ஹலோ பாட்டியம்மா!

"வள்ளல் சீதக்காதியின் வாழ்க்கையில் நடந்தவற்றை இன்றைக்குக் கதையாக சொல்கிறேன்..!'' என்று கூறிவிட்டுக் கதையை ஆரம்பித்தார் பாட்டியம்மா..! 
ஹலோ பாட்டியம்மா!

"வள்ளல் சீதக்காதியின் வாழ்க்கையில் நடந்தவற்றை இன்றைக்குக் கதையாக சொல்கிறேன்..!'' என்று கூறிவிட்டுக் கதையை ஆரம்பித்தார் பாட்டியம்மா..! 
"மவ்லா சாகிப்-சய்யிது அகமது நாச்சியார் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள்; அவர்களில் நடுப்பிள்ளை சீதக்காதி. பரம்பரையாகயாகவே அவர்கள் குடும்பம் பணக்கார குடும்பம். சொந்தக் கப்பல் மூலம் பர்மா, மலேசியா போன்ற நாடுகளில் பண்டங்களை ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரம் செய்வது அவர்களின் தொழில்.

கொடை உள்ளம் அவர்களின் உடன் பிறந்த குணம். ஊரில் உள்ளவர்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றாலும், வறுமை என்றாலும் சீதக்காதியின் அப்பா தங்கக்காசுகள் கொடுத்து உதவுவார். அப்பா இல்லாத நேரங்களில் ஊர் மக்கள் வந்து, சீதக்காதியின் அண்ணனிடம் தங்கள் கஷ்டங்களைக் கூறிப் பணம் பெற்றுச் செல்வார்கள். 

அப்போது, சீதக்காதிக்கு ஏழு அல்லது எட்டு வயசு இருக்கும். ஒருநாள், பை நிறைய தங்கக் காசுகளை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டார். வழியில் வரும் மனிதர்கள் யாராவது தன்னிடம் கஷ்டங்களைக் கூறினால் உடனே ஒரு தங்கக்காசு கொடுத்துவிட வேண்டும் என்ற முடிவோடு ஒவ்வொரு தெருவாக நடந்தார்.

சிறுவனாக இருந்த சீதக்காதியிடம் யாரும் தன் கஷ்டங்களைக் கூறவில்லை. காரணம்... சிறுவனிடம் பணம் இருக்காது என்று மக்கள் நினைத்தார்கள். சீதக்காதி ஏமாற்றத்துடன் திரும்பினார். வழியில் ஒரு பெரிய தோப்பு இருந்தது. அங்கே நிறைய ஆமணக்கு செடிகள் இருந்தன. அந்த ஆமணக்கின் இலைகள் எல்லாம் கைவிரல்களை விரித்து, தன்னிடம் கை நீட்டுவதுபோல் சீதக்காதிக்குத் தோன்றியது. உடனே, மகிழ்ச்சியடைந்த சீதக்காதி, ஒவ்வொரு இலையிலும் ஒரு தங்கக் காசை வைத்தார். இப்படியே எல்லா ஆமணக்கு இலைகளிலும் காசை வைத்ததும் பை காலி..! கடைசியாக இருந்த ஆமணக்கு செடிக்கு வைப்பதற்கு காசு இல்லை. "கோவிச்சுக்காதே... உனக்கு நாளைக்குத் தர்றேன்..!'' என்றார். அந்த நேரம் பாத்து லேசா காத்து அடிக்கவும் இலைகள் மேலும் கீழும் ஆடுச்சு. அவை எல்லாம் "சரி... சரி...''ன்னு தலையாட்டுதுன்னு நினைச்சி... சீதக்காதி சந்தோஷப்பட்டார். 

மறுநாள்...காலை...! விறகு பொறுக்கவும், பூக்கள் பறிக்கவும் வந்த ஜனங்கள் ஆமணக்கு இலைகளில் இருந்த தங்கக் காசுகளையும், காற்றில் கீழே விழுந்துகிடந்த காசுகளையும் பார்த்து ஆச்சரியம் அடைந்தார்கள். இதுபோல், தினமும் தங்கக்காசுகளை வைத்துக்கொண்டிருந்தார் சீதக்காதி. மக்களுக்கும் தினமும் தங்கக்காசு கிடைத்தது.  ஒருநாள்... அதைக் கண்ட சீதக்காதி, "மக்கள் கேட்டால்தான் உதவி செய்யவேண்டும்' என்று இதுவரை நினைத்து இருந்ததற்காக வருந்தினார். "இனி... யாரும் கேட்காமலே கொடுக்கவேண்டும்' என்று முடிவு செய்தார்.

மற்றொரு நாள்... தெருவில் ஒரு சிறுமி வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். இதைக்கண்ட சீதக்காதி, "எதற்காக கோலம் போடுகிறாய்?'' என்று கேட்டார். "வாசல் அழகாக இருப்பதற்கு... அத்தோடுகூட... இதில் உள்ள அரிசி மாவு... எறும்புகள்... சிறு சிறு பூச்சிகள்... உண்பதற்கு உதவும்!'' என்றாள் சிறுமி. "அப்படியா... இனிமேல், உன் வீட்டுக்கு மாதம் ஒரு மூட்டை அரிசி மாவு கொடுக்கிறேன்...'' என்று வாக்கு கொடுத்தார். அறியாத வயதில் கொடுத்த அந்த வாக்கை... ஆயுள் முழுவதும் நிறைவேற்றினார். 

சீதக்காதி, இளைஞராக இருந்தபோது, ஒருமுறை... நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது, தண்டோரா போட்டு மக்களை அழைத்து... உணவு அளித்து, உதவிகள் செய்தார். 

"செத்தும் கொடுத்தார் சீதக்காதி' என்பதை விளக்குவதற்குப் பல கதைகள் சொல்லப்படுகிறது. அதில் இதுவும் ஒன்று: சீதக்காதி மரணம் அடையும் நேரத்தில், தன் அருகில் இருப்பவர்களிடம் கூறினார்,"என்னைப் புதைக்கும் இடத்தில்... அழகு படுத்துகிறேன் என்று சொல்லி... மண்டபம் கட்டி... சுவர்கள் வைத்து... மறைக்க வேண்டாம்...! புழு, பூச்சிகள், ஆடு, மாடுகள்... உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களுக்கும் பயன்படும் வகையில் என் கல்லறை திறந்த வெளியாக இருக்கட்டும்..!'' என்றார்''. (மே-23 ஆம் நாள் "உலக பல்லுயிரினங்கள் தினம்').           
-ரவிவர்மன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com