அசத்தல் தீபாவளி!

"டேய் விமல்! உனக்கு ரொம்ப பேராசைடா!...தீபாவளிப் பண்டிகைக்காக என்னிடமும் அப்பாவிடமும் தொந்தரவு பண்ணி இரண்டு, இரண்டு புத்தாடைகள் என மொத்தம் நான்கு புத்தாடைகள் வாங்கிக் கொண்டாய்!
அசத்தல் தீபாவளி!

"டேய் விமல்! உனக்கு ரொம்ப பேராசைடா!...தீபாவளிப் பண்டிகைக்காக என்னிடமும் அப்பாவிடமும் தொந்தரவு பண்ணி இரண்டு, இரண்டு புத்தாடைகள் என மொத்தம் நான்கு புத்தாடைகள் வாங்கிக் கொண்டாய்! அது போதாது என்று பெரிய மாமாவிடம் ஒரு புத்தாடை...., சின்ன மாமாவிடம் ஒரு புத்தாடை, என மொத்தம் எட்டு புத்தாடைகள் வாங்கிக் கொண்டாய்.  ஒருவனுக்கு இத்தனை புத்தாடைகள் எதுக்குடா?....எத்தனையோ கஷ்பப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகளே எடுப்பதில்லைடா.....நீ என்னடான்னா எட்டு புத்தாடைகளையும் உடுத்து தீபாவளி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடப் போறியாக்கும்!....இதெல்லாம் ரொம்ப ஓவர்டா!'' என்று தன் ஒரே மகனை அன்புடன் கடிந்து கொண்டாள் ரேவதி. 
  "போம்மா!....உனக்கு ஒன்றும் தெரியாது....இந்த தீபாவளி அசத்தல் தீபாவளிம்மா!....அதுதான் இத்தனை புத்தாடைகள்!'' என்ற விமல் தனக்குத் தானே, "அசத்தப்போவது யாரு?...அசத்தப்போவது யாரு?'  எனக் கேட்டுக் கொண்டான். 
 "எட்டு புத்தாடைகளை தீபாவளிக்காக எடுத்துக் கொண்ட நம்ம பையன் விமல் அதை வித விதமாக உடுத்திக் கொண்டு தீபாவளி கொண்டாடுவதைப் பார்க்கிறவங்க நிச்சயம் திருஷ்டி போடத்தான் போறாங்க'' என்றார் விமலின் அப்பா ரகு.

  தீபாவளித் திருநாளன்று அதிகாலை கங்கா ஸ்நானம் செய்து விட்டு ஒரு புத்தாடையை உடுத்திக் கொண்ட விமல் பட்டாசுகளை வெடித்தான். பட்சணங்களை உண்டான். ஆனால் வேறு புத்தாடைகளை அவன் அணியவே இல்லை! 
 "விமலுக்கு என்ன ஆச்சு?....தீபாவளிப் புத்தாடைகளை பெருமைக்காக எடுத்து வைத்திருக்கிறானா?...''  என சொல்லிக் கொண்ட அம்மா அவனிடம் வேறொரு புத்தாடையை உடுத்தும்படி எடுத்துக் கொடுக்க அலமாரியை திறக்க அலமாரி காலியாக இருந்தது! .....பதறியபடியே... "டேய் விமல்!'' என அழைத்துக் கொண்டே வெளியே வர விமலிடம் அவனின் நண்பர்கள் ஏழு பேர் சூழ்ந்து நின்று தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட அவர்கள் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்! அவர்களின் மேனியை அலங்கரித்திருந்த புத்தாடைகள் விமலுக்காக எடுக்கப்பட்ட புத்தாடைகள்!
 " உண்மையாக நம்ம பையன் விமல் அசத்திட்டாம்பா!''  என அம்மா சொல்ல...., "ஆமாம்!....
அசத்தல் தீபாவளி!'' என பெருமையாக சத்தமாகவே சொல்லிக் கொண்டார் விமலின் அப்பா ரகு! அதை ஆமோதிப்பது போல் தீபாவளிப் பட்டாசு "பட்... 
படார்.... பட்' என வெடித்தது!

எஸ்.டேனியேல் ஜூலியட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com