கதைப் பாடல்: நாயும் நரியும்

ஆட்டுக் காரர் நாள்தோறும்ஆடுகள் புல்லை மேய்ந்திடவே
கதைப் பாடல்: நாயும் நரியும்

ஆட்டுக் காரர் நாள்தோறும்
ஆடுகள் புல்லை மேய்ந்திடவே
ஓட்டிக் கொண்டு போவாராம்
ஓடைக் கரையில் விடுவாராம்!

சிம்மி என்னும் அவருடைய
சிறுத்தை போன்ற நாயதுவும்
கண்ணைப் போல ஆடுகளை
கருத்தாய் காவல் புரிந்திடுமாம்!

செல்லா என்னும் சிறுகுட்டி
சிட்டாய்ப் பறக்கும் படுசுட்டி
புல்லைக் கண்டால் புதருக்குள்
புகுந்து போகுமாம் பயமின்றி!

அதனைப் பார்த்திடும் சிம்மியுமே
அதட்டி "செல்லா... போகாதே
புதரில் இருக்கும் நரிபிடித்துப்
போய்விடும் உன்னை'' என்றிடுமாம்!

புதருக் கருகில் வளர்ந்திருக்கும்
புல்லை மேயும் செல்லாவிடம்
புதருக் குள்ளே இருக்கும் நரி
புன்னகை யோடு பேசிடுமாம்!

நாயை விடவும் இனிதாக
நரியின் பேச்சு இருந்ததனால்
நாயை செல்லா நம்பாமல்
நரியை நம்பிப் பழகியதாம்!

ஒருநாள் இரவு குள்ளநரி
ஓசை யின்றி வந்ததுவாம்!
வரப்புக் கருகில் திடலினிலே
வலைக்குள் ஆடுகள் உறங்கினவாம்!

"மெல்ல எழுந்து வா'' என்றே
மெல்லிய குரலில் குள்ளநரி
சொல்லிடக் கேட்ட செல்லாவும்
சூதறி யாமல் சென்றதுவாம்!

"இங்கே நின்றே பேசிடுவோம்
இருட்டு பயமாய் இருக்கிறது!''
என்றதாம் செல்லா! குள்ள நரி
ஏளன மாகச் சிரித்ததுவாம்!
"புத்தி இல்லா உன்னைநான்
போக விடவா கூட்டிவந்தேன்?
கத்தி னாலும் பயனில்லை
கடித்துத் தின்னப் போகின்றேன்!''

வஞ்சக நரியும் சொல்லிவிட்டு
வாயைத் திறந்ததாம் கடிப்பதற்கு!
"சிம்மி!'' என்றே அலறியதாம்
செல்லா! அடுத்த கணத்தினிலே

நரிமேல் பாய்ந்தே கடித்து அதை
நச்சென தரையில் அடித்த சிம்மி
"நரியன் எண்ணம் தெரிந்தேதான்
நானும் வந்தேன்'' என்றதுவாம்!

உருவில் ஒத்தே இருந்தாலும்
உள்ள குணமோ வெவ்வேறு!
தெரிந்து கொண்ட செல்லாவும்
திரும்பி நடந்ததாம் சிம்மியுடன்!

நரியைப் போன்ற தீயவர்கள்
நாட்டிலும் உண்டு மாந்தரிலே!
அருமைத் தம்பி தங்கைகளே
அறிந்திட வேணும் நீங்களுமே!

-புலேந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com