கருவூலம்: கரூர் மாவட்டம்!

வெள்ளியங்கிரி மலையில் தோன்றி கோவை, திருப்பூர் மாவட்டங்களின் பல கிராமங்களையும் நகரங்களையும் கடந்து கரூர் மாவட்டத்தின் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது.
கருவூலம்: கரூர் மாவட்டம்!

சென்ற இதழ் தொடர்ச்சி....
நொய்யல் ஆறு!
வெள்ளியங்கிரி மலையில் தோன்றி கோவை, திருப்பூர் மாவட்டங்களின் பல கிராமங்களையும் நகரங்களையும் கடந்து கரூர் மாவட்டத்தின் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது.  180 கி.மீ.  தூரம் பயணிக்கும் இந்நதி முன் காலத்தில் காஞ்சிமாநதி எனப்பட்டது. பின்னர் சங்கமிக்கும் இடமாகிய நொய்யல் கிராமத்தின் பெயரே ஆற்றின் பெயரானது. 

ஆத்துப்பாளையம் அணை!
நொய்யல் ஆற்றின் குறுக்கே வெள்ளக்கோயிலில் கட்டப்பட்ட இந்த அணை மூலம் இம்மாவட்டத்தின் 19,000 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த அணை கீழ் பவானி திட்டத்தின் கால்வாய்கள் வழியாக வரும் உபரி நீரையும் சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
நொய்யல் ஆறு தற்போது மிகவும் மாசுபட்டுப் போனதால் இந்த அணையும் பயனற்றுப் போய்....
ரசாயனக் கழிவு தேங்கும் இடமாகிவிட்டது.

நங்காஞ்சி ஆறு!
 அமராவதி ஆற்றின் உபநதி. திண்டுக்கல் மாவட்டத்தில் தோன்றி குடகனாற்றில் கலந்து, பின் அமராவதியுடன் இணைகிறது. இம்மாவட்டத்தில் வாழை, கரும்பு, நெல், பருத்தி, சிறுதானியங்கள், பருப்பு வகைகள், நிலக்கடலை, வெற்றிலை, தேங்காய், மிளகாய், வெங்காயம், இஞ்சி, பூச்செடிகள், மூலிகைச் செடிகள், கோரைப்புல், எனப் பல வகையான பயிர்களும் பயிரிடப்படுகின்றன. 

முருங்கை மொத்த சந்தை!
 அரவக்குறிச்சி பகுதியில் 10,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் முருங்கை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. சீசன் காலத்தில் மொத்த வியாபாரமாக இங்கிருந்து மஹாராஷ்ட்ரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, மேற்கு வங்காளம், ஒரிஸா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா என நாட்டின் பல பகுதிகளுக்கும் முருங்கைக் காய்கள் தினமும் 25க்கும் மேற்பட்ட லாரிகளில் அனுப்பப்படுகின்றன.

தொழில் வளம்!
நெசவுத்தொழில்!
கரூர் கைத்தறி மற்றும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியில் உலகளவில் பிரசித்தி பெற்றது. வீட்டு உபயோகத்திற்கான படுக்கை விரிப்புகள், தலையணை உறை, திரைச் சீலைகள் மற்றும் வேஷ்டி, சேலைகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. 
 இவை உலகின் பல பகுதிகளில் உள்ள பிரபலமான நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் ஏற்றுமதி மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆண்டுக்கு ரூபாய் 6000 கோடி அளவிற்கு அந்நிய செலாவணி கிடைக்கிறது. 
  ஜவுளி வியாபாரத்தின் வளர்ச்சியால் இதன் உப தொழில்களான பருத்திக் கொட்டை எடுத்தல், நூல் நூற்றல், சாயம் ஏற்றுதல், நெசவு செய்தல், தையல் தொழில் போன்ற பல தொழில்களும் இங்கு வளர்ச்சியடைந்துள்ளன.  இத்தொழிலில் சுமார் 4,50,000 பேர் பணியாற்றுகின்றனர். 

பேருந்து உடல் கட்டுமானம்!
ஜவுளி உற்பத்திக்கு அடுத்ததாக பேருந்து உடல் கட்டு நிறுவனங்கள் இங்கு அதிகம் உள்ளன. இங்கு மாதந்தோறும் சுமார் 400 உடற்கட்டுமானம் செய்யப்படுகின்றன. இங்கு ஆம்னி  பேருந்துகள் எனப்படும் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளும், மற்றும் அரசு பேருந்துகளும் கட்டமைக்கப்படுகின்றன. 
தற்போது பயன்பாட்டில் உள்ள தென்னிந்தியாவின் தனியார் பேருந்துகளில் 95 சதவீதம் இங்கு கட்டமைக்கப்பட்டவைதான்! இத்தொழிலில் பெயின்டர், தச்சு வேலை செய்பவர், வெல்டர், எலக்ட்ரீஷியன்கள், என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். 

புகலூர் காகித ஆலை!
 இங்கு தமிழக அரசால் உலக வங்கி உதவியுடன் நிறுவப்பட்ட   தமிழ் நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை (TAMIL NADU NEWSPRINT AND PAPERS LTD) செயல்படுகிறது. ஆண்டுக்கு 4 லட்சம் டன் உற்பத்தித் திறன் கொண்ட இந்த ஆலையே ஆசியாவின் இரண்டாவது பெரிய ஆலையாகும்! இங்கு கரும்புச் சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கப்படுகிறது. அவ்வகையில் இதுவே உலகின் பெரிய ஆலை!

நைலான் வலை தயாரித்தல்!
 மீன் பிடிக்கும் வலைகள், பழத்தோட்டங்களில் பயன்படுத்தப்படும் வலைகள் மற்றும் கொசு வலைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் கரூர் மாவட்டத்தில் உள்ளன. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 65% இங்குதான் உற்பத்தியாகின்றது. 

கற்கள் பட்டை தீட்டுதல்!
 செவ்வந்திக்கல், வைடூர்யம், நீலக்கல், சூரிய காந்தம் போன்ற நகைகளில் பயன்படுத்தப்படும் கற்கள் இங்கு பட்டை தீட்டி ஜொலிக்க வைக்கும் தொழிலும் இம்மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு நடைபெறுகிறது. 

மேலும் சில தொழில்கள்!
 இவற்றைத் தவிர செட்டிநாடு சிமென்ட் ஆலையும், இ.ஐ.டி. பாரி, சர்க்கரை ஆலையும், பல சிறு தொழில் நிறுவனங்களும் செயல்படுகின்றன. 

பழமையான ஆலயங்கள்!
குளித்தலை கடம்பவனேஸ்வரர் ஆலயம்
 குளித்தலை கடம்பவனேஸ்வரர் ஆலயம்,    தான்தோன்றி கல்யாண வெங்கடரமணசாமி கோயில், வெண்ணெய் மலை பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம், கரூர் மாரியம்மன் கோயில், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்கள் இங்குள்ளன. 

பார்க்க வேண்டிய இடங்கள்!
• மாயனூரில் உள்ள அணை மற்றும் பூங்கா.
• செட்டிபாளையம் அமராவதி நதி அணை மற்றும் பூங்கா.
• காவிரியும், அமராவதியும் சங்கமிக்கும் திருமுக் கூடல்.
• கடவூர் பகுதியில் உள்ள பொன்னையாறு அணை.
• நெரூர்  பகுதியில் உள்ள ஆற்றங்கரைப் பூங்கா.
மொத்தத்தில் கரூர் மாவட்டம் தன் தொழில் வளத்தால் தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

தொகுப்பு: கே.பார்வதி, 
திருநெல்வேலி டவுன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com