நூலகம்!

நிகழ்ச்சி நெறியாளர்: ரோஜா மலர் தொலைக்காட்டி நிலைய  நேயர்களுக்கு வணக்கம். இன்றைய "சுழலும் சொல்லரங்கம்' நிகழ்ச்சியில் "நூலகம்' பற்றி கலந்துரையாட இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியின் விருந்தினர்களாக
நூலகம்!

அரங்கம்
காட்சி - 1
நிகழ்ச்சி நெறியாளர்: ரோஜா மலர் தொலைக்காட்டி நிலைய  நேயர்களுக்கு வணக்கம். இன்றைய "சுழலும் சொல்லரங்கம்' நிகழ்ச்சியில் "நூலகம்' பற்றி கலந்துரையாட இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியின் விருந்தினர்களாக நம்முடன் கலந்துரையாட அரங்கிற்கு வந்திருப்பவர்கள் கல்வியாளர் கனகராஜ்....,பத்திரிகையாளர் பாரதிகுமார்....,மற்றும் சொற்பொழுவாளர் சித்தார்த்தன். விருந்தினர் அனைவருக்கும் வணக்கம். 
விருந்தினர்கள் மூவரும்:  வணக்கம்....வணக்கம்...வணக்கம்.
நெறியாளர்:  நிச்சயமாக நீங்கள் பள்ளிப் பருவம் தொட்டே நூலகத்தை நன்கு பயன்படுத்தி இருப்பீர்கள்....நாலகத்தின் முக்கியத்துவம் குறித்து உங்களது முதற்கட்டக் கருத்தினை பதிவு செய்யுங்கள். 
கனகராஜ்:  ஒரு நூலகம் திறக்கும் பொழுது ஒரு சிறைச்சாலை மூடப்படும்.....என்று சொல்லுவார்கள். அதனால் நாட்டில் எவ்வளவுக்கு எவ்வளவு நூலக எண்ணிக்கை கூடுகிறதோ....அவ்வளவுக்கு அவ்வளவு சிறைச்சாலை எண்ணிக்கையும், சிறைச்சாலைக்குப் போவோர் எண்ணிக்கையும் குறையும். 
பாரதிகுமார்: ஒரு நூலகம் திறக்கும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படும்....என்ற வாசகம் அருமையானது. ஆனால் நடைமுறைக்குப் பொருந்தி வருகிற வாசகமாக அது இல்லை. எத்தனை நூலகம் தொடங்கினாலும் அவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயுரும்போதுதான் பலன் அதிகமாகும். இங்கு யதார்த்த நிலைமை மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இல்லை. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம்...."கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்'  என்கிற பழமொழி போல்..."நூலகம் இல்லா ஊரில் வாழ வேண்டாம்' என்கிற புது மொழியை உருவாக்கலாம்.  
சித்தார்த்தன்:  நூலகத்தைப் பயன்படுத்துபவர்கள் எல்லாம் புகழுக்குரியவர்கள் ஆகி விட முடியாது. ஆனால் புகழடைந்த அறிஞர் பெருமக்கள் அனைவரும் நூலகத்தை முறையாகப் பயன் படுத்தியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  கார்ல்மார்க்ஸ், காந்திஜி, அம்பேத்கார், அண்ணா, அப்துல் கலாம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். 
நெறியாளர்: அறிவு ஜீவிகள் எந்த விஷயத்திலும் விதவிதமாக வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவிப்பார்கள் என்று சொல்லுவார்கள். அதனை நிரூபிக்கின்ற வகையில் நூலகத்தின் முக்கியத்துவம் குறித்த தங்களது அபிப்ராயங்களை வித்தியாசமான முறையில் வெளியிட்டிருக்கிறீர்கள்......ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு கலந்துரையாடலைத் தொடர்வோம்.

காட்சி - 2
நெறியாளர்:  சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சி தொடர்கிறது. கனகராஜ்,...இன்றைய நூலகங்களின் செயல்பாடுகள் பற்றிச் சொல்லுங்களேன்!.....
கனகராஜ்:  இன்றும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நூலகம் போய் வருகிறேன். அந்தக் காலங்களில் நான்கு நாளிதழ்கள்....எட்டு வார, மாத, இதழ்கள் நூலகத்திற்கு வரும்.  இன்றைக்கு நிறையப் பத்திரிகைகள் நூலகத்திற்கு வருகின்றன.  பிரபல பத்திரிகைகள் மட்டுமல்ல....பல சிற்றிதழ்களையும் நூலக மேஜைகளில் பார்க்க முடிகிறது.  அதுமட்டுமல்ல...அந்தக் காலங்களில் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட பத்திரிகைகள் மட்டுமே நூலகங்களில்  வாங்கப்படும்.  இன்றைக்கு பல முக்கிய பிரமுகர்கள் தங்கள் அன்பளிப்பாக சில இதழ்களை வாங்கித்த தருகிற வழக்கம் இருக்கிறது. 
பாரதிகுமார்:  கனகராஜ் கருத்தோடு நான் உடன் படுகிறேன். அந்தக் காலங்களில் பிரபலமான எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் புத்தகங்கள் மட்டுமே நூலகங்களில் வாங்குவார்கள். இன்றைக்கு அப்படியல்ல....சாதாரண எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களையும் பார்க்க முடிகிறது. ஒரே ஒரு புத்தகம் போட்ட எழுத்தாளரின் புத்தகமும் நூல் நிலையத்தில் இருக்கிறது. அடுத்து கையில் புத்தகம் வைத்திருந்தால் "லைப்ரரி புத்தகமா' என்று பிறர் கேட்கிற அளவிற்கு நூலக நூலென்றால் பைண்டிங் செய்யப்பட்ட பழைய புத்தகங்களாகத்தான் இருக்கும். இன்றைக்கு அப்படியல்ல....புதுப்புது புத்தகங்கள் வண்ணமான வடிவங்களில் நூலகங்களில் காணலாம்.....
சித்தார்த்தன்:  பத்திரிகைகள், புத்தகங்கள் நூலகத்தில் அதிகமாக வாங்குகிறார்கள்....ஆனால் அவற்றை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்...? நூலகத்திற்குப் போய் படிப்பவர்களைப் பாருங்கள்....வருகிறவர்கள் எல்லோரும் ஓய்வு பெற்ற அலுவலர்கள்தான்.....பத்திரிகைகளைப் பார்த்து விட்டு புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு போகிறார்கள்...வேலையில்லாப் பட்டதாரிகள் மட்டும் "எம்ப்ளாய்மென்ட்  நியூஸ்' படிக்க வருகிறார்கள். கல்லூரி மாணவர்களோ, பள்ளி மாணவர்களோ நூலகம் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. அதுவும் பள்ளி மாணவர்களை நமது பெற்றோர் நூலகம் போக அனுமதிப்பதில்லை. 
 நெறியாளர்: கல்வியாளர் பத்திரிகையாளர் இரண்டு பேர்களின் கருத்துகள் ஒத்துப் போகின்றன. சொற்பொழிவாளர் சித்தார்த்தன் அபிப்ராயம் வேறு விதமாக இருக்கிறது.  ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு நிகழ்ச்சியைத் தொடர்வோம். 

காட்சி - 3
நெறியாளர்: நூலகங்களை வயசானவர்கள் உபயோகப் படுத்துகிறார்கள். இளைஞர்களும், மாணவர்களும் நூலகம் நோக்கிப் போவதில்லை.  அதற்குக் காரணம் தொலைக்காட்சிகள் என்று சொல்லலாமா?  என்ன நினைக்கிறீர்கள் கனகராஜ்? 
கனகராஜ்: அப்படிச் சொல்ல முடியாது....தொலைக்காட்சியில் போடுகிற சீரியல்கள், சினிமா நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு எல்லாம் அடிமையாகிப் போனது பெரியவர்கள்தானே தவிர  இளைஞர்கள் கிடையாது. வாசித்தலோட முக்கியத்துவத்தை வாலிபர்கள்கிட்டே வலியுறுத்தத் தவறிவிட்டோம்.  மாணவர்கள் நூலகம் போனால் படிப்பில் கவனம் சிதறும்....மதிப்பெண்கள் குறையும்.....என்றும் நினைக்கிறார்கள்.  இளைஞர்கள் தொலைக்காட்சியைக் கூட விரும்பிப் பார்க்கிறதில்லை. அவங்க இணைய தளத்தில் மூழ்கிட்டாங்க.....வாசிப்பிற்கு இணை ஏதுமில்லை என்கிற விஷயத்தை பெற்றவர்கள் எடுத்துச் சொல்லி....வாசிப்பை நேசிக்கச் செய்யணும்....பிள்ளைங்களை புத்தகக் கண்காட்சிகளுக்கு கூட்டிக்கிட்டுப் போகணும்.....புத்தகம் வாங்கிக் கொடுக்கிற பழக்கத்தை உருவாக்கணும்.
நெறியாளர்: பாரதிகுமார் நீங்க எப்படிப் பார்க்கறீங்க?...
பாரதிகுமார்:  மாணவர்களுக்கு நூலகத்தோட சிறப்புகளைச் சொல்லி நூலகத்திற்கு வரவழைக்கிறோம்னு வெச்சுக்குங்க....அங்கு வாசிக்கப் போதுமான அளவிற்கு சிறுவர் புத்தகங்கள் இருக்கிறதா?....குழந்தைகள் இலக்கியப் புத்தகங்கள் எத்தனை இருக்கிறது?....இந்தக் கேள்விகளுக்கு விடைகள் நமக்குச் சாதகமாக இராது. சிறுவர்கள் பத்திரிகை என்றால்.....நான்கு நாளிதழ்களில் வாரந்தோறும் வருகிற இலவச இணைப்புகள்தான்....வேறு சிறுவர் இதழ் என்ன வருகிறது?   இரண்டு பிரபல பத்திரிகை நிறுவனங்கள் குழந்தைகளுக்காக இதழ்கள் நடத்துகின்றன..... அவை நூலகங்களுக்கு வரும் என்று சொல்ல முடியாது.  குழந்தைகள் இதழ், குழந்தைகள் இலக்கிய நூல்கள் நிறைய வரவேண்டும். 
நெறியாளர்: பாரதிகுமார் கருத்துகள் உங்களுக்கு உடன்பாடா..., சித்தார்த்தன்!
சித்தார்த்தன்: முதலில் வருகிற இதழ்கள் இருக்கிற நூல்கள் முதலியனவற்றை வாசிக்க வைப்போம்....அப்புறம் புதுசு, புதுசா புத்தகங்கள், இதழ்கள் வரவழைக்கலாம்....ஒவ்வொரு நூலகத்திலும் வாசகர் வட்டம் என்ற அமைப்பு இருக்கிறது.  அந்த அமைப்பில் அவ்வப்போது கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி வெச்சு பரிசு வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகள் தினம், பாரதி பிறந்த நாள்,  சுதந்திர தின விழா கொண்டாடி அதில் மாணவ மணிகளைப் பேச வைக்கலாம்....இந்த செயல்கள் நூலகத்திற்கு வருகிற மாணவர்களின் எண்ணிக்கையை  அதிகரிக்கச் செய்யும் என்பது எனது கருத்து. 
நெறியாளர்:  நூலகம் போவதால் நன்மைகள் உண்டே தவிர நிச்சயம் தீமைகள் வராது. வீட்டில் பெற்றோர்களும், வகுப்பறையில் ஆசிரியர்களும் மாணவர்களை நூலகம் செல்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். முயன்றால் முடியாதது ஏதுமில்லை. நிகழ்ச்சியில் கலந்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோர் அனைவருக்கும் நிலையத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 
(நிகழ்ச்சி நிறைவுற்றது)

செல்வகதிரவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com