எவ்வளவு பணம் ஒருவருடையது?

அந்த ஞானி ஊர் ஊராகச் செல்பவர். பொய் சொல்லாத ஒருவரின் வீட்டில் மட்டும் பகல் உணவை எடுத்துக் கொள்வார்
எவ்வளவு பணம் ஒருவருடையது?

அந்த ஞானி ஊர் ஊராகச் செல்பவர். பொய் சொல்லாத ஒருவரின் வீட்டில் மட்டும் பகல் உணவை எடுத்துக் கொள்வார். அதற்குமுன் அவரிடம் பேசி அவர் உண்மை பேசுபவர்தான் என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில் சில கேள்விகள் கேட்பார்! 
 ஞானி அந்த ஊருக்கு வந்த போது அங்கேயுள்ளவர்கள்,  ஒருவரைக் குறிப்பிட்டு, அவர் செல்வந்தர் என்றும், லட்சக்கணக்கான ரூபாய்கள் பணம் வைத்திருப்பவர் என்றும், பொய் பேச மாட்டார் என்றும், தான தருமங்கள் செய்பவர் என்றும் ஞானி அங்கு உணவருந்தலாம் என்றும் கூறினர்.
 ஞானியும் அந்த செல்வந்தரது இல்லத்திற்குச் சென்றார். அவரும் ஞானியை அன்புடன் வரவேற்றார். 
 "மிகவும் நல்லது!....தங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது?'' என்று கேட்டார் ஞானி.
"என்னிடம் இருபத்தி இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே உள்ளது ஐயா'' என்று செல்வந்தர் கூறவும், ஞானி கோபமாக, "செல்வந்தரே!....ஏன் பொய் சொல்கிறீர்கள்?...தங்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்கள் இருப்பதாக அல்லவா கேள்விப்பட்டேன்!''என்றார்.
  அவர் உடனே கணக்குப் புத்தகம் ஒன்றை எடுத்துக் காட்டி, "இதோ!....இந்த விவரங்களைப் பாருங்கள்!...., இவை நான் செய்த தருமக் கணக்கு! இதுவரை நான் இருபத்திரண்டாயிரம் ரூபாய் மட்டுமே தருமம் செய்துள்ளேன்! அந்தப் பணம்தானே என்னுடையது? என்னோடு வருவது நான் செய்த தருமங்கள்தானே?.... மற்ற பணமெல்லாம் என்னுடையது அல்ல என்பதால் அப்படிக் கூறினேன்...ஐயா, என்னை மன்னிக்கவும்!'' என்றார். 
  ஞானி மனமகிழ்ந்து அவரது இல்லத்தில் உணவருந்தினார்!
(கிருபானந்த வாரியார் கூறிய குட்டிக் கதை)

-சாய்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com