முத்திரை பதித்த முன்னோடிகள்! ராஜா ரவிவர்மா

மொழி தோன்றுவதற்கு முன்னரே முதலில் தோன்றிய கலை ஓவியக் கலை ஆகும். குகைகளில் வாழ்ந்த ஆதி மனிதன் சிறு கிறுக்கல்களைக் கொண்டு தன் சக மனிதனிடம்
முத்திரை பதித்த முன்னோடிகள்! ராஜா ரவிவர்மா

மொழி தோன்றுவதற்கு முன்னரே முதலில் தோன்றிய கலை ஓவியக் கலை ஆகும். குகைகளில் வாழ்ந்த ஆதி மனிதன் சிறு கிறுக்கல்களைக் கொண்டு தன் சக மனிதனிடம் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறான். அவையே இன்று குகை ஓவியங்கள் என்று போற்றப்படுகின்றன. 
 கவியரசர் கண்ணதாசனும் "கலைகளிலே அவள் ஓவியம்!' என்று அதன் பெருமையைப் புகழ்ந்து கூறி இருக்கிறார். இந்திய ஓவியங்கள் என்று கூறிய உடனேயே நமது நினைவுக்கு வருவது "திரு ராஜா ரவி வர்மா' ஆவார். 
 உலக அளவில் ஓவியத் துறையில் பிரபலமடைந்த முதல் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உரித்ததாகும். இவர் திருவிதாங்கூர் இராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார். கிளிமானூர் அரண்மனையில் "எழுமாவில்' நீலகண்டன் பட்டத்திரி என்பவருக்கும் "உமயாம்பாள் தம்புராட்டி' என்பவருக்கும் 29-4-1848 அன்று மகனாகப் பிறந்தார். 
 இவரது தந்தை சமஸ்கிருதம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறையில் வல்லுனராக விளங்கினார். இவருக்கு "மங்களா பாய்' என்ற சகோதரியும் "கோதா வர்மா' , "இராஜா வர்மா' என இரு சகோதரர்களும் இருந்தனர். அவர்களுள் இராஜா வர்மாவும் ஒரு மிகச் சிறந்த ஓவியர் ஆவார். 
 ரவி வர்மா சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். மதுரையைச் சேர்ந்த  "திரு இராமசாமி நாயுடு' என்பவரிடம் நீர் வண்ண ஓவியங்கள் வரையும் பயிற்சி பெற்றார்.
 "தியோடர் ஜென்ஸன்' (THEODOR JENSON) என்ற டச்சு ஓவியர் இவருக்குத் தைல ஓவியங்கள் வரையும் பயிற்சி அளித்தார். 
 1873 ஆம் ஆண்டு வியன்னாவில் ஒரு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அதில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.  இவை வெளிநாட்டினரால் பாராட்டப்பட்டு  அதிக விலைக்கு வாங்கப்பட்டன. சிகாகோவில் 1893ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் வைக்கப்பட்ட இவரது ஓவியங்கள் மூன்று தங்கப் பதக்கங்களைப் பரிசாகப் பெற்றன. 
 நள சரித்திரம், மஹாபாரதம் போன்ற புராண இதிகாசக் கதாபாத்திரங்களை இவர் ஓவியங்களாக வரைந்தார். 
திருவிதாங்கூரின் அந்நாளைய திவான் திரு டி.மாதவராவ் என்பவர் இவரிடம் சொந்தமாக ஓவியங்களை அச்சிடும் அச்சகம்  ஒன்றைத் துவங்குமாறு கூறினார். அதன்படி 1894 ஆம் ஆண்டு மும்பைக்கு அருகில் உள்ள "கட்கோபர்' என்ற இடத்தில் அச்சகம் ஒன்றைத் துவங்கினார் ரவிவர்மா. ஆனால் அதைத் தொடர்ந்து அவரால் மேற்பார்வையிட முடியவில்லை. எனவே ஜெர்மானியர் ஒருவரிடம் அதை விற்று விட்டார்.
இவரது ஓவியத் திறமையைப் பாராட்டும் விதமாக அந்நாளைய வைசிராய் திரு.கர்சன் பிரபு அவர்கள் 1904ஆம் ஆண்டு இவருக்குப் பதக்கம் வழங்கி கெளரவித்தார்.  "மாவேலிக்கரா' என்னுமிடத்தில் இவரை கெளரவிக்கும் விதமாக ஓவியக் கல்லூரி ஒன்று துவங்கப்பட்டது. கிளிமானூரில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கேரள அரசு ஆண்டு தோறும் சிறந்த கலைஞர்களுக்கு "ராஜா ரவி வர்மா புரஸ்காரம்' என்ற விருது வழங்கி கெளரவிக்கிறது. 
"கேதன் மேத்தா' என்ற புகழ் பெற்ற ஹிந்தித் திரைப்பட இயக்குநர் ராஜா ரவி வர்மாவின் வாழ்க்கை வரலாற்றை "ரங் ராசியா' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். 
 இம்மாமேதை 5.10.1906 அன்று கேரளாவில் உள்ள அட்டிங்கல் என்னும் இடத்தில் இயற்கை எய்தினார். 
 
மேலும் சில சுவையான தகவல்கள்!
அந்நாட்களில் புகைப்படங்கள் கிடையாது. இதனால் சமஸ்தான மன்னர்கள் மற்றும் திவான்கள் வெளிநாட்டிலிருந்து ஓவியர்களை வரவழைத்து தமது உருவத்தை வரைந்து கொண்டனர். அவ்விதம் 1863 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மஹாராஜா பிரிட்டிஷ் ஓவியர் தியோடர் ஜென்ஸனை அழைத்துத் தன் ஓவியத்தை வரைந்து தருமாறு வேண்டினார். அவர் வரைந்த தைல வண்ண ஓவியத்தால் பெரிதும் கவரப்பட்ட ரவி வர்மா அவரிடம் தைல வண்ண ஓவியங்கள் வரையக் கற்றுக்கொண்டார். 
இந்தியாவின் எல்லா அரண்மனைகளையும்  இவர் வரைந்த ஓவியங்கள் அலங்கரித்தன.  உலக அளவில் இவரது ஓவியங்களே அதிக அளவில் பிரதி எடுக்கப்பட்டன.
ஆரம்ப நாட்களில் இலைகள், பூக்கள், மரப்பட்டைகள், செம்மண் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கைச் சாயங்களைக் கொண்டு ஓவியங்கள் தீட்டினார். தியோடர் ஜென்ஸனின் வழிகாட்டுதலுக்குப் பிறகு தைல வண்ண ஓவியங்கள் வரையத் தொடங்கினார். 
1870 முதல் 1878 வரை நிறைய மன்னர்கள், அரசியல் பிரபலங்கள், போன்றோரின் உருவப்படங்களை இவர் வரைந்துள்ளார். 
உலக அளவில் பிரபலமடைந்ததால் ஓவியங்கள் வரைந்து தருமாறு இவருக்கு நிறைய கடிதங்கள் வரத் தொடங்கின. இதனால் அந்நாளைய பிரிட்டிஷ் அரசு கிளிமானூரில் இவருக்கென பிரத்யேகமாக அஞ்சல் நிலையம் ஒன்றைத் திறந்தது. தனி மனிதர் ஒருவரின் பயன்பாட்டிற்கெனத் துவக்கப்பட்ட முதல் அஞ்சலகமும் இதுவே ஆகும்!
மும்பையில் ரவிவர்மா வைத்திருந்த அச்சகத்தில் இவர் கையால் வரைந்த வண்ணம் தீட்டாத பல கோட்டு ஓவியங்கள் இருந்தன. பின்னாளில் வண்ணம் தீட்டிக் கொள்ளலாம் என அவரால் வைக்கப்பட்ட அரிய ஓவியங்கள் அவை! ஆனால் தனது 58ஆவது வயதிலேய அவர் இறந்து போனதால் இந்த ஓவியங்கள் பற்றி உலகுக்குத் தெரியவில்லை. துரதிர்ஷ்ட வசமாக 1972ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தால் அந்த அச்சகம் முழுமையாக எரிந்து சாம்பலானது. அதில் அந்த ஓவியங்கள் அனைத்தும் அழிந்து போயின! இன்றைக்கு அதன் மதிப்பு பல கோடி ரூபாய்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
"அமர்சித்ர கதா' என்னும் காமிக்ஸ் புத்தகங்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களே ஆகும்!
தொகுப்பு:  லக்ஷ்மி பாலசுப்ரமணியன், 
கடுவெளி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com