கருவூலம்: திருச்சிராப்பள்ளி மாவட்டம்!

திருச்சியின் அடையாளமாகத் திகழ்கிறது மலைக்கோட்டை! காவிரியின் தென்கரையில் சுமார் 273 அடி உயரம் உள்ள குன்றும்,
கருவூலம்: திருச்சிராப்பள்ளி மாவட்டம்!

சென்ற இதழ் தொடர்ச்சி......
பழமையான வழிபாட்டுத் தலங்கள்!
மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில்!
திருச்சியின் அடையாளமாகத் திகழ்கிறது மலைக்கோட்டை! காவிரியின் தென்கரையில் சுமார் 273 அடி உயரம் உள்ள குன்றும், அதைச் சுற்றிக் கட்டப்பட்ட கோட்டையும் கொண்டதால் மலைக் கோட்டை எனப் பெயர் பெற்றது! 
இக்குன்றில் உள்ள பாறைகள் சுமார் 3400 மில்லியன் வருடங்கள் பழமையானவை எனக் கருதப்படுகின்றன.  உலகின் மிகமிகப் பழமையான ஏழு பாறைகளில் இதுவும் ஒன்று!  இமயமலையைவிடப் பழமையானதாம்!
பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மன் காலத்தில் இக்குன்றில் முதன்முதலில் குகைக்கோயில்கள் (குடைவரை கோயில்கள்) வடிவமைத்தனர். 
இக்கோயில்கள் பின்னர் விஜயநகரப் பேரரசர்களாலும், மதுரை நாயக்கர்களாலும் மேம்படுத்தப்பட்டது! 
மலையைச் சுற்றிலும் உள்ள கோட்டையை விஜயநகரப் பேரரசுக்குக் கட்டுப்பட்டிருந்த காலத்திலேயே நாயக்க மன்னர்கள் உருவாக்கினர். அதனை நன்கு புனரமைத்து வலுப்படுத்தினர். 
இம்மலையின் மூன்று நிலைகளில் மூன்று கோயில்கள் உள்ளன. மலையின் உச்சியில் புகழ்பெற்ற உச்சிப் பிள்ளையார் கோயில்...,இந்த கோயிலுக்குச் செல்வதற்கு அக்காலத்திலேயே 417 படிகள் பாறையிலேயே செதுக்கி உருவாக்கியுள்ளனர்.
மலை உச்சிக்கு ஏறும் பாதையில் பாதியில் அமைந்துள்ளது தாயுமானவ சுவாமி கோயில் என்று அழைக்கப்படும் சிவன் கோயில்! இந்த பெரிய ஆலயம் குடைவரை கோயிலாக பாறையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சந்நிதியும் உள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில்!
  108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது! புராணச்சிறப்பு மிகுந்த பழைமையான ஆலயம்!  பஞ்சரங்கக் கோயில்களில் ஒன்று! இந்துக் கோயில்களில் மிகப் பெரியது! 
  இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஆலயம் இருந்ததாக சங்க இலக்கிய நூல்களிலும், சிலப்பதிகாரத்திலும் கூறப்பட்டுள்ளது. இப்போதுள்ள  கோயில் பிற்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. 
 ஏழு  பிரகாரங்கள் கொண்ட இக்கோயிலின் வெளிப்புற சுற்றுச் சுவர் 950 மீ நீளமும், 856 மீ அகலமும் கொண்டது. 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஆலயத்தில் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் உள்ளன. சுற்று மதில்களில் 21 கோபுரத்துடன் கூடிய வாசல்கள் இருக்கின்றன. 
  மையத்தில் தெற்கு நோக்கி ஸ்ரீஅரங்கநாதர் சன்னதி உள்ளது.   மேலும் 54 உப சன்னதிகளும் உள்ளன. சன்னதியைச் சுற்றி உட்புறம் உள்ள 4 பிரகாரங்கள் கோயில் சார்ந்தும், அவற்றிற்கு வெளிப்புறம் உள்ள 3 பிரகாரங்கள் வீடுகள், தெருக்கள் என ஒரு முழு நகரமாகவே உள்ளன. 
  கோயிலின் பிரதான வாயிலாகிய தெற்கு வாசல் கோபுரம், 400 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப் பெறாமல் இருந்தது. பின்னர் இக்கோபுரம் 1989 இல் தான் கட்டி முடிக்கப்பட்டது. 13 நிலைகள், 13 கலசங்கள், 236 அடி உயரம் கொண்ட இக்கோபுரம்தான் தென்னிந்தியாவின் மிகப் பெரிய கோபுரம்!
  கி.பி.1311ஆம் ஆண்டிலும்,....1323ஆம் ஆண்டிலும் இருமுறை அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் காபூர் தென்னிந்தியாவைப் படையெடுத்து சூறையாடினார். இதனை முன்னரே அறிந்து கொண்டவர்கள் இக்கோயிலின் உற்சவ மூர்த்தியை திருப்பதி கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்தனர். 1371இல்தான் மீண்டும் கொண்டு வரப்பட்டது!
மற்றும் ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் இந்த ஆலயத்தில்தான் "கம்பர்' தன் ராமாயண காவியத்தை அரங்கேற்றம் செய்தார்! (வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோயிலைப் பற்றி ஏராளமான தகவல்கள் உள்ளன. ஓர் அருங்காட்சியகமும் இக்கோயிலில் உள்ளது!)

திருவானைக்காவல் ஜம்பு கேஸ்வரர் கோயில்!
  தேவாரப்பாடல் பெற்ற ஆலயம்! பஞ்ச பூதத் தலங்களில் நீருக்கான ஆலயம்!  18 ஏக்கர் பரப்பில், நீண்ட உயரமான மதில்கள், நான்கு திசைகளிலும் கோபுரங்கள், ஐந்து பிரகாரங்கள், பல அரிதான, மிக அழகிய  சிற்பங்கள் கொண்ட மிகப் பெரிய கோயில்! 

துறையூர் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்!
  பெருமாள் மலையின் மேலே 960அடி உயரத்தில் உள்ள இந்த ஆலயம் கரிகால்சோழனின் பேரன்களில் ஒருவரால் இக்கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள தசாவதார மண்டபத்தில் இசைத் தூண்கள் உள்ளன. இந்தத் தூண்களை தட்டினால் ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு விதமான இசை வரும்! 
  இவற்றைத் தவிர திருக்கரும்பனூர் உத்தமர்கோயில், குணசீலம் வெங்கடாசலபதி கோயில், திருப்பைஞ்சீவி ஸ்ரீ நீலி வனேஸ்வரர் கோயில், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருப்பத்தூர் பிரம்மா கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில் மற்றும் நாச்சியார் கோயில் உள்ளிட்ட பல புகழ்பெற்ற பழமையான ஆலயங்கள் உள்ளன. 

லூர்து மாதா தேவாலயம்!
  1840 இல் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தில் செயின்ட் இக்னேஷியஸ், புனித பிரான்ஸிஸ் சேவியர், செயின்ட் ரிட்டோ ஆகியோரின் சிலைகளுடன் புனித புனிதமான இதயத்தின் சிலையும் உள்ளது!
  இதன் பிரதான கோபுரம் 220 அடி உயரமும், சிறிய கோபுரம் 120 அடி உயரமும் கொண்டது. 

செயின்ட் லூயிஸ் சர்ச்!
  செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் உள்ள 1812 இல் கட்டப்பட்ட  தேவாலயம் இது! 200 மீ. உயரம் கொண்ட இதன் கோபுரம் 8 கி.மீ. சுற்றளவுக்கு எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்! 

புகழ் பெற்ற தர்காக்கள்!
  இம்மாவட்டத்தில் உள்ள நாதர்வள்ளி தர்காவும், காஜாமலை குன்றில் உள்ள இஸ்லாமிய சூஃபி துறவி "க்வாஜா சையத் அஹமத் ஷா அவுலியா' அடக்கம் செய்யப்பட்ட இடமும் பழமையான இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களாகும்!

மேலும் சில சுற்றுலாத் தலங்கள்!
 வண்ணத்துப் பூச்சி பூங்கா!
  ஆசியாவின் மிகப் பெரிய வண்ணத்துப் பூச்சிப் பூங்கா ஸ்ரீரங்கத்தில்  அமைக்கப்படுகிறது. 35 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படுகின்ற இந்தப் பூங்கா அடுத்த ஆண்டுதான் முழுமை பெற்றுத் திறக்கப்படவிருக்கிறது. 
  ஆனாலும் இப்பொழுதே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அழகான பூந்தோட்டம், நீரூற்று, பெரிய கண்ணாடி  வீடு, நட்சத்திர வனம் என பல வசீகரமான அம்சங்களுடன் உருவாக்கப்படும் இப்பூங்கா முக்கொம்பில் இருந்து 7கி.மீ. தூரத்தில் உள்ளது. 

ராணிமங்கம்மாள் கொலு மண்டபம்!
சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்ட மலைக்கோட்டைக்கு அருகே உள்ள அரண்மனையில் ஒரு பகுதிதான் இக்கொலு மண்டபம்.  இதனை 1700 இல் அவருடைய மனைவி ராணி மங்கம்மாள் கட்டினார்! தற்போது இம்மண்டபம் அருங்காட்சியகமாக உள்ளது!

ரயில்வே ஹெரிடேஜ் சென்டர்!
  இந்த மையம் திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே உள்ளது! 2014 இல் தொடங்கப்பட்ட இம்மையத்தில், அக்காலத்தில் ரயில் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட விளக்குகள், மணிகள், கடிகாரங்கள் போன்ற பலவகையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 
 மேலும் 9500 ச.அடி பரப்பில் அமைந்துள்ள இம்மையத்தில் ஆங்கிலேயர் காலத்திய துறை சார்ந்த புத்தகங்கள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களும் கூட காட்சிப்படுத்தப்பட்டுள்ளது! முன்னர் பயன்படுத்திய இரண்டு ரயில் என்ஜின்களும் பார்வைக்கு உள்ளன. 
  சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் சிறுவர் ரயிலும் இயக்கப்படுகிறது!

மேலும் சில தகவல்கள்!
கல்வெட்டில் சிராமலை அந்தாதி!
  மலைக்கோட்டையில் உள்ள குடைவரை கோயிலில் சிராமலை அந்தாதியின் 104 பாடல்களும் கல்வெட்டாக உள்ளது. கல்வெட்டெழுத்தில் கிடைத்துள்ள முதல் முழு இலக்கியம் சிராமலை அந்தாதிதான்! 

காஜாமலை அண்ணா ஸ்டேடியம்!
  31.25 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஸ்டேடியத்தில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் 400 மீ.  ஓட்டப்பத்தயப் பாதை, நீச்சல் குளம், கால்பந்து, கூடைப்பந்து, மற்றும் ஹாக்கி மைதானங்கள், ஜிம்னாஸ்டிக் அரங்கம் என பல வகையான விளையாட்டிற்கான போட்டிகளும் பயிற்சிகளும் நடைபெறும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

காவேரி பாலம்!
  இம்மாவட்டத்தில் உள்ள முசிறிக்கும், கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை நகருக்கும் இடையில் காவிரியின் குறுக்கே ஒன்றரை கி.மீ. நீளத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இதுவே தமிழகத்தின் ஆற்றுப் பாலங்களில் மிக நீளமானது. 

ஸ்வஸ்திக் கிணறு!
  திருவெள்ளறையில் உள்ள பெருமாள் கோயிலில் ஒரு பெரிய ஸ்வஸ்திக் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் ஸ்வஸ்திக் சின்ன வடிவில் நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் உள்ளன. இங்கு ஒரு பக்கம் படிக்கட்டில் இறங்குபவரை மற்ற பக்கங்களில்  உள்ளவர் பார்க்க முடியாது!
பல வகைகளிலும் சிறப்பு மிக்க மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரம் ஒவ்வொருவரும் சென்று சில நாட்களாவது தங்கியிருந்து பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒரு நகரம்! காவிரி பாயும் இந்த மாவட்டம் ஆன்மிக வளமும், வரலாற்று பெருமையும் தொழில் வளமும் கொண்டது!
(முற்றும்)
கே. பார்வதி , திருநெல்வேலி டவுன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com