கடமைகள்!

நான் என்ன தட்டு கழுவுறவனா?....நீ ஒன்பதாம் வகுப்பு...,நான் எட்டு...,அதெல்லாம் பள்ளியிலேதான்...நீ வேணும்னா என் தட்டையும் சேர்த்துக் கழுவு!
கடமைகள்!

காட்சி - 1

இடம் - வீடு
மாந்தர் - இலட்சுமி, ரமணி, முரளி.

(தாய் இலட்சுமிக்குக் காய்ச்சல்....படுக்கையில் இருக்கிறாள்....-பிள்ளைகள்.... ரமணி, ஒன்பதாம் வகுப்பு, முரளி, எட்டாம் வகுப்பு....-....மாலை பள்ளி முடிகிறது. திடலில் விளையாடியபின் வீட்டுக்கு வருகிறார்கள்.....இலட்சுமியின் கட்டிலுக்கு அருகில் வந்து நிற்கிறார்கள்)

இலட்சுமி: கால், கை கழுவியாச்சா?....(கழுவுகிறார்கள்)......வேலை செய்யற அமுதா சமைச்சாங்க....உணவு நேரத்தில் வந்ததா?......எப்படி இருந்தது?....முரளி, கேரட், பீட்ரூட் இல்லேன்னா உனக்கு சாப்பாடு இறங்காதே.....(அக்கறையோடு கேட்கிறாள்....இருவருக்கும் ஆரஞ்சு கொடுக்கிறாள்)
ரமணி: அம்மா, உங்களுக்கு உடம்பு எப்படியிருக்கு? 
இலட்சுமி: நல்லா இருக்கு....கவலைப்படாம பாடத்தைப் படிங்க....

(அவர்கள் படிக்கிறார்கள்---சற்று நேரத்தில் முரளி தொலைக்காட்சியை ஒலி இல்லாமல் பார்க்கிறான். உணவு நேரம். பசிக்கிறது....---இலட்சுமி நன்றாக இருந்தால் உணவு இந்நேரம் அவர்களைத் தேடி வந்திருக்கும்)

ரமணி: வா!....வேறே வழியில்லே....நாம்தான் தட்டை எடுத்துத் தேவையானதைப் போட்டுக்கணும்....
முரளி: நான் சமையற்கட்டுப் பக்கம் போனதே இல்லை....தாகம்னாக்கூட அம்மாவைத்தான் கூப்பிடுவேன்!
ரமணி: நான் மட்டும் என்ன....அம்மா ஏதாவது தின்பண்டம் செய்வாங்க....அப்போ எட்டிப் பார்ப்பேன்.

(தட்டில் சோற்றைப் போட்டுக்கொள்கிறார்கள்....கீழே பருக்கைகள் சிந்துகின்றன.....உண்டபின் தட்டிலேயே கையைக் கழுவுகிறார்கள்)

ரமணி: முரளி, உன் தட்டைக் கழுவும்போது என் தட்டையும் சேர்த்துக் கழுவி விடு!
முரளி: நான் என்ன தட்டு கழுவுறவனா?....நீ ஒன்பதாம் வகுப்பு...,நான் எட்டு...,அதெல்லாம் பள்ளியிலேதான்...நீ வேணும்னா என் தட்டையும் சேர்த்துக் கழுவு!
ரமணி: நான் மட்டும் தட்டுக் கழுவுறவனா?....அப்பா கலெக்டர்....,நான் கலெக்டர் வீட்டுப் பிள்ளை!....அதிலும் பெரியவன்!....,நீ சின்னவன்! நீ ரெண்டு தட்டையும் கழுவினா என்ன? 
முரளி: நானும்தான் கலெக்டர் வீட்டுப் பிள்ளை! நான் மட்டும் எதுக்குக் கழுவணும்?....என் தட்டையே நான் கழுவ மாட்டேன்!....இதிலே உன் தட்டையும் சேர்த்துக் கழுவ எனக்கு என்ன பைத்தியமா?....

(இருவரும் வெளியே வந்து கைகளைக் கழுவுகிறார்கள்.....கழுவாத தட்டுகள் சிந்திய பருக்கைகள் அப்படியே கிடக்கின்றன.....-வாசலில் கார் வரும் ஒலி. தந்தை மதிவாணன் வருகிறார்)

காட்சி - 2

இடம் - வீடு
மாந்தர் - மதிவாணன், இலட்சுமி, 
ரமணி, முரளி. 

(மதிவாணன் உள்ளே வந்து காலணியைக் கழற்றுகிறார். கழுத்துப்பட்டை(டை)யை உரிய இடத்தில் மாட்டுகிறார்.....உடைகளை மாற்றுகிறார்....-பிள்ளைகள் அமைதியாகப் படிப்பதைப் பார்க்கிறார்)

மதிவாணன்: இன்றைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு! ரொம்பப் பதவிசா, அமைதியா இருக்கீங்க....,இந்தப் பழத்தை எடுத்துக்கங்க....

(வாங்குகிறார்கள்.....முன்பு அமர்ந்த இடத்துக்குப் போகிறார்கள்.....அவர் இலட்சுமியின் அறைக்குச் செல்கிறார்) இலட்சுமி..., உடம்பு பரவாயில்லையா...,மாத்திரை நேரத்தில் போட்டியா?....மருந்தைக் குடிச்சியா?....

இலட்சுமி: வெந்நீர் வேணுங்க....இந்த வேளைக்கு மாத்திரை போடணும்....(சமயலறைக்குப் போகிறார்....தட்டுகள் கழுவாமல் கிடப்பதைப் பார்க்கிறார். சிந்திய பருக்கைகளைப் பார்க்கிறார்.)
மதி: (தனக்குள்) வேலை பார்க்கிற அலுவலகம், மேற்பார்வை செய்யற இடம் எல்லாம் சுத்தமா இருக்கணும்னு சொல்றேன்., வீடு இப்படி இருக்கே.....

(அடுப்பைப் பற்ற வைத்து வெந்நீர் போடுகிறார். உணவைக் கொடுத்து மாத்திரையையும், வெந்நீரையும் தருகிறார்....,மீண்டும் சமையலறைக்குப் போகிறார். தட்டுகளைக் கழுவுகிறார். பருக்கைகளை எடுக்கிறார். தரையைத் துடைக்கிறார்....- அலுவலக ஊழியர்களுக்கு அவர் வீட்டு வேலைகளைத் தருவதில்லை. அது அவருடைய கொள்கை! ஒர் ஆட்சித் தலைவர் எச்சில் தட்டைக் கழுவுவதைப் பிள்ளைகள் விந்தையாகப் பார்க்கிறார்கள். இரவு உணவுக்குப்பின் படுக்கச் செல்கிறார்கள்.)

காட்சி - 3

இடம் - வீடு
மாந்தர் - ரமணி, முரளி, மதிவாணன், 
இலட்சுமி.

மறுநாள் காலை....ரமணிக்கும், முரளிக்கும் தேநீர் மேசையில் தேநீர் (மூடியுடன்) பிஸ்கெட்! 
........ரமணியும், முரளியும் பல் தேய்க்கிறார்கள்.......
......மதிவாணன் கழிவறை "பேசினை' சுத்தம் செய்வதைப் பார்த்து அவர்கள் திகைக்கிறார்கள்! 
அவர்....,இலட்சுமிக்கும், அவர்களுக்கும் உணவு ஏற்பாடு செய்துவிட்டு அலுவலகம் புறப்படுகிறார்.)
.....எரிச்சலையோ கோபத்தையோ எவரிடமும் காட்டாமல் தனக்கான கடமைகளில் மட்டும் அவர் கவனத்தைச் செலுத்தியது அவர்களைச் சிந்திக்க வைக்கிறது!
.........."எந்தப் பணியில் இருந்தாலும் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் கடமைகளில் உயர்வு தாழ்வு பார்க்காமல் அவற்றைச் செய்பவர் பெரியவர்!.....
.....செய்யும் தொழிலைத் தாழ்வாகவும் இழிவாகவும் நினைப்பவர்....,வீட்டுக் கடமைகளில் உதவியாக இல்லாதவர் சிறியவர்!' என்ற எண்ணம் அவர்களுடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிகிறது. 
 இருவரும் கூடத்துக்கு வந்து அங்கிருந்த காந்தியின் படத்துக்கு முன்னால் ஒரு நிமிடம் அமைதியாக நிற்கிறார்கள்....!

காட்சி - 4

இடம் - வீடு
மாந்தர் - இலட்சுமி, ரமணி, முரளி.

(இருவரும் தாய் இலட்சுமி இருக்கும் இடத்திற்குப் போகிறார்கள்.)

ரமணி: அம்மா!....ஏதாவது தேவையா?
முரளி: நாங்க லீவு போட்டுட்டு உங்களைப் பார்த்துக்கறோம்மா....
இலட்சுமி: அதெல்லாம் வேண்டாம்....., ஒரு நாள் பள்ளிக்குப் போகலேன்னாலும் அன்றைக்கு நடத்தின பாடம் புரியாது....போங்க....
ரமணி: வரும்போது மருந்து மாத்திரை வாங்கணுமா?...
முரளி: பால் பாக்கெட்....மாவு பாக்கெட் வேணுமா?
இலட்சுமி: (முகம் மலர்ந்து) நீங்க இவ்வளவு தூரம் அக்கறையா கேக்கறதே எனக்கு மகிழ்ச்சியா இருக்கு.....நீங்க சாயங்காலம் வரும்போது நான் பழையபடி நடமாட ஆரம்பிச்சிடுவேன்....

(அவர்கள் மகிழ்ச்சியோடு புறப்பட்டுப் போகிறார்கள்)

திரை
பூதலூர் முத்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com