நல்ல தீர்ப்பு!

காட்டுக்கு ராஜாவாக இளம் சிங்கராஜா முடிசூடிக்கொண்ட சில தினங்களில் ஒரு விசித்திரமான வழக்கு ஒன்று வந்தது. கரடி ஒன்று தான் தேன் சேகரித்து
நல்ல தீர்ப்பு!

காட்டுக்கு ராஜாவாக இளம் சிங்கராஜா முடிசூடிக்கொண்ட சில தினங்களில் ஒரு விசித்திரமான வழக்கு ஒன்று வந்தது. கரடி ஒன்று தான் தேன் சேகரித்து வைக்கும் தங்க சொம்பை நரிக்கு இரவல் கொடுத்ததாகவும் திருப்பிக் கேட்டபோது, தான் தங்க சொம்பை வாங்கவே இல்லை என பொய் சொல்வதாகவும் தன் தங்க சொம்பை நரியிடமிருந்து வாங்கித் தரும்படியாகவும் பொய் சொன்ன நரிக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் புகார் கொடுத்திருந்தது. அதற்கு நரி கரடியின் தங்க சொம்பை தான் வாங்கவே இல்லை என்றும் கரடி தன் மீது அபாண்டமாக பொய் புகார் கொடுத்துள்ளது என்றும் வாதாடியது.

இருவரில் ஒருவர் பொய் சொல்கின்றனர் என புரிந்துகொண்ட இளம் சிங்கராஜா ஆளுக்கு ஒன்றாக இரண்டு நாவல்பழக் கொட்டைகளைக் கொடுத்து சிறிய மண் தொட்டியையும் கொடுத்து இருவரும் இந்த விதைகளை தண்ணீர் ஊற்றி முளைக்க வைக்க வேண்டும். யாருடைய நாவல்பழக் கொட்டை முளைவிட்டு துளிர்க்கவில்லையோ அந்த நபர்தான் பொய் சொல்பவர். ஒருமாதம் கழிந்த பின் வரும்படியாகவும் இரண்டு பேரையும் அனுப்பி வைத்தது சிங்கராஜா.

ஒரு மாதம் சென்ற பின் குறிப்பிட்ட நாளில் கரடியும், நரியும் இளம் சிங்கராஜாவை காண தொட்டிகளோடு வந்தன. கரடி கொண்டு வந்த தொட்டியில் நாவல்பழ விதை துளிர்த்து இருந்தது. நரி கொண்டுவந்த தொட்டியில் உள்ள விதை துளிர்க்கவில்லை.

கரடிக்கு ரொம்ப சந்தோஷம். நரி மட்டும் கவலையோடு நின்றது. இளம் சிங்கராஜாவின் நல்ல தீர்ப்பை அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்க நாவல்
பழக் கொட்டை துளிர்த்துள்ள தொட்டியைக் கொண்டு வந்த கரடி தான் பொய் சொல்கிறது என தீர்ப்பளித்தது. "தாங்கள் என்னிடம் தந்த நாவல்பழக் கொட்டைதான் துளிர்த்து இருக்கிறது. நான் எப்படி குற்றவாளி ஆவேன்? நரியிடம் தந்த நாவல்பழக் கொட்டை தான் துளிர்க்கவில்லை. எனவே நரிதான் பொய் சொல்கிறது என்றும் வாதாடியது'' அதற்கு இளம் சிங்கராஜா "கரடியே... ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் சொல்வதில் நீர் ரொம்ப சிறந்தவர். நான் இருவருக்கும் தந்த நாவல் பழ விதைகள் வறுக்கப்பட்ட விதைகளாகும். வறுக்கப்பட்ட விதைகள் முளைப்பதே இல்லை, விதைகள் முளைக்காததால் வேறு ஒரு விதையை முளைக்க வைத்து கொண்டு வந்து நானே குற்றவாளி என நன்றாகவே தானே உணர்த்திவிட்டீர்'' எனச் சொல்ல, பேந்த பேந்த விழித்த கரடி வேறு வழி தெரியாமல் தான் பொய் சொன்னதையும், வேறு நாவல்பழக் கொட்டையைத் துளிர்க்க வைத்து கொண்டு வந்ததையும் ஒப்புக்கொண்டது. சிங்கராஜா கரடிக்கு பத்து தங்க சொம்பை அபராதமாக நரிக்கு கொடுக்க வேண்டும் என்றும், நரியிடம் மன்னிப்பும், இனிமேல் பொய் பேச மாட்டேன், பிறர்மீது அபாண்டமான குற்றச்சாட்டைச் சொல்ல மாட்டேன் என்றும் உறுதிமொழி எடுக்க கட்டளையிட அதன்படியே செய்தது கரடி.

இளம் வயதில் மூத்த புலி அமைச்சரின் உதவி இல்லாமல் நல்ல தீர்ப்பை வழங்கிய இளம் சிங்கராஜாவை அனைவரும் பாராட்டினர்.

-எஸ். டேனியல் ஜுலியட்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com