கதைப் பாடல்: பாட்டி சொன்ன கதை!

குட்டி பொண்ணு சித்ராதூக்கமின்றி புரண்டாள்!-"நீயேன்
கதைப் பாடல்: பாட்டி சொன்ன கதை!

குட்டி பொண்ணு சித்ரா
தூக்கமின்றி புரண்டாள்!-"நீயேன்
தூங்க வில்லை இன்னும்?''
என்று பாட்டி கேட்டாள்.

"இல்லை பாட்டி'' என்ற சித்ரா
பாட்டி யிடம் வந்தாள். - "கதை 
சொல்லி என்னை நீயும் தூங்க 
வைப்பாய் பாட்டி'' என்றாள்!

"கதையைக் கேட்டு சமர்த்தாய் நீ 
தூங்க வேண்டும்...சரியா?''
என்று பாட்டி சொன்னாள்.
"சரி''என்று சொன்னாள் சித்ரா! 

மடியில் படுத்த பேத்தியின் 
தலையைக் கோதி விட்டாள்.
மனதிலிருந்த கதை தனை 
மறந்திடாமல் சொன்னாள்!

"பானை செய்யும் குயவனொருவன்
மண்ணைத் தோண்டச் சென்றான்
மண்ணைத் தோண்டும் போதில்-அழகு
"ஜாடி' ஒன்றைக் கண்டான்!

மூடியோடு மிக அழகாய் 
இருந்த தந்த ஜாடி! 
மூடி திறந்து பார்த்தான்!-ஒரு 
பூதம் வெளியில் வந்தது!

வெளியில் வந்த பூதம்...
"உன்னைத் தின்பேன்' என்றது.-குயவன்
வெலவெலத்துப் போனான்!
மனதில் நடுக்கம் கொண்டான்!

"உனக்கு எந்தத் தீங்கும்
செய்ததில்லை நானும்....
...என்னை எதுவும் செய்யாதே...'
....என்று கெஞ்சிக் கேட்டான்!

"பசியில் வாடிக்கிடக்கிறேன்....
எனக்கு வேறு வழியில்லை.....-உனைத் 
தின்றே பசி ஆறுவேன்'-என
உரக்கக் கூறிச் சிரித்தது!....
திகைப்படைந்த குயவனின் 
சிந்தனையில் "பளிச்'சென்று 
எண்ணம் ஒன்று தோன்றவே
புன்னகையும் பிறந்தது!

"நீ பூதமென்று சொல்கிறாய்....
உந்தன் உருவம் பெரியது...
இந்த ஜாடி சிறியது...
...இதற்குள் எப்படி வந்தாய்?'...

....என்று குயவன் கேட்டான்...
பூதம் அவனைப் பார்த்து,
"நான் மாய வித்தை கற்றவன்...-என்
சுட்டு விரல் அசைவில்....

...சுழலும் பூமி நிற்கும்....
பெரிய உருவம் எடுப்பேன்...மிகச் 
சிறிய உருவும் எடுப்பேன்-அதைச் 
செய்து உனக்குக் காட்டவா?'

என்ற பூதம் உடனே 
சிறியதாகி மீண்டும் 
ஜாடிக்குள்ளே புகவும்....
...விழித்துக் கொண்ட குயவன்

"நல்ல சமயம்' இதுதான் 
என்று எண்ணி "சட்'டென 
மூடியைத் தான் எடுத்து
ஜாடிதனை மூடினான்! 

மாட்டிக் கொண்ட பூதத்தை
மண்ணில் புதைத்து விட்டான்! 
மன நிம்மதியைக் கொண்டான்!
மகிழ்ச்சியோடு சென்றான்!

தீமை செய்யும் யாருக்கும்
தீயவை பின் தொடரும்!
நன்மை செய்வோர் அனைவரும் 
நலத்தை அடைவர் நிச்சயம்!

என்று கதையை முடித்தாள் -பாட்டி
கதையை ரசித்தாள் சித்ரா!-கண்கள் 
சொக்கித் தூங்கிப் போனாள்!-பாட்டி
மனதில் நிறைவு கொண்டாள்!

-ஜி.சுந்தரராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com