நம்பிக்கை!

நாராயண!....நாராயண!....துறவியாரே! எப்போது முதல் ஜபத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்? 
நம்பிக்கை!

அரங்கம்

காட்சி - 1
இடம் - காடு,  ஒரு "திவ்ய செளகந்திகா' மரத்தடி
 மாந்தர் - நாரதர்,  ஒரு துறவி.

(துறவி ஒருவர் ஒரு திவ்ய செளகந்திகா புஷ்ப மரத்தின் அடியில் கிருஷ்ணனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்கிறார். நாரதர் அங்கு வருகிறார்.)

நாரதர்: நாராயண!....நாராயண!....துறவியாரே! எப்போது முதல் ஜபத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்? 
துறவி:  வணக்கம் தேவ ரிஷியே...! தங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி!  கடந்த பல ஆண்டுகளாக நான் இப்படி ஜபம் செய்தபடி இருக்கிறேன்.... பகவானை நேரில் காண ஆசையாய் இருக்கிறது! அது வரை இந்த ஜபத்தைக் கைவிட மாட்டேன்! 
நாரதர்: நான் இப்போது பாற்கடலுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன்....பகவானிடம் சொல்வதற்கு உங்களிடம் ஏதாவது செய்தி உண்டா? ....சொல்லுங்கள் துறவியாரே!
துறவி: அப்படியா? மிக்க மகிழ்ச்சி! ஒரு சிறிய உதவி!....,  எப்போது பகவான் எனக்குக் காட்சி தரப்போகிறார்?....எப்போது எனக்கு மோட்சம் கிடைக்கும்  என்பதைக் கேட்டு வந்து சொல்லுங்கள் தேவரிஷியே!.....அது போதும் எனக்கு!
நாரதர்: நாராயண!....நாராயண! அப்படியே செய்கிறேன்.....சரி...., விடை கொடுங்கள்!
(செல்கிறார்)

காட்சி - 2
இடம் - அதே காடு,  மற்றொரு திவ்ய செளகந்திகா 
மரத்தடி.  
மாந்தர்- நாரதர், கோவிந்ததாஸ்.

(வேறு ஒரு  திவ்ய செளகந்திகா புஷ்ப மரத்தின் அடியில் வந்து சேரும்  ஒரு விவசாயி.  பெயர் கோவிந்த தாஸ்.   "கிருஷ்ணா!'  என்று ஒரே ஒரு முறை கூறுகிறான்.  தனது மண்வெட்டியை எடுத்துக் கொண்டு வயலுக்குச் செல்லும்போது.....,  நாரதர் அவனைப் பார்க்கிறார்.  கோவிந்த தாஸýம் நாரதரைப் பார்க்கிறான்! திகைக்கிறான்! நாரதரை நோக்கிக் கைகளைக் கூப்பியபடி)
கோவிந்த தாஸ்: வணக்கம் நாரதரே! என் பெயர் கோவிந்த தாஸ்! சிறு விவசாயி!  உங்களை தரிசித்தது எனது பாக்கியம்! 
நாரதர்: எனது ஆசிகள்! நான் மூவுலகின் சஞ்சாரி! என்னிடமிருந்து ஏதேனும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? என்னாலானதைச் செய்கிறேன்!
கோவிந்ததாஸ்: கண்டிப்பாக!.... பகவான் மகா விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற வேண்டும்,..... அவரது அருளைப் பெற வேண்டும்! பிறவித் தளைகளிலிருந்து நான் விடுபட வேண்டும்.... எனக்கு மோட்சம் கிட்ட வேண்டும் ...... அவ்வளவுதான்!
நாரதர்: சரிதான்! எத்தனையோ பேர் ஆண்டாண்டு காலமாக ஜபமும், தவமும் செய்கின்றனர். நீங்களோ ஒரே ஒரு முறை கிருஷ்ணனின் நாமத்தை உச்சரித்தீர்கள்!  அது போதும் என்று நினைக்கிறீர்களா?
கோவிந்த தாஸ்: மன்னிக்க வேண்டும் நாரதரே! என்ன செய்வது?....ஏதோ கிருஷ்ணனை ஒரு முறையாவது அழைக்க இந்த வறியவனுக்கு  அருள் புரிந்தானே!  எனக்குள்ள பொறுப்புகள் அப்படி!....
கடமை என்னை அழைக்கிறது!.... நான் வருகிறேன்.... மறந்துவிடாதீர்! நீங்கள் ஸ்ரீவிஷ்ணுவைச் சந்தித்தால் எனக்கு எப்போது தரிசனமும், மோட்சமும் கிட்டும் என்பதை அறிந்து வருவீராக!  
நாரதர்: ம்.....சரி!......ரொம்ப மகிழ்ச்சி!..... இன்னொரு தவசீலரின் செய்தியும் என்னிடம் உள்ளது!..... கண்டிப்பாகத் தங்களுக்கும் தக்க பதில் கேட்டு வருகிறேன்....!
(செல்கிறார்)

காட்சி - 3
இடம் - விஷ்ணு லோகம்
மாந்தர்-மகாவிஷ்ணு, நாரதர். 

(விஷ்ணு அமர்ந்திருக்கிறார். நாரதர் வருகிறார்.)

மகாவிஷ்ணு: (புன்னகையுடன்) என்ன நாரதா!....எங்கெல்லாம் சுற்றி விட்டு வருகிறாய்? ......ஏதேனும் செய்தி உண்டா? 
நாரதர்: பூலோகம் சென்றிருந்தேன் பிரபோ!.....உங்கள் பக்தர்களின் சுக துக்கங்களை நேரில் கண்டு வந்துள்ளேன்! (நான் கண்ட ஒரு துறவி உங்கள் நாமத்தை பல வருடங்களாக உச்சரித்து வருகிறார்! மற்றும் கோவிந்த தாஸ் என்ற ஒரு விவசாயியும் உங்கள் நினைவாக இருக்கிறான். (அவர்களைப் பற்றி விவரித்துவிட்டு) எப்போது வந்து அவர்களுக்குக் காட்சி தருவதாக உத்தேசம்?..., மற்றும் எப்போது அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்றும் கேட்டு வரச் சொன்னார்கள்!
விஷ்ணு: (சற்று நேர மெளனத்திற்குப் பிறகு...)  நாரதா! ....என் பதிலை நான் கூறத் தயார்!......
ஆனால் அது அத்தனை நல்ல பதில் அல்ல!....மிகமிகக் கசப்பானது!..... உனக்கே கூடச் சங்கடமாக இருக்கும்!......அதைப் போய் நீ அவர்களிடம் கூற வேண்டுமா? 
நாரதர்: இல்லை பிரபோ!....நான் போய் ஏதாவது பதில் கூறியே ஆக வேண்டும்!.....எதுவாக இருந்தாலும் என்னிடம் கூறி விடுங்கள்!....எனக்குச் சங்கடம் ஏதுமில்லை!.....
விஷ்ணு: (புன்சிரிப்புடன்) அப்படியானால் கேள்!..... அந்த மரத்தடித் துறவிக்கு மனதில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை. அந்த திவ்ய செளகந்திகா மரத்திலிருந்து பத்து லட்சம்  மலர்கள் உதிர வேண்டும்! வருடத்திற்கு அதிலிருந்து ஆயிரம் மலர்களே உதிரும்!  ஆயிரம் வருடங்கள்  இதே போன்று ஜபம் செய்தால் மட்டுமே நான் அவர் முன் வந்து காட்சி தரமுடியும்!....
நாரதர்: அடப் பாவமே!....ம்.....சரி பிரபோ!.....அந்த விவசாயி கோவிந்த தாஸýக்கு?...
விஷ்ணு: (மீண்டும் புன்னகையுடன்)  ஓ! அந்த கோவிந்த தாஸிற்கா?! உனக்குத் தெரியாதா? அவன்  ஒரே ஒரு முறைதானே எனது நாமத்தை உச்சரிக்கிறான்? எனது தரிசனம் அவனுக்குக் கிடைக்க வேண்டுமானால் அவன் தினமும் நிற்கும்  அந்த மற்றொரு திவ்ய செளகந்திகா மரத்தில் 1 கோடி மலர்கள் உதிர வேண்டும்!  ஜபம் செய்யும் துறவியைப்போல் பல  மடங்கு வருடங்கள் இதே போன்று பக்தியுடன் எனது நாமத்தை ஒரு முறையாவது கூற வேண்டும்!...... போய்ச் சொல்லிவிடு!

காட்சி-4
இடம்-திவ்ய செளகந்திகா மரத்தடி
மாந்தர்-நாரதர்,  துறவி. 

(நாரதர் வந்து துறவியின் இருப்பிடத்திற்கு வருகிறார்....துறவி அவரை வரவேற்கிறார். உபசரிக்கிறார்....)

துறவி: தங்களை மறுபடி தரிசித்ததில் மகிழ்ச்சி! நலந்தானே! 
நாரதர்: நாராயண! நாராயண! நலம்தான்! விஷ்ணுவைக் கண்டேன்! தங்கள் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன்! பதிலையும் பெற்றேன்! 
துறவி: அப்படியா? ரொம்ப சந்தோஷம்!....அவரது பதிலை அறிய ஆவலாய் இருக்கிறது. தயவு செய்து அதைச் சொல்வீராக!

(நாரதர்  பகவான் சொன்ன பதிலைக் கூறுகிறார்)

துறவி: (கலங்கிப் போய்) தேவ ரிஷியே!!.....ஆயிரம் வருடங்களா? (பிரமிக்கிறார்!) அத்தனை வருடங்கள் என்னால் இப்படி ஜபம் செய்ய  இயலுமா?......
(முகம் மிகவும் வாட்டமடைந்து விடுகிறது) ஹும்....என் ஜபத்தின் பலன் இவ்வளவுதானா?..... நான் என்ன செய்வேன்? (சோர்வடைந்த முகத்துடன்)....என் விதி அப்படியானால் என்ன செய்வது? எப்படியோ ஆகட்டும்!......நன்றி!...நாரதரே!....,
நாரதர்: எனக்கும் வருத்தமாய்த்தான் இருக்கிறது...
என்ன செய்வது? வருகிறேன்!..... நாராயண! நாராயண!

(துறவி சோர்வுடன் மரத்தடியில் சாய்ந்து கொள்ள...., நாரதர் விடை பெறுகிறார்)

காட்சி-5
இடம்-செளகந்திகா மரத்தடி
மாந்தர்- நாரதர், கோவிந்ததாஸ். 

(அந்த மற்றொரு திவ்ய செளகந்திகா மரத்தடிக்கு கோவிந்த தாஸ் வருகிறான்!  கண்களை மூடிக் கொண்டு,  "கிருஷ்ணா' என்று கூறுகிறான்.  நாரதர் அவன் முன்பு தோன்றுகிறார்!  காண்கிறான்! )

கோவிந்ததாஸ்: (மகிழ்ச்சியுடன்) வணக்கம் நாரதரே! கடவுளைக் கண்டீரா! மூவுலகமும் சுற்றும் உம்மைக் கண்டதில் எனக்கு பெருமகிழ்ச்சி! கடவுளை தரிசித்த உங்களைக் கண்டது சந்தோஷமாக இருக்கிறது! ஏதேனும் செய்தி உண்டா? எனக்கு பகவான் காட்சி தருவாரா? அவரது அருள் எனக்குக் கிட்டுமா? எனக்குச் சொல்வீராக!
நாரதர்: சொல்லவே மிகவும் வருத்தமாயிருக்கிறது!....
கோவிந்த தாஸ்: பரவாயில்லை! சொல்லுங்கள்! எதுவானால் என்ன? சொல்லுங்கள்!
நாரதர்: (தயங்கித் தயங்கி) அதில்லை.....இந்த செளகந்திகா மரத்திலிருந்து ஒரு கோடி மலர்கள் பூத்து உதிர வேண்டுமாம்!..... அதற்கு பத்தாயிரம் வருடங்கள் ஆகுமே!.....உங்களுக்கு அவர் காட்சி  தர பத்தாயிரம் வருடங்கள் ஆகும் என்கிறார்! எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது!  
கோவிந்த தாஸ்: (மிகுந்த உற்சாகத்துடன்!).... அப்படியா?  அப்படியா சொன்னார் என் கிருஷ்ண பகவான்! ரொம்ப சந்தோஷம்! மிக்க மகிழ்ச்சி! எங்கே எனக்கு காட்சியே தரமாட்டேன் என்று கூறிவிடுவாரோ என்று பயந்தேன்! எவ்வளவு நல்ல செய்தி இது? உங்கள் வாய்க்கு இனிப்பு வழங்க வேண்டும்! இந்தாருங்கள்! என்னிடம் சில பழங்கள் இருக்கின்றன! பெற்றுக் கொள்வீர்! சுவாமி என்னை மறக்காமல் இருக்கிறாரே அது போதும்! எத்தனை  ஜன்மம் எடுத்தால் என்ன? இப்படியே நான் காலத்தை ஓட்டி விடுவேன்! எனக்குக் கடவுளின் காட்சி நிச்சயம்! ஆஹா! எவ்வளவு அற்புதமான செய்தி!......
நாரதர்: (வியப்புடன்..மனதிற்குள்...) எவ்வளவு 
தளராத நம்பிக்கை இந்த கோவிந்த தாஸிற்கு! 

(அப்போது ஒரு அதிசயம் நிகழ்கிறது!....அந்த திவ்ய செளகந்திகா மரத்திலிருந்து புஷ்பங்கள் சொரியத் தொடங்குகின்றன! அவை,........ ஒரு கோடி மலர்கள்!..... அம்மலர்கள் கோவிந்த தாஸின் மீதும் நாரதர் மீதும் இடைவிடாமல் சொரிகின்றன! பகவான் கிருஷ்ணர் பிரசன்னமாகிறார்! இறைவனின் காட்சி கோவிந்த தாஸிற்கு கிடைத்து விடுகிறது! கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் நாத்தழு
தழுக்க இறைவனைக் கண்டு களிக்கிறான் கோவிந்த தாஸ்!)

(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com