பிகுள்!

பல ஆண்டுகளுக்கு முன்னர், பிகுள் என்ற ஓர் அழகான இளம்பெண் இருந்தாள். ஊர் மக்கள் வியந்து போற்றும் அளவுக்கு அன்புள்ளம் கொண்டவளாக இருந்தாள். 
பிகுள்!

பல ஆண்டுகளுக்கு முன்னர், பிகுள் என்ற ஓர் அழகான இளம்பெண் இருந்தாள். ஊர் மக்கள் வியந்து போற்றும் அளவுக்கு அன்புள்ளம் கொண்டவளாக இருந்தாள். 
பிகுள், சிறுமியாக இருந்தபோதே அவளது தாயார் இறந்துபோனார்.  எனவே அவள் சித்தியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தாள். சித்திக்கு, ஏற்கனவே மாலி என்ற ஒரு மகள் இருந்தாள். அம்மாவும் மகளும் பொல்லாதவர்களாக இருந்தார்கள். இருவரும் சேர்ந்து பிகுளை துன்புறுத்தி வந்தார்கள். தினமும், கடினமாக வேலைகளைச் செய்யச்சொல்லி கட்டாயப் படுத்தினார்கள். 
 ஒருநாள், பிகுள் அரிசியைப் புடைத்து குருணையை நீக்கும் பணியைச் செய்து முடித்திருந்தாள். அதன்பிறகு, சித்தியின் கட்டளையின்பேரில் வீட்டிக்கு அருகில் ஓடும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவரச் சென்றாள். திரும்பி வரும் வழியில், ஒரு வயதான மூதாட்டியைச் சந்தித்தாள். அவர், நீண்ட தூரத்திலிருந்து கால்நடையாக வருவதாகச் சொன்னார். களைப்பாகவும் இருப்பாதால் தொண்டை வரண்டிருப்பாதவும் சொன்னார். தாகத்தைத் தணிக்க தண்ணீர் தரும்படியும் கேட்டார். 
 வயதான பாட்டிக்கு உதவுவதை, பெரும் பாக்கியமாகக் கருதிய பிகுள், மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். குடிக்க தண்ணீர் கொடுத்து உதவியதோடு, முகத்தையும் கால்களையும் சுத்தம் செய்துகொள்ளும்படிக் கேட்டுக்கொண்டாள். 
 வயதான பெண்மணி புன்னகை செய்தபடி பிகுளை வாழ்த்தினார்! 
"நீ, அழகானவள் மட்டுமல்ல....,கருணையுள்ளம் கொண்டவள்....,என்னிடம் அன்போடு நடந்துகொண்டாய்!'' என்று புகழ்ந்த மூதாட்டி, மனம் உவந்து பிகுளுக்கு ஒரு வரத்தை அளித்து விட்டு மெல்ல மறைந்து போனாள்! 
 அதன்படி, யாரைப் பார்த்து பிகுள் அனுதாபப்பட்டு பேசுகிறாளோ, அப்போதெல்லாம் அவளது வாயிலிருந்து தங்கத்தாலான ஒரு மகிழம்பூ வெளிவரும். (பிகுள் என்பதற்கு தாய்லாந்து மொழியில் மகிழம் பூ என்று பொருள்)

தாமதமாக வீடு திரும்பிய பிகுள், சித்தியிடம் திட்டு வாங்கவேண்டிய நிலைமை உருவானது. வீட்டு வேலை செய்வதை விட்டுவிட்டு, ஆற்றங்கரையில் நேரத்தைக் வீணாக்கிவிட்டாள் என்ற சந்தேகம் சித்திக்கு எழுந்தது. 
சித்தி சொன்ன புகாரை ஏற்க மறுத்த பிகுள், மிகவும் பணிவோடும் பரிவோடும் ஆற்றங்கரையில் நடந்த கதையை எடுத்துச்சொல்லி விளக்கினாள். அதே நேரத்தில், சித்தி அங்கு ஓர் அதிசயம் நிகழ்வதைப் பார்த்தார். பிகுள் பேசப்பேச அவளது வாயிலிருந்து நிறைய தங்க மலர்கள் வெளியே வந்து விழுந்தன! 
சித்தியின் மனநிலை சட்டென்று மாறிப்போனது. கடுங்கோபத்தோடு பேசிய சித்தி, தங்க மலர்களைப் பார்த்தவுடன் நயந்து பேசத்தொடங்கினார். தங்க மலர்களை மொத்தமாக எடுத்துக்கொண்ட சித்தி, பேராசை கொண்டவராக, பிகுளை தொடர்ந்து பேசச்சொல்லி வலியுறுத்தினார். 
 சித்தியைத் திருப்திப்படுத்துவதற்காக, பிகுள் நீண்டநேரம் எதையோ பேசியபடியே இருந்தாள். 
 அன்று முதல், பிகுள் பேசியபோதெல்லாம் கிடைத்த தங்க மலர்களை சேகரித்து, சந்தையில் விற்று நிறைய பணம் சம்பாதித்தார் சித்தி!

 தொடர்ந்து பல மாதங்கள், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். கடுமையான வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்லி பிகுளை கட்டாயப் படுத்தவில்லை! ஆனால், நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கும்படி கட்டளை பிறப்பித்தார். பிகுள் பேசப்பேச, வாயிலிருந்து வெளியேறிய தங்க மலர்களை சேகரிப்பதில் தீவிரம் காட்டினார் சித்தி. 
 நாள் முழுக்க தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த பிகுள், இறுதியில் மிகவும் சோர்வடைந்தாள். தொண்டை வரண்டுபோய் பேசமுடியாத நிலை உருவானது.! அவளால் ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை! ஆனால், அவளைப் பேசச்சொல்லி கட்டாயப் படுத்தினார் சித்தி. பணத்தாசை பிடித்த சித்தி பிகுளை அடித்துத் துன்புறுத்தினார். 
பேராசைகொண்ட சித்தி, வேறொரு முடிவுக்கு வந்தார். தனது சொந்த மகள் மாலியை அழைத்து, பிகுள் சென்றுவந்த அதே ஆற்றில் தண்ணீர் கொண்டுவர அனுப்பி வைத்தார். ஆனால், மாலி அங்கு சென்றவுடன் வயதான மூதாட்டிக்குப் பதிலாக ஓர் அழகான பெண்ணைச் சந்தித்தாள். 
தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பிய வழியில் நின்றுகொண்டிருந்த அந்தப் பெண், குடிக்கத் தண்ணீர் கேட்டாள்.அவளது அழகைக்கண்டு பொறாமையடைந்த மாலிக்கு கோபம் வந்தது. தான் சந்தித்தித்த பெண் தேவதை இல்லை என்று தீர்மானித்து, தாகம் தணிக்கத் தண்ணீர்தர மறுத்து விட்டாள். மேலும், கடுமையான வார்த்தைகளால் அவளைத் திட்டினாள்! 
 அவள் ஒரு தேவதை என்பது மாலிக்குத் தெரியவில்லை. மாலியின் வார்த்தைகளைக் கேட்டு கோபமடைந்த தேவதை அவளைச் சபித்துவிட்டு மறைந்தாள். அதன்படி, மாலி கோபமடைந்து பேசும்போதெல்லாம் வாயிலிருந்து பூச்சிகள் வெளியேரும். 
வீடு திரும்பியதும், மாலி தன் தாயிடம் ஆற்றங்கரையில் நடந்த முழுக் கதையை விவரித்துச் சொன்னாள். அழகான அந்தப் பெண் செய்த துரோகத்தைச் சொல்லி கோபமடைந்தாள். மாலி கடுமையாகப் பேசி முடித்தவுடன் வீடு முழுவதும் பூச்சிகள் நிறைந்து இருந்தன!
 நடந்த எல்லாவற்றுக்கும் காரணம் பிகுள்தான் என்றும், அவளது வேண்டுதலின் பேரிலேயே வயதான மூதாட்டி மாலியைச் சந்திக்கவில்லை என்றும் தவறாக நினைத்த சித்தி, அவளை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார். 
 மிகுந்த கவலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய பிகுள் தன்னந்தனியாக காட்டை நோக்கி நடந்து சென்றாள். அதிர்ஷ்டவசமாக, தனது வீரர்களுடன் காட்டில் குதிரை சவாரி செய்துகொண்டிருந்த ஓர் இளவரசனைச் சந்தித்தாள். காட்டில் தனியே அழுதுகொண்டிருந்த இளம் பெண்ணைப் பார்த்த இளவரசன், அவள்மீது இரக்கப்பட்டு உதவ முன்வந்தான். அவளிடம் நடந்தவை பற்றிய முழுக் கதையைக் கேட்டறிந்தான். மனம் உருகினான். 
பிகுள் பேசி முடித்தவுடன், காட்டைச் சார்ந்த ஒரு பகுதி நிலம் முழுவதும் தங்க மலர்களால் நிரம்பிப்போனது. கடைசியில் அவளது அனுமதிபெற்று, இளவரசன் பிகுளை  திருமணம் செய்துகொண்டான். மனைவியுடன் நாடு திரும்பிய இளவரசன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அரியணையை ஏற்று நாட்டு மக்கள் போற்றும் அளவுக்கு சிறப்பாக ஆட்சி செய்தான். 
தாய்லாந்து நாட்டுக் கதை
தமிழில் : கொ.மா.கோ.இளங்கோ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com