கருவூலம்: ராமநாதபுரம் மாவட்டம்

கருவூலம்: ராமநாதபுரம் மாவட்டம்

தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்று. 4,123 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் பாக் ஜலசந்தி. மற்றும் மன்னார் வளைகுடா என

தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்று. 4,123 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் பாக் ஜலசந்தி. மற்றும் மன்னார் வளைகுடா என கடல்பகுதிகள் சூழ்ந்துள்ளது. பிற பகுதிகளில் (வடக்கு, மேற்கு, தென்மேற்குப் பகுதிகளில்) புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளன.

தமிழகத்தில் நிறைய தீவுகள் கொண்ட மாவட்டம் இதுதான். பாம்பன் தீவு, குருசடை தீவு, முயல் தீவு, தலையாரி தீவு, அப்பா தீவு, சுளித் தீவு, நல்ல தண்ணி தீவு, புள்ளி வாசல் தீவு மற்றும் உப்பு தண்ணி தீவு என தீவுகள் இம்மாவட்டத்தினையொட்டி மன்னார் வளைகுடா பகுதியில் உள்ளன.

இந்த மாவட்டம் நிர்வாகத்திற்காக ராமநாதபுரம், பரமக்குடி, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், ராமேஸ்வரம் மற்றும் திருவாடனை என 7 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் எல்லைக்குள் 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ராமநாதபுரம் நகராட்சி மாவட்டத் தலைநகரமாகவும், பரமக்குடி நகராட்சி பெரிய நகரமாகவும் உள்ளது.

வரலாற்றுச் சிறப்பு:

இராமாயண காவியத் தொடர்பு:  2,500 ஆண்டுகளுக்கு முன்னர் ராமாயணம் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த மாபெரும் காப்பியத்தின் நிகழ்வுகளுடன் தொடர்பு கொண்ட பல இடங்கள் இம்மாவட்டத்திற்குள் உள்ளன. இம்மாவட்டத்திற்குள் உள்ள பாம்பன் தீவு  பகுதியில் இருந்தே ராமர்,

சீதையை  மீட்பதற்காக பாலம் அமைத்து இலங்கைக்குச் சென்று போரிட்டுள்ளார். இதனாலேயே ராமநாதபுரம்,  ராமேஸ்வரம் என்ற பெயர்கள் ஏற்பட்டுள்ளது.

அழகன்குளம் தொல்லியல் களம்:

மண்டபம் பகுதியில் வைகை நதிக் கரையில் உள்ள அழகன்குளம் கிராமத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் பல பொருள்கள் கிடைத்தன. இவை கி.மு. 300 முதல் கி.பி. 300 - ஆண்டு வரையிலான காலத்திற்குட்பட்டதாகும். இங்கு கிடைத்த வெள்ளி முத்திரை நாணயங்கள் இந்திய அளவில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டவை என்று கூறுகின்றனர். இவற்றைத் தவிர செப்புக் காசுகள், யானை தந்தம் மற்றும் சங்குகளால் செய்யப்பட்ட ஆபரணங்கள், சுடுமண் பொம்மைகள், விலை உயர்ந்த கல்மணிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், ரோமன் நாட்டின் ரவுலெட், அரிட்டைன் மண் பாண்டங்கள், பாட்டில்களை பாதுகாப்பாக வைக்கும் சுடுமண் குடுவைகள் என பலவகையான பொருள்கள் கிடைத்துள்ளது.

இக்கிராமம்  பழங்காலத்தில் மிகச்சிறந்த வர்த்தகத் தலமாகவும், துறைமுகப் பகுதியாகவும் இருந்திருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
பிற்கால வரலாறு:  பின்வந்த காலத்தில் பெரும்பாலும் பாண்டி நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் மட்டும் சோழ நாட்டின் ஒரு பகுதியானது.

கி.பி. 1520-இல் விஜயநகரப் பேரரசர்கள் இப்பகுதியைக் கைப்பற்றினர். அதன்பின் சேதுபதி மன்னர்கள்,  நாயக்கர்கள்,  சந்தா சாகிப், மராட்டியர், ஹைதராபாத் நிஜாம் என பலரும் அடுத்தடுத்து சிறிது காலம் ஆட்சி செய்துள்ளனர்.

1795-இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படையினர் (முத்துராமலிங்க சேதுபதியை வீழ்த்தி) ராமநாதபுரத்தைக் கைப்பற்றினர். இவர்களுக்குக் கட்டுப்பட்ட ஜமீன்களாக, (1801-இல் இருந்து) முறைப்படி வரி செலுத்தி மங்களேஸ்வரி நாச்சியார், ராணி வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் நிர்வாகம் செய்தனர்.

ஆரம்பத்தில் ஒழுங்காக வரி செலுத்திய மருது சகோதரர்கள் 1803-இல் பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மனுடன் சேர்ந்து பிரிட்டிஷாரை எதிர்த்து கலகம் செய்தனர். இதனால் க்ளோனல் அக்னல், மருது சகோதரர்களைப் பிடித்து தூக்கிலிட்டார்.

1892-இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது. அதன் பின் பிரிட்டிஷாரின் ஆளுகையில் இருந்த சென்னை மாகாணம் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, பிரிட்டிஷ் ஆட்சியர் (கலெக்டர்)களைக் கொண்டு நிர்வாகம் செய்யப்பட்டது.

அப்பொழுது, இந்நிலப் பகுதி மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உட்பட்டதாகவே இருந்தது. 1910-இல் தான் தனி மாவட்டமாக உருவானது. அந்நாட்களில் "ராம்நாட்' என்றே  அழைக்கப்பட்டது. சுதந்திரம் பெற்று சிறிது காலத்திற்குப் பின்னரே "இராமநாதபுரம்'  என தமிழ் பெயராக மாற்றப்பட்டது. 
தனி மாவட்டமாக மாறிய பின்னரே ராமநாதபுரம் நகரம் வேகமாக வளர்ச்சியடைந்தது. பின்னர் இப்பெரிய மாவட்டத்தில் இருந்து சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தற்போதைய நிலையை அடைந்தது. 

ராமேஸ்வரம் சோழர்கள் மற்றும் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் முக்கியமான வணிகத் துறைமுகமாக இருந்துள்ளது. இங்கிருந்து ரோம், எகிப்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு முத்துக்களும், சங்குகளும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 

பாம்பன் தீவு!... சில வரலாற்றுத் தகவல்கள்!...

இத்தீவுப் பகுதி 1215 முதல் 1624 வரை இலங்கை மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இவர்கள் இராமநாதசுவாமி கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளனர். 

பாம்பன் தீவினை மாலிக் காபூர் கைப்பற்றியபோது ராமேஸ்வரத்தில் அலாவுதீன் கில்ஜி பெயரில் ஒரு மசூதி கட்டியுள்ளார். 

காலப்போக்கில் பலரின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு 1795 இல் கிழக்கிந்தியக் கம்பெனியாரால் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியானது. நாடு சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியாவிற்கு சொந்தமான தீவாக உள்ளது. 

கமுதிக் கோட்டை!

சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோட்டை குண்டாற்றின் கரையில் உள்ளது. இங்கு ஊமைத்துரை ஆங்கிலேயரிடமிருந்து மறைந்து வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. 

சில புவியியல் தகவல்கள்!

 பாம்பன் தீவுகள்!

67 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த தீவு  "ராமேஸ்வரம் தீவு'  என்றும் அழைக்கப்படுகிறது. தீபகற்ப இந்தியாவுக்கும், இலங்கைத் தீவுக்கும் இடையில் உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்டு தனி தாலுகாவாக உள்ள இத்தீவில் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்துக்கான இரண்டு பாலங்களால் தாய் நிலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ரயில் செல்லும் பாலம் கப்பல்களுக்காகத் தூக்கி நிறுத்தப்பட்டு வழிவிடும் காட்சி அற்புதமானது!  பின் மூடிக்கொண்டவுடன் ரயில் இப்பாதையில் செல்லும்!

தீவில் மையப் பகுதியில் ராமேஸ்வரமும், மேற்கு விளிம்பில் பாம்பன் என்ற ஊரும், தென்கிழககு முனையில் தனுஷ்கோடியும் மற்றும் சில குடியிருப்புப் பகுதிகளும் இங்குள்ளன. ராமேஸ்வரம் பகுதியில் வடக்கு, தெற்காக 7 கி.மீ. நீளம் உள்ள இத்தீவு தனுஷ்கோடியில் 2 கி.மீ.  நீளத்திற்குக் குறுகி விடுகிறது. மேலும் பாம்பன் நகரிலிருந்து தனுஷ்கோடி வரை 30கி.மீ. நீண்டு உள்ளது. 
 
கண்ட மதனா மலை!

பாம்பன் தீவில் மேற்கு எல்லையை ஒட்டி உள்ள மணற்குன்று. இதனைப் பற்றி மகாபாரதத்திலும், ராமாயணத்திலும், புத்த ஜாதகக் கதைகளிலும், பல புராணங்களிலும் மற்றும் தமிழ் இலக்கிய நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது. அக்காலத்தில் முனிவர்கள் தங்கித் தவம் இயற்றிய இடம். 
 இதன் உச்சியில் உள்ள கோயிலில் இருக்கும் சக்கர வடிவின் மீது உள்ள பாத தடங்கள் ஸ்ரீராமனுடையவை என்று நம்பப் படுகிறது. பொதுவாக இம்மலையை "ராமர் பாதம்' என்றே அழைக்கின்றனர். 

பாக் ஜலசந்தி!

இரண்டு பெரிய நீர்ப்பரப்புகளை இணைக்கும் குறுகலான நீர்ப்பரப்பை ஜலசந்தி என்கின்றனர். இதன் இருபுறமும் நிலப்பகுதிகள் இருக்கும். 
 இந்த பாக் ஜலசந்தி இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் 50 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலான அகலத்தில் அதிக ஆழமற்ற பகுதியாக உள்ளது.

ராமர் பாலம்!

பாம்பன் தீவுகளுக்கும், இலங்கையின் மன்னார் தீவுகளுக்கும் இடையில் உள்ள மணல் மற்றும் சுண்ணாம்புக் கற்களால் ஆன மேடுகள் மற்றும் திட்டுகளே ராமர் பாலம் என்று அழைக்கப்படுகிறது. 

புவியியல் அமைப்பில் பாம்பன் தீவு, மணல் திட்டுகள், மன்னார் தீவு என சங்கிலித் தொடர்போல் ஒரு வரிசையாக சீராக அமைந்துள்ளது. இத்திட்டுகளில் சில கடல் மட்டத்திற்கு மேலும் மற்றும் சில 3 அடி முதல் 30 அடி வரையிலான ஆழத்தில் கடலுக்கு உள்ளேயும் உள்ளன. 

இதனை ராமர் இலங்கைக்கு செல்வதற்காக வானரப்படைகளைக் கொண்டு கட்டினார் என்று இந்துக்களால் நம்பப் படுகிறது. 

இப்பகுதி 15 ஆம் நூற்றாண்டு வரை நடந்து செல்லும் வகையில் நீருக்கு மேலேயே இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. மேலும் கி.பி. 1480 இல் உண்டான புயல் காற்றினால் ஏற்பட்ட பெரும் மாற்றத்தினால் இப்பகுதி ஆழம் அதிகமாகி கடலுக்குள் மூழ்கும் நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். 

மன்னார் வளைகுடா!

இந்தியாவில் தென்கிழக்கு முனைக்கும், இலங்கையின் மேற்குக் கரைக்கும் இடையில் உள்ள கடல்பகுதிதான் மன்னார் வளைகுடா. 516 ச,கி,மீ, பரப்பளவு கொண்ட இவ்வளைகுடா பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த தீவுகளைச் சுற்றி பவளப் பாறைகளும் உள்ளன. 

கச்சத்தீவு!

பாக் நீரிணையில் உள்ள மனிதர்கள் வசிக்காத சிறு தீவு. ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது. 285 ஏக்கர் பரப்பளவுள்ள இத்தீவு 14 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் உருவாகியிருக்கலாம் என்று நம்பப் படுகிறது. 

இங்கு 110 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான அந்தோணியார் கோயில் என்றழைக்கப்படும் தேவாலயம் உள்ளது. 

இப்போது இத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது. 1974 இல் இந்திய அரசால் இலங்கைக்கு அளிக்கப்பட்டது. 

மன்னார் உப்பங்கழி!

மண்டபம் (ஊர் பெயர்) பகுதியில் உள்ளது. நில அமைப்பு மற்றும் இயற்கைக் காரணங்களால் கடல் நீர் தேங்கி, சதுப்பு நிலமாக (நீரும், சேறும், சகதியுமாக) இருப்பதே உப்பங்கழி எனப்படுகிறது. இது கடலிலிருந்து சற்று மேடான நிலத்தால் பிரிக்கப்பட்டு ஏரி போல் காட்சியளிக்கும். 

தமிழகத்தில் உள்ள நான்கு உப்பங்கழிகளில் மன்னார் உப்பங்கழியும் ஒன்று. இங்கு பல வகையான தாவரங்கள், நீர் வாழ் உயிரினங்கள், சிறு மிருகங்கள், பறவைகள் போன்றவை வசிக்கின்றன. இப்பகுதிக்குள் "புல்லமடம் சிறுகுடா'வும் உள்ளது. 

வில்லூண்டித் தீர்த்தம்!

வில்லூன்றித் தீர்த்தம் என்பதே இப்படி மாறிவிட்டது. போர் முடிந்து திரும்பிய பின், சீதையின் தாகத்தைத் தீர்ப்பதற்காக ராமன் கடற்கரையில் வில்லை ஊன்ற, நீர் பீறிட்டு வெளிவந்தது! அதனால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நீர் இனிமையான சுவையுடன் நன்னீராக உள்ளது. 
 
நீர்வளம்!

நவம்பர், மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்யும் பருவ மழையைத் தவிர பிற மாதங்கள் முழுவதும் வறண்ட, வெப்பமான காலநிலை கொண்டது இம்மாவட்டம். 

இம்மாவட்டத்தில் 1694 குளங்கள் உள்ளன. இவற்றில் 502 குளங்கள் வைகை, குண்டாறு, மணிமுத்தாறு, ஆகிய நதிகளைச் சார்ந்து உள்ளன. பிற குளங்கள் மழையை நம்பியவையே! இவற்றைத் தவிர கிணறு, மற்றும் ஆழ்துளைக் கிணறுகள்தான் முக்கிய நீராதாரமாக உள்ளன. 

வைகை ஆறு!

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாகிய வருச நாட்டு மலையில் உற்பத்தியாகி கம்பம் பள்ளத்தாக்கு வழியாக, மதுரையைக் கடந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் ஊடாக 258 கி.மீ. தூரம் பயணிக்கும் வைகை நதி பாக் ஜலசந்தியில் கடலுடன் கலக்கிறது.

வைகை நதியில் எப்பொழுதாவது நீர் தன் நீண்ட பயணத்தின் கடைசி இடமான இப்பகுதிக்கு வந்தால், இந்நதியைச் சார்ந்துள்ள 335 குளங்களில் சேமிக்கப்படுகிறது.
 
விவசாயம்

ராமநாதபுரம் மாவட்டத்தின் 63,500 ஹெக்டேர் நிலம் விவசாய நிலமாக உள்ளது.  இங்கு நெல், சோளம்,. கம்பு, ராகி, சிறுதானியங்கள், பருப்பு வகைகள், பருத்தி, வேர்கடலை, எள், மிளகாய், தேங்காய், கரும்பு, என பல வகையான பயிர்கள் பயிரிடப்படுகின்றன. 

தமிழகத்தின் மொத்த மிளகாய் உற்பத்தியில் 34% இம்மாவட்டத்தில்தான் விளைகிறது!  அதிலும் பரமக்குடி பகுதி "சிகப்புக் குடை மிளகாய்'  விளைச்சல் பிரசித்தி பெற்றது. 

பாம்பன் தீவில் உள்ள "தங்கச்சி மடம்' என்னும் ஊரில் மல்லிகை நாற்றுகள் உற்பத்தி பெருமளவில் நடைபெறுகிறது. 

கூட்டு வேளாண்மைத் திட்டம்! .....
ஒரு பெருமைக்குரிய செய்தி!'......

இத்திட்டத்தின் மூலம் இந்த வறண்ட பூமியிலும் ஏற்றம் கண்ட பஞ்சாபைச் சார்ந்த விவசாய பெருமக்களின் சாதனை குறித்த செய்தி. 

கமுதி தாலுகாவில் உள்ளது வல்லந்தை கிராமம். இங்குதான் "அகல் பண்ணை' என்ற பெயரில் நவீன தொழில் நுட்ப உதவியுடன் திட்டமிட்டு விவசாயம் செய்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். 

பஞ்சாப் மாநிலத்தில் சிறு விவசாயிகளுக்கு சொந்த நிலம் என்பது கனவுதான். அதனால், 2007 இல் இப்பகுதிக்கு வந்த 15 விவசாயிகள் 400 ஏக்கர் பொட்டல் நிலத்தை விலைக்கு வாங்கினர். அதனை திட்டமிட்டு உழைத்துச்  சீர்ப்படுத்தி மா, கொய்யா, தென்னை முந்திரி, சப்போட்டா, பாதாம், நாவல் போன்ற மரங்கள், காய்கறிச் செடிகள் என பல வகையான மரம், செடி, கொடிகளை ஒருங்கிணைந்த நவீன பண்ணை முறையில் வளர்த்துள்ளனர். இதனால் இப்பகுதியும் பசுஞ்சோலையாக மாறியதுடன், அவர்களும் பொருளாதார ரீதியாக ஏற்றம் கண்டு, மேலும் 500 ஏக்கர் நிலத்தை வாங்கி பண்ணை அமைத்து வருகின்றனர். 

இவர்களால் இப்பகுதியை சார்ந்த பல விவசாயிகள் நம்பிக்கை பெற்றுள்ளனர். 

தொடரும்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com