கருவூலம்: கடலூர் மாவட்டம்!

சிறப்புகள் பல கொண்ட புகழ்பெற்ற சைவத்தலம்! பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாயஸ்தலம். 275 பாடல் பெற்ற சிவத்தலங்களில் முதன்மையானது!
கருவூலம்: கடலூர் மாவட்டம்!

புகழ் பெற்ற பழமையான ஆலயங்கள்!

சிதம்பரம் நடராஜர் ஆலயம்!
சிறப்புகள் பல கொண்ட புகழ்பெற்ற சைவத்தலம்! பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாயஸ்தலம். 275 பாடல் பெற்ற சிவத்தலங்களில் முதன்மையானது! நடராஜருக்குரிய ஐந்து அம்பலங்களில் "பொன்னம்பலம்' ஆகும்! சிவபெருமானின் நடனங்களில் ஆனந்தத் தாண்டவம் நிகழ்ந்தது இங்குதான்! சைவக்குரவர் நால்வராலும் பாடல் பெற்ற தலம்! பக்தி இலக்கிய நூல்களில் இத்தல இறைவனைப் பற்றிய பாடல்கள் பல உள்ளன. 
 திருமந்திரம் அருளிய திருமூலரும், யோக சாஸ்திரத்தை முறையாக வகுத்துக் கொடுத்த "பதஞ்சலி' முனிவரும், புலிக்கால் முனிவர் எனப்பட்ட "வியாக்கிர பாதரும்' வணங்கிய புண்ணியத் தலம்! 
 இந்த ஆலயத்திலிருந்துதான் மன்னர் ராஜராஜ சோழர்..., திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் பாடிய திருமுறைப்பாடல்களை பெரும் முயற்சி செய்து வெளியே கொண்டு வந்தார். பின்னர் அவற்றை நம்பியாண்டார் நம்பி துணையுடன் தொகுத்தும் கொடுத்தார்!
 
கோயிலின் அமைப்பு
 இன்று சிதம்பரம் என்று அழைக்கப்படும் இந்நகரத்திற்கு முன்பு பெரும்பற்றப் புலியூர் என்ற பெயரே இருந்தது. கோயிலின் பெயரே சிதம்பரம்! காலப்போக்கில் ஆலயத்தின் பெயரே ஊரின் பெயராக மாறிப்போனது! 
 40ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த ஆலயம் (சில தகவல்களில் 30ஏக்கர் என்றும் உள்ளது) சேர, சோழ, பாண்டிய, பல்லவ, விஜய நகரப் பேரரசு மன்னர்களால் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு 7நிலைகளைக் கொண்ட 4 ராஜ கோபுரங்கள் உள்ளன. 135அடி உயரம் கொண்ட கோபுரத்தில் 40அடி உயரத்தில் கோபுர வாசல் அமைக்கப்பட்டுள்ளது! அடிப்பகுதி 90அடி நீளமும், 60அடி அகலமும் கொண்டது. 
 ஐந்து பிரகாரங்கள் உள்ள இந்த ஆலயம் மனித உடலின் அமைப்பை சூட்சுமமாக விளக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது! 
 இங்குள்ள ஆயிரங்கால் மண்டபம் சிற்பக்கலைக்கும், கட்டடக் கலைக்கும் பெயர் பெற்றது. இதனை நிபுணர்கள் கட்டடக் கலையின் அற்புதம் என்று புகழ்கின்றனர்.
 அக்காலத்திலேயே இந்தக்கோயிலின் உட்பகுதியில் விழும் மழை நீரை பூமிக்கு அடியில் நிலவறைக்கால்வாய் அமைத்து அருகில் உள்ள தில்லைக் காளியம்மன் கோயில் குளத்தில் சேர்க்கும் வகையில் அமைத்துள்ளனர்! 
 மன்னர் பாராந்தகச் சோழர் (907-950) இங்குள்ள சிற்றம்பலத்திற்கு தங்க ஓடு கொண்டு கூரை வேய்ந்துள்ளார்! 

திருச்சித்திரக்கூட கோவிந்தராஜன் கோயில்!
 இந்தக் கோயிலுக்குப் பல சன்னதிகள் உள்ளன. அதில் கனகசபைக்கு அருகில் உள்ள திருச்சித்திரக்கூடத்தில் அமைந்த கோவிந்தராஜன் கோயில் வைணவர்களின் 108திவ்ய தலங்களில் ஒன்றாகும்!
 
நாட்டியாஞ்சலி!
 இங்கு ஆண்டுதோறும் "நாட்டியாஞ்சலி' என்னும் நாட்டிய விழா நடைபெறுகிறது. இதில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பரத நாட்டியக் கலைஞர்கள் வந்து நாட்டியமாடி தங்கள் கலையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்றனர். 
 இந்த ஆலயம் 2000ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றதாகக் கருதப்படுகிறது! ஆனால் சங்க இலக்கிய நூல்களில் (கி.மு. 3 முதல் கி.பி. 4 வரை) இந்த ஊரைப்பற்றியோ, ஆலயம் பற்றியோ தகவல்கள் இல்லை. அதன்பின் வந்த பக்தி இலக்கிய நூல்களில்தான் உள்ளது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம்!
 இந்த ஆலயத்தின் தலபுராணம், காசியைவிட புண்ணியம் மிக்கது என இத்தலப் பெருமையைக் கூறுகிறது. ஆலயம் 660அடி நீளமும், 390அடி அகலமும் கொண்டது. சுற்றிலும் 26அடி உயர மதிற்சுவரும், 4 ராஜகோபுரங்களுடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. தேவாரப் பாடல் பெற்ற தலம்! கோயில் உட்புறச் சுவற்றில் 73 நடன நிலைகளைக் கொண்ட மிக அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. 
 2014இல் ஆஸ்திரேலியப் பிரதமர் "டோனி அபாட்' இந்திய வருகையின் போது மத்திய அரசிடம் ஒரு அர்த்தநாரீஸ்வரர் சிலையை ஒப்படைத்தார். அந்தச் சிலை இந்தத் திருக்கோயிலுக்கு உரியதுதான்! 
 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த சுவாமி சிலை இங்கிருந்து திருடு போனது. பின்னர் அது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள "நியூ செüத் வேல்ஸ்' அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. பல முயற்சிகளுக்குப்பின் அச்சிலையினை இந்திய அரசிடம் ஒப்படைத்தனர்.

மேலக்கடம்பூர் அமிர்த கடேஸ்வரர் கோயில்!
 கி.பி. 1110இல் மன்னர் முதலாம் குலோத்துங்க சோழரால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அற்புதமான அழகிய கோயில் இது! தமிழகத்தில் இந்த ஆலயம் மட்டுமே "கரக்கோயில்' எனப்படும் தேர் வடிவினாலான கோயில்! 
 இந்த சிவாலயம் 6ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே இருந்தது. அதனை தேர் வடிவிலான அமைப்பில் மாற்றிக் கட்டியது குலோத்துங்க சோழர்! 
 கருவறை குதிரைகள் இழுத்துச் செல்லும் தேர் போன்ற அமைப்பில் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. கருவறையின் வெளிப்புறச் சுவரில் 5 தேவகோட்டங்கள் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன. 
 இக்கோயில் தலபுராணப்படி இறைவனை "பல யுகங்களிலும் தேவர்கள், சித்தர்கள், சூரியசந்திரர் என பலரும் இங்கு வந்து தரிசனம் செய்துள்ளனர். அந்நிகழ்வுகள் சிற்பமாக வடிக்கப்பட்டதுடன், அந்தந்த சிற்பங்களின் கீழ் அவற்றினைப் பற்றிய தகவல்களும் எழுத்து வடிவில் பொறிக்கப்பட்டுள்ளன. எண்ணிலடங்கா சிற்பங்களும், பல உள் சன்னதிகளும் கொண்ட இவ்வாலயம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்!

தசபுஜ ரிஷப தாண்டவ மூர்த்தி சிலை!
 இச்சிலை வங்காளத்தின் கலை வடிவம்! காளையின் மீது பத்து கரங்களிலும் ஆயுதம் ஏந்தி சிவன் நடனமாட, அவர் பாதத்தின் அருகில் தேவர்கள் சூழ்ந்திருப்பது போன்று மிகவும் அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது! 
 இந்தச் சிலையினை முதலாம் ராஜேந்திர சோழர் (1021 - 1023) வங்காளத்திற்குப் படைதிரட்டிச் சென்று போரிட்டபோது கொண்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது! 

வடலூர் சத்திய ஞான சபை!
 இச்சபை வள்ளலார் எனப் போற்றப்படும் இராமலிங்க அடிகளால் தோற்றுவிக்கப்பட்டது. 
1872இல் இச்சபை எண்கோண வடிவில் அமைக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தை வள்ளலாரே ஆன்ம தத்துவத்தை சூட்சுமமாக விளக்கும் வகையில் வடிவமைத்துள்ளார். இதனைச் சுற்றி வந்து வணங்குகையில் மனதில் அலாதியான அமைதி சூழ்வதை உணரலாம். "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்றவரின் சிந்தனையில் உருவான ஆலயத்தில் உள்ள அணையா விளக்கு புகழ் வாய்ந்தது! 
 
 இவற்றைத் தவிர பல்லவ மன்னர் மகேந்திர வர்மனால் கட்டப்பட்ட திருவதிகை சிவன் கோயில், திருப்பாதிரிப் புலியூர் பாடலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல பழமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளன. 

மேலும் சில தகவல்கள்!
 28ச.கி.மீ. பரப்பளவு கொண்ட வீராணம் ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றின் கீழணையிலிருந்து வடலாறு என்று அழைக்கப்படும் வடக்கன் கால்வாய் வழியாக காவிரி ஆற்றின் நீர் வருகிறது. மேலும் இங்கிருந்து சென்னைக்கு "புதிய வீராணம் திட்டத்தின்' மூலம் நீர் செல்கிறது. 
 எமினேரி என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படும் "வெலிங்டன் ஏரி' 1918இல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது.
விருத்தாசலத்திற்கு 2கி.மீ. தொலைவில் உள்ள கொளஞ்சியப்பர் கோயில் எனப்படும் முருகர் ஆலயத்தில் "பிராது கட்டுதல்' என்னும் வழக்கு பதிவு செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது. அதாவது மக்கள் தங்கள் வாழ்க்கையின் பிரச்னைகளை காகிதத்தில் எழுதி இறைவனை நீதிபதியாகக் கருதி சமர்ப்பிக்கிறார்கள். இதனை கொளஞ்சியப்பரே நேராக ஆராய்ந்து தீர்த்து வைப்பதாக நம்பப்படுகிறது. வெளியூர் மக்களும் இங்கு வந்து தங்கள் குறைகளை எழுதி வைக்கிறார்கள். 
 கடலூர் மாவட்டத்தில் தமிழ் மன்னர் கட்டிய ஆலயங்களும், அழகிய கடற்கரைப் பகுதியும், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் அடையாளமாய் இருக்கும் கட்டடங்களும் மிகவும் உணர்வு பூர்வமானவை! என்றும் நினைவில் நிற்பவை! 
(நிறைவு)
தொகுப்பு: கே. பார்வதி, திருநெல்வேலி டவுன்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com