பட்டப் பெயர்!

டேய் சீனு,  அவன் பாவம் ஏழைடா.   அவங்க அம்மா கூலி வேலை செய்து அவனைப் படிக்க வைக்கிறாங்க. அவனை கேலி செய்யாதேடா!...
பட்டப் பெயர்!

அரங்கம்

காட்சி - 1
இடம்-களத்தூர் மேல்நிலைப்பள்ளி
மாந்தர்-சீனு,  குமரேசன், மற்றும் ராமு.

(களத்தூர் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் சீனு உடன் படிக்கும் மாணவர்களை கேலி செய்து மகிழ்வான்.  எல்லோருக்கும் ஏதாவது ஒரு பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடுவான்.  அந்த பள்ளியில் படிக்கும் ஏழை மாணவன் குமரேசன்.   அவன் கிழிந்த டிரவுசரைப் போட்டுக் கொண்டிருந்தான்)

சீனு: டேய்.  போஸ்ட் பாக்ஸ் இங்கே வாடா!

(குமரேசனுக்கு சீனு தன்னைத்தான் கூப்பிடுகிறான் என்று புரியவில்லை)

சீனு:  டேய், உன்னைத்தான் கூப்பிட்டேன்.  காதுல விழலையா ?
குமரேசன்:  என் பேர் குமரேசன்.  என்னை நீ கூப்பிடவே இல்லையே!
சீனு:  "போஸ்ட் பாக்ஸ்' அப்படிங்கிறது நான் உனக்கு வெச்ச பட்டப்பெயர்!  கிழிஞ்ச டிரவுசர் போட்டுகிட்டுப்      போறவங்களை எப்பவும் போஸ்ட்பாக்ஸ்
அப்படின்னுதான் கூப்பிடுவாங்க!  இனிமேல் உன்னோட பட்டப்பெயர் போஸ்ட்பாக்ஸ்!  அப்படிக் கூப்பிட்டா நீ 
திரும்பிப் பார்க்கணும் சரியா ?
குமரேசன்:  சரிடா!

(குமரேசனுக்கு அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்கவில்லை.  அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.  இதை கவனித்துக் கொண்டிருந்த மற்றொரு மாணவன்
ராமுவிற்கு இது பிடிக்கவில்லை. அவன் சீனுவிடம் இதுகுறித்துப் பேசுகிறான்.)

ராமு:  டேய் சீனு,  அவன் பாவம் ஏழைடா.   அவங்க அம்மா கூலி வேலை செய்து அவனைப் படிக்க வைக்கிறாங்க. அவனை கேலி செய்யாதேடா!...
சீனு:  அதெல்லாம் எனக்குத் தெரியாது.  யாரா இருந்தாலும் நான் பட்டப்பேர் வெச்சி கூப்பிடத்தான் செய்வேன்.

(ராமுவும் அதற்கு மேல் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்) 

காட்சி - 2
இடம்  -  களத்தூர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு அலுவலகம்
மாந்தர்  - சீனு,  மகேஷ்,  அலுவலர்,  
அப்பா பத்மநாபன்.

(சீனுவின் தமிழாசிரியர் பெயர் எம்.வெங்கடேசன்.  அனைவரும் அவரை சுருக்கமாக எம்வி என்று அழைப்பார்கள். ஆனால் சீனுவோ அவருக்கு "மசால்வடை' என்று பெயர் சூட்டினான்.  அதுவே அவருடைய பட்டப்பெயராக நிலைத்து விட்டது. மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் பட்டப்பெயரைச் சூட்டி மகிழ்ந்தான்)

சீனு:   டேய்.  நம்ம ஹிஸ்டரி வாத்தியார் தேவையில்லாம எதையாவது கதைகளை சொல்லிகிட்டே இருக்காரு.  அவருக்கு "பொழுதுபோக்கு'ன்னு பட்டப்பெயரை சூட்டியிருக்கேன்!....  எப்படிடா ?
மகேஷ்:    பிரமாதம்டா! 

காட்சி  - 3
இடம் - அலுவலகம்
மாந்தர் - சீனு,  பத்மநாபன், அலுவலர்.

(ஆண்டுத்தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்தன.   பட்டப்பெயர் சூட்டுவதிலேயே காலத்தை ஓட்டிய சீனு படிப்பதில் கவனம் செலுத்தாமல் இருந்தான்.  
ஆண்டுத்தேர்வுகள் நெருங்கிவிட்டன.  அந்த வருடத்திற்கான தேர்வுக்கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று அறிவித்திருந்தார்கள்.  சீனு இதையும் கண்டு கொள்ளாமல் இருந்தான்.  நாட்கள் வேகமாக ஓடியது.   அன்றுதான் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த கடைசிநாள்.  சீனுவின் அப்பா அந்த ஊரில் ஒரு அரசு அலுவலகத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார்.  அப்பாவின் அலுவலகத்திற்குச் சென்றுபணத்தை வாங்கிக் கொண்டு வந்து தேர்வுக் கட்டணத்தைக் கட்ட முடிவு செய்து தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.  அப்பாவின் அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த ஒருவரிடம் அப்பாவின் பெயரைச் சொல்லி அவர் எங்கிருக்கிறார் என்று கேட்டான்.)

அலுவலர்:  டேய்.  வாத்துவோட பிள்ளையா நீ ?

(அந்த அலுவலர் ஏன் தன்னிடம் இப்படிக் கேட்கிறார் என்று சீனுவிற்குப் புரியவில்லை.)

சீனு:   இல்லே சார்.  நான் பத்மநாபனோட பையன் சீனு.
அலுவலர்:  உங்கப்பாவுக்கு இந்த அலுவலகத்திலே வாத்துன்னு பேர் வெச்சிருக்காங்க.  அவர் வாத்து மாதிரி நடப்பார் இல்லையா ?  அதனாலேதான் அவருக்கு
இந்த பட்டப்பெயரை வெச்சிருக்காங்க!...  இது தெரியாதா உனக்கு ?

(இதைக் கேட்ட சீனுவிற்கு அந்த அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் மீது கோபமும் வெறுப்பும் வந்தது.  இந்த சமயத்தில் தான் தன்னுடைய ஆசிரியர்களுக்கும் உடன் படிக்கும் மாணவர்களுக்கும் பட்டப்பெயர்களை வைத்து மகிழ்ச்சி அடையும் விஷயமும் அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது.   சற்று  நேரத்தில் அவனுடைய அப்பா வந்தார்.)

பத்மநாபன்:  என்னப்பா சீனு.  இந்த நேரத்திலே இங்கே வந்திருக்கே ?
சீனு:  இல்லேப்பா.  இன்னைக்குள்ளே ஆண்டுத் தேர்வுக் கட்டணத்தைக் கட்டியாகணும். அதான் வாங்கிட்டுப் போகலாம்ணு வந்தேன்.
பத்மநாபன்:  அப்படியா,  சரி.  இந்தா!  இப்பவே போய் கட்டிடு.

(அப்பா பத்மநாபன் தன் பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து சீனுவிடம் கொடுத்தார்.  பணத்தை வாங்கிக் கொண்டு பள்ளிக்கு வந்தான் சீனு)

காட்சி  - 4
இடம் - களத்தூர் மேல்நிலைப்பள்ளி
மாந்தர் - சீனு,  ஜெய்

(அப்பாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வந்த சீனு மனவருத்தத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.  அப்போது அவனுடைய நண்பன் ஜெய் அங்கே வந்தான்.

ஜெய்:  என்னடா சீனு.  என்னமோ போல இருக்கே.  உடம்பு சரியில்லையா ?
சீனு:  அதெல்லாம் ஒண்ணுமில்லேடா!
ஜெய்:  பின்னே ஏன்டா ஒரு மாதிரி இருக்கே ?

(இரண்டு மூன்று முறை கேட்ட பின்னரே சீனு நடந்த விஷயத்தை ஜெய்யிடம் சொன்னான்)

ஜெய்:  டேய் சீனு.  உங்கப்பாவிற்கு பட்டப்பெயர் வெச்சது     இருக்கட்டும். இந்த பள்ளியிலே உனக்கு ஒரு பட்டப்பெயர் வெச்சிருக்காங்க!  அது தெரியுமா உனக்கு ?
சீனு:  என்னது.  எனக்கே பட்டப்பெயரா ?
ஜெய்:  உனக்கேன்னா என்ன ? நீ அவ்வளவு பெரிய ஆளா ?  நீ நடக்கும்போது கொக்கு நடக்கிறா மாதிரி இருக்கு....அதனால உனக்கு "கொக்குக் காலன்'
அப்படின்னு பேரு வெச்சிருக்காங்க.

(இதைக் கேட்ட சீனுவிற்கு என்னவோ போலிருந்தது.  அவன் மனதில் இருந்த துக்கம் இன்னும் அதிகமானது.  தன்னுடைய தவறை முதன்முதலாக
அனுபவபூர்வமாக உணர்ந்தான் சீனு.)

ஜெய்:  இப்ப உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இல்லே ?  அதுமாதிரிதான் மற்றவங்களுக்கும்.   நமக்கு பாடத்தைச் சொல்லித்தர்ற ஆசிரியரைக் கூட நீ மதிக்காம அவங்களுக்கும் பட்டப்பெயர் வெச்சி கேலி செய்தே இல்லே....  
சீனு:  நான் செய்தது எவ்வளவு பெரிய தவறுன்னு இப்ப எனக்கு புரிஞ்சிடுச்சிடா!  இனிமே நான் யாரையும் பட்டப்பெயரை     வெச்சி கேலி செய்யமாட்டேன்
ஜெய்!
ஜெய்:  ரொம்ப சந்தோஷம் சீனு.  
இனி சீனு தவறு செய்யமாட்டான்.

(திரை)
 ஆர்.வி.பதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com