முத்திரை பதித்த முன்னோடிகள்! விஸ்வேஸ்வரய்யா

இவரது பிறந்த நாளைத்தான் "பொறியியல் வல்லுனர்களின் தினம்' ஆகக் இந்தியா முழுவதும் கொண்டாடுகிறோம்! 
முத்திரை பதித்த முன்னோடிகள்! விஸ்வேஸ்வரய்யா

இவரது பிறந்த நாளைத்தான் "பொறியியல் வல்லுனர்களின் தினம்' ஆகக் இந்தியா முழுவதும் கொண்டாடுகிறோம்! 
 "நவீன மைசூர் மாநகரின் தந்தை'  என்று போற்றப்பட்டவரும் இவரே! பெங்களூரின் புறநகர் பகுதியான "ஜெயநகர்' இவரால் வடிவமைக்கப்பட்டது. 
 இந்தியாவின் எட்டு பல்கலைக் கழகங்கள் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளன. 
 "கர்நாடக மக்களின் கதாநாயகன்' (HERO OF KARNATAKA STATE) என்றும் இவர் போற்றப்படுகிறார். 
 இத்தனை சிறப்புக்கும் உரியவர், பேரறிஞர் பொறியியல் வல்லுனர் திரு.விஸ்வேஸ்வரய்யா ஆவார். 15-9-1861 அன்று மைசூரில் உள்ள "மதன ஹள்ளி' என்ற கிராமத்தில் இவர் பிறந்தார். 
புணேயில் உள்ள பொறியியல் கல்லூரியில் கட்டடக் கலை பயின்றார். மும்பையில் உள்ள பொதுப் பணித்துறையில் பொறியாளராகப் பணிக்குச் சேர்ந்தார். இந்தியாவில் பல ஆறுகள் சிறிதும், பெரிதுமாக ஓடி வீணாகக் கடலில் கலந்து கொண்டிருந்தன. இவற்றை முறைப்படுத்தி அணை கட்டுவதன் மூலம் நீர்ப்பாசன வசதியைப் பெருக்கலாம் என்று அந்நாளைய ஆங்கில அரசுக்குத் தெரிவித்தார்.  இதனை ஏற்றுக் கொண்ட அரசு, நீர்ப்பாசன குழுவின் உறுப்பினராக இவரை நியமித்தது.
 புணேவிற்கு அருகில் உள்ள "கடக்வாஸ்லா' அணையில் புதிய தடுப்பணைத் திட்டம் ஒன்றை 1903ஆம் ஆண்டு செயல்படுத்தினார். இதன் வெற்றியைத் தொடர்ந்து குவாலியரில் உள்ள "டிக்ரா' அணையிலும், மைசூரில் உள்ள "கிருஷ்ணராஜ சாகர்' அணையிலும் இச்சிறிய தடுப்பணைகள் கட்டப்பட்டன. 
 இதைத் தொடர்ந்து அவர் "ஏடன்' என்ற நாட்டிற்கு நீர்ப்பாசன வசதிகள் பற்றி அறிந்து கொள்ள இந்திய அரசால் அனுப்பப் பட்டார். அங்கு தாம் தயாரித்து வைத்திருந்த புதிய நீர்ப்பாசனத் தொழில் நுட்பம் பற்றிய திட்டத்தை ஏடன் அரசுக்கு சமர்ப்பித்தார். அது மிக எளிமையானதாகவும், அதிக பொருட் செலவு இல்லாததாகவும் இருந்தது. அதை ஏற்றுக் கொண்ட ஏடன் அரசு அதை வெற்றிகரமாக செயல்படுத்தியது. 
 "மூசி' என்ற நதியால் ஹைதராபாத் நகரில் ஆண்டுதோறும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின. ஹைதராபாத் நிஜாம் மன்னர், விஸ்வேஸ்வரய்யாவின் உதவியை நாடினார். 
 வெள்ளத்தைத் தடுக்க புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினார். அது இன்றளவும் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவரது மற்றொரு அரிய கண்டுபிடிப்பு கடல் அரிப்பைத் தடுக்க உதவும் முக்கோண வடிவ சிமென்ட் தூண்கள் ஆகும். 
 விசாகப் பட்டினம் துறைமுகத்தின் கடல் அரிப்பைத் தடுக்க அந்நாளில் இவர் வடிவமைத்த இந்த சிமென்ட் தூண்கள் இன்றும் கூட இந்தியாவின் எல்லாத் துறைமுகப் பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. கர்நாடக மாநிலத்திற்கு இவர் வழங்கிய மாபெரும் பங்களிப்பு "கிருஷ்ண ராஜ சாகர்' அணை ஆகும். காவிரி நதியின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டது. இதனால் கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்கள் நீர்ப் பாசன வசதி பெற்றன. 
 கங்கை நதி பிஹார் மாநிலத்தின் வட பகுதியையும் தென் பகுதியையும் பிரித்தது. இதன் நடுவே பாலம் ஒன்றைக் கட்ட பிஹார் அரசு முடிவு செய்தது. எனவே விஸ்வேஸ்ரய்யாவை அணுகியது. அந்த சமயம் இவருக்கு வயது 90! ஆனால் அந்த வயதிலும் பாலத்தை வடிவமைத்து மேற்பார்வையும் செய்தார். 2கி.மீ. நீளம் உள்ள பாலம் அது! அதன் மீது இருவழி கொண்ட சாலையும், ஒரு வழி ரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டது. 
 தொழில் நுட்ப வசதிகள் அதிகமில்லாத அக்காலத்தில் கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு பெரிய சாதனையாகும். இப்பாலத்தை அந்நாளைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் திறந்து  வைத்தார்.  அதனால் இது "ராஜேந்திர சேது' என்று அழைக்கப்பட்டது. 
 இவர் மைசூரின் "திவான்' ஆக 1912 முதல் 1918 வரை பணி புரிந்தார்.  இந்தப் பதவிக்காலத்தில் பல தொழிற்சாலைகள் தோன்றக் காரணமாக இருந்தார்., 
 இவரது முயற்சியால்தான் தென்னிந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி பெங்களூரில் 1917ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது அது "விஸ்வேஸ்வரய்யா கல்லூரி' என்று அழைக்கப்படுகிறது. 
 இவர் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.  அவற்றில் "இந்தியாவின் மறு சீரமைப்பு' மற்றும் "இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்' ஆகிய இரு நூல்களும் குறிப்பிடத்தக்கவை! 
 ஆங்கிலேய அரசு இப்பேரறிஞருக்கு 1915ஆம் ஆண்டு "சர்' பட்டம் வழங்கி கெüரவித்தது! 1955ஆம் ஆண்டு இவருக்கு "பாரத ரத்னா' விருது வழங்கிச் சிறப்பித்தது!
 
மேலும் சில அரிய தகவல்கள்!
  இவரிடம் நெருக்கமாக நட்பு கொண்டிருந்தவர்கள் இருவர்! ஒருவர் கோபால கிருஷ்ண கோகலே! மற்றொருவர் எம்.ஜி.ரானடே! 
  கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு அருகே உள்ள பிருந்தாவனத் தோட்டம் இவரால் வடிவமைக்கப்பட்டதே! இன்று வரை கர்நாடக மாநிலத்தில் புகழ் வாய்ந்த சுற்றுலாத்  தலமாக விளங்குகிறது
  இன்னொரு சுவாரசியமான தகவல்! திருப்பதிக்கும், திருமலைக்கும் இடையே உள்ள சாலை இவரால் வடிவமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டதே!
 பெண்கல்வி மிக அவசியம் என்ற கருத்தை மிகவும் வலியுறுத்தினார். இதன் காரணமாக பெண்களுக்கு என பள்ளிகளும், கல்லூரிகளும் கர்நாடக மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டன. 
 இவரால் 1912 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட "ஹெப்பல் விவசாயப் பள்ளி' தற்பொழுது புகழ் வாய்ந்த விவசாயப் பல்கலைக் கழகமாக விளங்குகிறது. விவசாயத்திற்கென்று ஆசியாவில் திறக்கப்பட்ட முதல் கல்விக் கூடம் இதுவே ஆகும்!!
 இவரது சொந்த ஊரான மதன ஹள்ளியில்  இவருக்கு நினைவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது! 

தொகுப்பு: லக்ஷ்மி பாலசுப்ரமணியன், 
கடுவெளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com