அரங்கம்: யார் குற்றவாளி ?

சப் இன்ஸ்பெக்டர் கரடி பியரோ, காகம் பிளாக் க்ரோ,  ஹெட் கான்ஸ்டபிள் குரங்கு மங்கு, மற்றும் போலீஸார். 
அரங்கம்: யார் குற்றவாளி ?

காட்சி - 1
இடம் - காட்டில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன்
 மாந்தர் - சப் இன்ஸ்பெக்டர் கரடி பியரோ, காகம் பிளாக் க்ரோ,  ஹெட் கான்ஸ்டபிள் குரங்கு மங்கு, மற்றும் போலீஸார். 

(போலீஸ் ஸ்டேஷனுக்குள் களைப்புடன் நுழைந்தார் சப் இன்ஸ்பெக்டர் கரடி மிஸ்டர் பியரோ. காட்டில் சமீப காலமாக சிறு சிறு குற்றங்கள் நடைபெற ஆரம்பித்திருந்தன. முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்தார் மிஸ்டர் பியரோ. ஒரு காகம் பரபரப்போடு பறந்து வந்து அவர் எதிரே அமர்ந்தது)

பியரோ: என்ன பிளாக் க்ரோ?....ஏன் பதட்டமா இருக்கே? என்ன ஆச்சு?
பிளாக் க்ரோ: சப் இன்ஸ்பெக்டர் சார்!....,நான் கஷ்டப்பட்டுக் கட்டின கூட்டை யாரோ தூக்கிக்கிட்டுப் போயிட்டாங்க....நீங்கதான் அது யாருன்னு கண்டுபிடிச்சு நடவடிக்கை எடுக்கணும்....
பியரோ: அப்படியா?...,ஒரு கம்பிளெயின்ட் எழுதி கான்ஸ்டபிள் மங்கு கிட்டே குடுத்துட்டுப் போ!.....நான் என்னன்னு பார்க்கறேன்...
பிளாக் க்ரோ: கொஞ்ச நாளாவே இது மாதிரி நிறைய பொருட்கள் காணாம போகுது இன்ஸ்பெக்டர் சார்!.....,இதை நினைச்சா இந்தக் காட்டுலே எப்படி வாழறதுன்னே கவலையா இருக்கு!.....
பியரோ: டோண்ட் வொர்ரி.....,நான் கூடக் கேள்விப்பட்டேன்....நீ கவலைப்படாம போ....நான் அது யாருன்னு கண்டுபிடிக்கிறேன்.....
(பிளாக் க்ரோ கம்ப்ளெயின்டை எழுதி ஹெட் கான்ஸ்பிள் மங்குவிடம் கொடுத்துவிட்டுப் போனது.)
பியரோ: என்னை உயரதிகாரி யானை மிஸ்டர் மாக்ஸ் ஒரு விசாரணைக்குக் கூப்பிட்டிருக்கிறார்.....நாளைக்கு நான் வெளியே போகணும்.....அதனாலே நீங்க எல்லோரும் விழிப்புடன் இருக்கணும்!....சரியா?....
மங்கு: யெஸ் சார்!....
(பியரோ ரவுண்ட்ஸ் புறப்பட்டார்)

காட்சி - 2
இடம் - காட்டின் ஒரு பகுதி, மற்றும் 
போலீஸ் ஸ்டேஷன்
மாந்தர் - ஹெட் கான்ஸ்டபிள் மங்கு,  
நரி பாக்ஸ் மற்றும் முயல் டிரோ.

(மறுநாள் காலை ஹெட்கான்ஸ்பிள் மங்கு வெளியே ரவுண்ட்ஸ் சென்றது. அப்போது எதிரே சந்தேகத்திற்கு இடமாக நரி மிஸ்டர் பாக்ஸ் பதுங்கிப் பதுங்கி நடந்து சென்று கொண்டிருந்தது. )

மங்கு: டேய் பாக்ஸ்!....ஏண்டா பதுங்கி நடக்கிறே?....உன் மேலே எனக்கு சந்தேகமா இருக்கு.....என் கூட ஸ்டேஷனுக்கு வா!.....உன்னை விசாரிக்கணும்...
பாக்ஸ்: அய்யோ!....நான் எந்தத் தப்பும் பண்ணலீங்க....,கால்லே கட்டி வந்திருக்கு....என்னாலே சரியா நடக்க முடியலே..... அதான் நான் நடக்கறது உங்களுக்குப் பதுங்கி நடக்கறா மாதிரி தெரியுது....
மங்கு: அதெல்லாம் எனக்குத் தெரியாது....இப்ப என் கூட வரப்போறியா இல்லியா? 

(வேறு வழியின்றி பாக்ஸ் மங்குவோடு ஸ்டேஷனுக்கு வந்தது. அதை மங்கு மிரட்டி மிரட்டி விசாரணை செய்தது. பின்னர் அதை ஸ்டேஷனிலேயே உட்கார வைத்து மாலையானதும் மீண்டும் மிரட்டி அனுப்பியது.)

மங்கு: சரி, சரி போ....எங்களையெல்லாம் ஏமாத்திடலாம்னு மட்டும் நினைக்காதே...மாட்டினா அவ்வளவுதான்!

(நரி பாக்ஸ் விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடிப்போனது. இது நடந்து இரண்டாவது நாள் ஒரு தாய் முயல் டிரோ ஸ்டேஷனுக்கு வந்தது.)

டிரோ:  ஐயா....என்னோட குட்டி முயல் மரோவைக் காணலை....அதுவும், அதோட  அண்ணன் ப்ரோவும் விளையாடப் போச்சு....ப்ரோ மட்டும் திரும்பி வந்து தம்பியைக் காணலைன்னு சொல்லுது.....என்னோட மரோவை நீங்கதான் எப்படியாவது கண்டுபிடிச்சுத் தரணும்.
பியரோ: அப்படியா....சரி.  ஒரு கம்ப்ளெயின்ட் எழுதிக் குடுத்துப் போ....நான் உடனடியா நடவடிக்கை எடுக்கிறேன்.
(தாய் டிரோ ஒரு கம்ப்ளெயின்ட் எழுதி ஹெட் கான்ஸ்டபிள் மங்குவிடம் கொடுத்துவிட்டுக் கவலையோடு சென்றது)

காட்சி - 3
இடம் - போலீஸ் ஸ்டேஷன் மற்றும் காட்டின் ஒரு பகுதி.
மாந்தர்: சப் இன்ஸ்பெக்டர் பியரோ, மங்கு, ராஜா லயா

(சப் இன்ஸ்பெக்டர் மிஸ்டர் பியரோவிற்கு மிகவும் கவலையாய்ப் போய்விட்டது. உடனடியாக தனது ஸ்டேஷனில் வேலை செய்த அனைவரையும் அழைத்துப் பேசினார்.)

பியரோ: நம்ம ஸ்டேஷனுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாலே வரைக்கும் யாருமே வந்து கம்ப்ளெயின்ட் தரலை. குற்றங்கள் எதுவும் நடக்கலை. ஆனா இப்ப என்னடான்னா சின்னச் சின்னக் குற்றங்கள் நடக்கத் தொடங்கிடுச்சி. இதை நாம இப்படியே விட்டுட்டோம்னா  அப்புறம் பெரிய குற்றங்கள் நடக்கத் தொடங்கி ரொம்பக் கஷ்டமாப் போயிடும். அதனாலே நாம எல்லோரும் ஓய்வு எதுவும் இல்லாம கஷ்டப்பட்டு குற்றவாளியைக் கண்டுபிடிச்சாகணும்.
அனைவரும்: யெஸ் சார்!....நிச்சயம் கண்டுபிடிச்சுடலாம் சார்.

(இதற்குள் அந்தக் காட்டின் ராஜா லாயா சப் இன்ஸ்பெக்டர் பியரோவை அழைத்தார்.)

பியரோ: ஐயா வணக்கமுங்க....
ராஜா லாயா: ஆமா...இப்பெல்லாம் காட்டிலே நிறைய குற்றங்கள் நடக்க ஆரம்பிச்சிருக்குன்னு கேள்விப்பட்டேன். போலீஸ் ஸ்டேஷன் இல்லாதப்பவே இந்தக் காடு நல்லா இருந்திச்சு. ஒரு பாதுகாப்பு இருக்கட்டுமேன்னு இதை ஆரம்பிச்சா இப்ப எக்கச்சக்கமா குற்றங்கள் நடக்குது. நீங்கள்ளாம் என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க?
பியரோ: இல்லீங்க ஐயா...,நாங்க உஷாராத்தான் இருக்கோம்...ஏதோ இப்படி நடக்குது. இன்னும் சில நாட்கள்ளே இதை நான் கண்டுபிடிச்சிடறேன். அப்புறம் எந்தத் தப்பும் இங்கே நடக்காது. அதுக்கு நான் பொறுப்பு. 
ராஜா லாயா: சரி,சரி போங்க....

(சப் இன்ஸ்பெக்டர் பியரோ ஸ்டேஷனுக்குத் திரும்பி வந்து சிங்கராஜா அழைத்துப் பேசிய விஷயத்தை அனைவரிடமும் தெரிவித்தார். )

மங்கு: ஐயா...., எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க...,அந்தக் காணாமப் போன முயலை உடனே தேடிக் கண்டுபிடிச்சு உங்க முன்னாலே கொண்டு வந்து நிறுத்தறேன். அது கிட்டே கேட்டா யார் கடத்தினாங்கன்னு கண்டு பிடிச்சிடலாம்.
பியரோ: சரி, சரி கண்டுபிடி. 

(ஹெட் கான்ஸ்டபிள் மங்கு உடனே புறப்பட்டு வேகமாகச் சென்றது. 

காட்சி - 4
இடம் - காட்டில் போலீஸ் ஸ்டேஷன். 
காட்டின் மற்றொரு பகுதி. 
மாந்தர்: சப் இன்ஸ்பெக்டர் பியரோ, மங்கு, குட்டிமுயல் மரோ மற்றும் காட்டு ராஜா. 

(காட்டில் ஒரு இடத்திற்குச் சென்ற மங்கு அங்கிருந்த ஒரு சிறிய பள்ளத்திற்குள் எட்டிப் பார்த்தது. அதற்குள் குட்டி முயல் மரோ இங்கும் அங்கும் ஓடி தன்னைக் காப்பாற்றும்படி குரல் எழுப்பியது.)

மங்கு: டேய் தம்பி...., கவலைப்படாதே...,நான் வந்துவிட்டேன். உன்னைக் காப்பாத்திடறேன். 

(மங்கு ஒரு கிளையை எடுத்து உள்ளே போட்டு அதன் வழியே உள்ளே இறங்கி மரோவைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தது.)
 
மரோ: ரொம்ப தேங்க்ஸ் சார்!....

(மங்கு மரோவை அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்தது)

மங்கு: ஐயா  காணாமப் போன மரோவை நான் கண்டுபிடிச்சிட்டேன்!

(சப் இன்ஸ்பெக்டர் முகத்தில் கோபம் கொப்பளித்தது)

பியரோ: நீயே அவனை காணாமப் போகச் செய்துட்டு இப்ப நீயே அவனைக் கண்டுபிடிச்சிருக்கே!....அப்படித்தானே?...
(இதைக் கேட்ட மங்கு அதிர்ச்சி அடைந்தது)
மங்கு: ஐயா, என்னங்கய்யா என்னென்னமோ சொல்றீங்க? 
பியரோ: ஏண்டா, என்னை என்ன முட்டாள்னு நெனைச்சியா? அதெப்படிடா குட்டி முயலைக் கண்டுபிடிக்கறேன்னு சொல்லிட்டு நேரா அந்தப் பள்ளத்துக்குப் போய் முயலைக் காப்பாத்திக் கூட்டிட்டு வர்றே? 

(மங்கு மேலும் அதிர்ச்சி அடைந்தது)

பியரோ:  நீ அந்த முயலைக் கண்டுபிடிச்சி என் முன்னாலே கொண்டு வந்து நிறுத்தறேன்னு உறுதியாச் சொன்னப்ப உன் மேலே ஒரு சின்ன சந்தேகம் வந்துச்சி....அதான் நம்ம கான்ஸ்டபிள் டாக் டாகோவை  உன்னைப் பின் தொடர்ந்து போய்ப் பார்க்கச் சொன்னேன். நான் நினைச்ச மாதிரியே எங்கேயும் தேடிப் பார்க்காம நேரா அந்த இடத்துக்குப் போய் முயலைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கே.....சொல்லு!....ஏன் இப்படிச் செஞ்சே?
மங்கு: ஐயா, என்னை மன்னிச்சிடுங்கய்யா.... இந்தக் காட்டிலே எந்தக் குற்றங்களும் நடக்காததாலே நம்மளையெல்லாம் யாருமே மதிக்க மாட்டேன்றானுங்க.....நம்மளைப் பார்த்தா யாருக்கும் பயமே வரலை....வழியிலே பார்த்தா ஒரு வணக்கம் கூட சொல்ல மாட்டேன்றானுங்க....அதான் இப்பிடி செஞ்சு எல்லாரையும் நம்மளைத் தேடி வரவழைச்சு விசாரணை நடத்தினா நம்மளைப் பார்த்தா ஒரு பயம் வரும்! அதுக்காகத்தான் இப்பிடி செஞ்சேன்.... இனிமே இப்படி செய்ய மாட்டேன்....
பியரோ: ஏண்டா முட்டாளே!.....இதை நான் ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சிட்டேன்.....இப்படியே விட்டா என்ன ஆகும் தெரியுமா?.....இந்தக் காட்டிலே பெரிய, பெரிய குற்றங்கள் நடக்க ஆரம்பிச்சி காடே அழிஞ்சி போற நிலைமைக்கு வந்திருக்கும்....குற்றங்களே நடக்கலைன்னாத்தான் நமக்கெல்லாம் பெருமை!.....ஏதோ தெரியாம செஞ்சுட்டே!....இனிமே இப்படிச் செய்யாதே!.....
மங்கு: அய்யா, சிங்கராஜாகிட்டே இதைச் சொல்லாதீங்கய்யா....
பியரோ: இல்லே....அது ரொம்பத் தப்பு!....வா!....உன்னை அவர்கிட்டே கூட்டிக்கிட்டுப் போறேன்....நடந்ததைச் சொல்லி அவர்கிட்டே மன்னிப்புக் கேளு....அவரு ரொம்ப பெரிய மனசுக்காரரு....உன்னை மன்னிச்சுடுவாரு....நீயும் அதுக்கப்புறம் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாம நிம்மதியா உன்னோட வேலையைச் செய்யலாம்.

(இருவரும் சிங்கராஜாவைச் சந்தித்து நடந்ததைச் சொல்லி மன்னிப்புக் கேட்கிறார்கள். அவரும் பெருந்தன்மையாக எச்சரித்து மன்னித்து அனுப்பினார். அதன் பின்னர் அந்தக் காட்டில் குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை...எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.)
திரை
ஆர்.வி.பதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com