ஹலோ பாட்டியம்மா..!

பாட்டியை வழியனுப்பி வைக்க ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார்கள் பேத்தியும், பேரனும். அப்போது பாட்டி சொன்னது:
ஹலோ பாட்டியம்மா..!

பாட்டியை வழியனுப்பி வைக்க ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார்கள் பேத்தியும், பேரனும். அப்போது பாட்டி சொன்னது: ""சிங்கப்பூரில் உள்ள "சாமர்செட் எம்ஆர்டி' ரயில் நிலையத்தில் சில மாதங்கள் முன்பு நடந்த சம்பவம் இது.

நூற்றுக்கணக்கான பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். ஒரு அம்மா, தன் கைக்குழந்தையுடன் நின்றார். குழந்தைக்கு உடம்பு சரியில்லை. ஒவ்வொரு நொடியும் பலவீனத்தால் குழந்தையின் உடல் அசைவு குறைந்துகொண்டே இருந்தது. சீக்கிரம் ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டுமே என்ற படபடப்பு அவரிடம் காணப்பட்டது. ஒருமுறை, குழந்தையின் முகத்தைத் தொட்டுப் பார்த்த அம்மா திடுக்கிட்டார். "கடவுளே... குழந்தையின் உடம்பில் ஓர் அசைவும் இல்லையே... '

உடனே... ரயில்வே நிலைய அதிகாரியின் அறையை நோக்கி ஓடினார். அங்கிருந்த அதிகாரியிடம் சென்று, ""ஐயா... மருத்துவ மனைக்குப் போகும்வரை என் குழந்தை பிழைத்திருக்குமா... என்பது தெரியவில்லை. ஏதாவது முதலுதவி அளித்து குழந்தையை காப்பாற்றுங்கள்!'' என்று அழுதுகொண்டே கூறினார். குழந்தையை பார்த்த அதிகாரி அவசர நிலையை உணர்ந்தார்.., துரித நடவடிக்கையில் இறங்கினார்.


ரயில்வே பொது ஒலிப்பெருக்கியில் அவரின் குரல் ஒலித்தது.... ""ஒரு குழந்தைக்கு உடம்பு சீரியஸாக இருக்கிறது... பயணிகளில் டாக்டர் யாராவது இருக்கிறார்களா..? மருத்துவ உதவி தேவை...'' என்று அறிவித்தார். அதே சமயத்தில், எதிர்ப்புறம் செல்லும் ரயிலில் ஏறிச் செல்லவிருந்த இளைஞர் ஒருவரின் காதில் அந்த அறிவிப்பு ஒலித்தது. உடனடியாக அவர் தன் பயணத்தை நிறுத்திவிட்டு, நிலைய அதிகாரியின் அறைக்கு விரைந்தார். சரியான நேரத்தில் அவர் வந்து, அந்தக் குழந்தைக்கு வேண்டிய முதலுதவியை அளித்தார். சற்று நேரத்தில் குழந்தை அசையத் தொடங்கியது. பிறகு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அக்குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் குழந்தைக்கு முதலுதவி அளித்தவர் டாக்டர் சுவா செங் யான். அவர் ஆயுதப் படையில் மருத்துவ அதிகாரியாக இருப்பவர். அவருக்கு எஸ்எம்ஆர்டி நிலைய இயக்குநர் சியூ இயோவ் வீ சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.

முதலுதவி என்பது மூன்று வகைப்படும். 1.ஓர் உயிரைப் பாதுகாத்தல், 2.நோயின் கடுமையை குறைத்தல், 3.நோயை குணப்படுத்துவதை ஊக்குவித்தல்.

உயிர் காக்கும் முதலுதவியை அளிப்பதற்கு இதய இயக்க மீட்பு (CPR - cardipulmonary resuscitation) என்கிற பயிற்சியை எடுத்துக்கொண்டால் போதும்.

இரண்டு ஆண்டுகள் முன்பு கோவை நீச்சல் குளத்தில் மூழ்கிய சிறுவனுக்கு தொடர் CPR தந்து காப்பாற்றியவர் பேராசிரியர் திரவியராஜ்.

சென்ற ஆண்டு வேடசந்தூர் அருகே விட்டல் நாயக்கன் பட்டியில் நடந்த சாலை விபத்தில் காயமுற்ற முதியவர்கள் அன்னமுத்து, ஆரோக்கியம்மாள் ஆகியோருக்கு, அவ்வழியே வந்த வேடசந்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளித்தார். பின்பு, அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு குணம் அடைந்தார்கள்.

கடந்த ஆண்டு திருவல்லிக்கேணியில் இருந்து ராமாபுரத்துக்கு ஆட்டோவில் பயணம் செய்த சங்கர்தாஸ் என்ற கட்டட பணியாளர் ஏஜென்ட், ஆட்டோவிலேயே நெஞ்சுவலி ஏற்பட்டு சாய்ந்தார். ஆட்டோ டிரைவர் ரவிச்சந்திரன், அவருக்கு முதலுதவி அளித்ததுடன், மருத்துவமனையிலும் சேர்த்து... தன் ஆட்டோவை அடமானம் வைத்து, அந்தப் பணத்தில், சங்கரதாஸின் உயிரைக் காப்பாற்றினார்.

பத்து பேர் சேர்ந்து முதலுதவி அளித்தால், நான் முதலாவது உதவி..., நீ இரண்டாம் உதவி...., என்று எண்ணிக்கொண்டிருக்காமல், உதவி தேவைப்படுவோருக்குச் செய்யும் எல்லா உதவிகளும் முதலுதவி என்றுதான் எண்ணவேண்டும்!'' என்றார் பாட்டியம்மா.
பேரன்-பேத்தி: ரொம்ப நன்றி பாட்டி..! உங்க சுற்றுப் பயணத்தை சீக்கிரம் முடிச்சிட்டு திரும்பி வந்துடுங்க..! உங்க கதைகளுக்காக நாங்க காத்துக்கிட்டிருப்போம்..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com