு, அரவணைப்பதுதான் நல்லது...அதுதான் நல்ல நிர்வாகமும் கூட!....அந்தத் திறமை உங்களிடம் இருக்கு....என் பாராட்டுகள்! 

(அவர்களுடைய முதுகில் தட்டிக் கொடுக்கிறார்)
திரை
பூதலூர் முத்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com