கருவூலம்: திருவாரூர் மாவட்டம்! 

1996இல் உருவாக்கப்பட்ட நான்கு புதிய மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று. தஞ்சாவூர், மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின்
கருவூலம்: திருவாரூர் மாவட்டம்! 

1996இல் உருவாக்கப்பட்ட நான்கு புதிய மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று. தஞ்சாவூர், மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது! ஆரம்பத்தில் ஏ.டி.பன்னீர்செல்வம் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1998 லிருந்து அரசு உத்தரவின்படி மாவட்டத் தலைநகர் பெயரிலேயே "திருவாரூர் மாவட்டம்' என வழங்கப்படுகிறது. 

2161 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தினை கிழக்கே நாகப்பட்டினம் மாவட்டமும், மேற்கே தஞ்சாவூர் மாவட்டமும் தெற்கே பாக் நீரிணையும் சூழ்ந்துள்ளன. இந்த மாவட்டம் 47.2 கி.மீ. நீள கடற்கரை கொண்டது. 
திருவாரூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக மன்னார்குடி, திருவாரூர், வலங்கைமான், குடவாசல், நன்னிலம், நீடாமங்கலம், மற்றும் திருத்துறைப்பூண்டி என 7 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் எல்லைக்குள் 4 சட்டமன்றத் தொகுதிகள், உள்ளன. திருவாரூர் நகரமே இதன் தலைநகரமாகும்.

வரலாற்றுச் சிறப்புகள்!
பண்டைய சோழ மண்டலத்தின் ஒரு பகுதிதான் இந்நிலப்பகுதி. சோழ நாட்டின் தலைநகரமாக இருந்துள்ள 5 நகரங்களில் திருவாரூர் நகரமும் ஒன்று. முதலாம் குலோத்துங்க சோழனின் (1070 -1122) தலைநகரமாகத் திகழ்ந்தது. 

முற்கால சோழப் பேரரசுக்கு வித்திட்ட கரிகால் சோழனின் வெண்ணிப் பறந்தலைப் போர், இங்குள்ள வெண்ணியில்தான் நடைபெற்றது. 

கரிகாலனுக்கும் முற்பட்ட சோழ மன்னர்களான முசுகுந்தன், புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைத் தேர் ஏற்றிக் கொன்ற மனு நீதிச் சோழன் உள்ளிட்டோர் ஆட்சி செய்த பகுதியும் இப்பிரதேம்தான்!

இம்மாவட்டத்திற்குள் உள்ள நீடாமங்கலம் சங்க காலத்தில் "நீடூர்' என்றழைக்கப்பட்டது. இவ்வூர் சங்க கால நாடான மிழலை நாட்டின் தலைநகரமாக இருந்துள்ளது. 

பின் வந்த காலங்களில் இப்பகுதி இடைக்கால சோழ மன்னர்கள் விஜயநகர பேரரசு, டெல்லி சுல்தான்கள், நாயக்கர்கள், தஞ்சாவூர் மராத்தியர்கள் மற்றும் பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகவும் இருந்துள்ளது. 

1799 இல் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இப்பகுதி ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் வந்தது. அதனால் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியானது. 

1799 இல் ஆங்கிலேயர்களால் நிர்வாக வசதிக்காக தஞ்சை மாவட்டம் உருவானது. அப்பொழுது அதன் ஒரு பகுதியாக இருந்தது. மிகப் பெரியதாக இருந்த தஞ்சை மாவட்டம் 1991 இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன்பின் 1997 இல் அன்றைய தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளைப் பிரித்து இணைத்து இன்றைய திருவாரூர் மாவட்டமானது.

இயற்கை வளம்! 
காவிரி டெல்டா பகுதியான இம்மாவட்டத்தில் காவிரியின் கிளை ஆறுகளான ஓடம்போக்கி, வெட்டாறு, வெள்ளாறு, முடிகொண்டான், நந்தலாறு, திருமலைராயன் ஆறு, கோரையாறு, காட்டாறு, பந்தலையாறு, ஐய்யனாறு, அரிசந்திரநதி, முல்லையாறு, பாமணியாறு, அடப்பாறு, வடலாறு உள்ளிட்ட வை பாய்ந்து வளப்படுத்துகின்றன. 

மேலும் இங்கு வடுவூர் ஏரி, திருமேனி ஏரி, உதய மார்த்தாண்டபுரம் ஏரி, மூவனூர் ஏரி, ஆகிய ஏரிகளில் நீரை சேமித்து வைத்து பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 12,000 ஏக்கருக்கும் அதிகமான ரிசர்வ் வனப்பகுதியில் தேக்கு உள்ளிட்ட பலவகை மரங்கள் உள்ளன. 
விவசாயமே மாவட்டத்தின் பிரதான தொழிலாகும். நெல், கரும்பு, பருத்தி, தென்னை, போன்றவை முக்கியமான விளைபொருட்களாகும். விவசாயம் சார்ந்த ஆடு, மாடு, கோழி வளர்ப்பும் முக்கிய தொழில்களாக உள்ளன. 

புகழ் பெற்ற பழமையான வழிபாட்டுத் தலங்கள்! 

திருவாரூர் தியாகராஜர் ஆலயம்!

தமிழகத்தின் பெரிய கோயில்களில் தியாகராஜர் ஆலயமும் ஒன்று! 33 ஏக்கர் நிலப்பரப்பில் ஆலய வளாகம் உள்ளது. 9 ராஜகோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப் பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 பெரிய பிரகாரங்கள், 3 நந்த வனங்கள் 100 க்கும் மேற்பட்ட சன்னதிகள், 24 க்கும் மேற்பட்ட உள்கோயில்கள், என அமைந்த பிரம்மாண்டமான ஆலயம்!

இவ்விடத்தில் எப்பொழுது கோயில் உருவானது என்று அறியப்படவில்லை. ஆனால் சிதம்பரத்தில் உள்ள கோயிலைவிடப் பழமையானது. 

இது பல்லவர் காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்டது. பின்னர் இடைக்கால சோழர்கள் காலத்தில் கண்டராதித்த சோவரின் மனைவி செம்பியன் மாதேவியால் (கி.பி. 910 -1001) கற்கோயிலாகக் கட்டப்பட்டது. 

தேவாரப் பாடல் பெற்ற தலம். பஞ்சபூத ஆலயங்களில் பிருத்வி (பூமி) ஆலயம். கோயிலுக்கு அருகில் "கமலாலயம்' என்னும் தெப்பக்குளம் உள்ளது. நீர் நிறைந்து இருக்கும்போது சமுத்திரம் போன்று காட்சியளிக்கும் மிகப் பெரிய குளம் இது! 

இந்த ஆலய வளாகத்தில் முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 871 - 907) கல்வெட்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மராத்திய மன்னர் சரபோஜி காலம் வரையிலான கல்வெட்டுகள் பல உள்ளன. 

கல்தேர்!
மனு நீதிச் சோழன் பசுவிற்கு நீதி வழங்க தன் மகனையே தேர் ஏற்றிக் கொன்ற நிகழ்வை சித்தரிக்கும் வகையில் கல்தேர் ஒன்று கோயிலுக்கு வடகிழக்கே (பின் வந்த சோழ மன்னர்களால்) வடிக்கப்பட்டுள்ளது.

ஆழித்தேர்!

தியாகராஜர் ஆலயத்தில் உள்ள ஆழித்தேர் என்றழைக்கப்படும் திருத்தேரே தமிழகத்தின் மிகப் பெரிய தேர்! இத்தேர் எரிந்து போனதால் தேரோட்டம் பல ஆண்டுகள் நின்று போனது! பின் மீண்டும் புதிதாகச் செய்யப்பட்டு தற்போது தேரோட்டத் திருவிழா நடைபெறுகிறது. 

இத்தேர் அலங்கரிக்கப்படாத நிலையில் 220 டன் எடையும், 30 அடி உயரமும் இருக்கும். தேர்த்திருவிழாவின்போது மூங்கில் மற்றும் சவுக்கு கொண்டு அலங்கரிக்கப்பட்டபின் 96 அடி உயரமும் சுமார் 300 டன் எடையும் கொண்டதாக ஆகிவிடுகிறது. இத்தேருக்கு 2.6 மீ. விட்டம் கொண்ட ஆறு சக்கரங்கள் உள்ளன.
முன்பு மனிதர்களுடன் யானைகளும் சேர்ந்து தேரை இழுத்துள்ளன. தேர் அதன் நிலைக்கு வந்து சேர்வதற்கே மாதக்கணக்கானது உண்டு. 

ஆனால் இப்பொழுது திருச்சி பாரத் மிகுமின் நிறுவனம் தயாரித்து அளித்த ஹைட்ராலிக் பிரேக் என்னும் நவீன தொழில் நுட்பத்துடன் 4 புல்டோசர்கள் கொண்டு தேர் இழுக்கப்படுவதால் விரைந்து நிலைக்கு வந்து விடுகிறது. 

மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயம்!
தக்ஷிண துவாரகை என்று புகழப்படும் கோயில். 23 ஏக்கர் பரப்பளவில் 16 கோபுரங்கள் 7 மண்டபங்கள், 24 சன்னதிகள் மற்றும் பிரகாரங்களும் கொண்டது. பரப்பளவில் ஒன்பதாவது பெரிய இந்துக் கோயில். இக்கோயில் குலோத்துங்க சோழனால் (கி.பி.1070 -1125) கட்டப்பட்டது. 

இக்கோயிலைச் சார்ந்த "ஹரித்ரா நதி' என்றழைக்கப்படும் தெப்பக்குளம் 1158 அடி நீளமும்,ஸ 837 அடி அகலமும் கொண்டது. இந்தியாவில் உள்ள பெரிய கோயில் சார்ந்த குளங்களில் இதுவும் ஒன்று! 

மன்னார்குடி மல்லிநாத சுவாமி ஜினாலயம்! 
இந்த சமணர்களின் கோயில் ராஜகோபுரம், கர்ப்பக்கிரகம், அந்த்ரானம், அர்த்த மண்டபம், முக மண்டபம், மகாமண்டபம், கொடிமரம் என பல அமைப்புகளைக் கொணடது! இங்கு 15 ஆவது தீர்த்தங்கரரான மல்லிநாதரே மூலவராக உள்ளார். மகாவீரர் மற்றும் ரிஷபதேவரின் சிலைகளும் இங்குள்ளன.

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்!
தேவாரப் பாடல் பெற்ற தலம். பண்டைய கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் புகழ் பெற்ற ஆலயங்களுள் இதுவும் ஒன்று!

இங்குள்ள வெüவால் நந்தி மண்டபம் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. இம்மண்டபம் நடுவில் தூணில்லாமல் அகலமாக இருக்கும்! இதன் கூரை சுண்ணாம்பு கொண்டு ஒட்டப்பட்ட வளைவான அமைப்பு கொண்டது. 

வெüவால் தங்க முடியாதபடி உள்ளதால் வெளவால் நந்தி மண்டபம் என்றழைக்கப்படுகிறது. கட்டிட வேலைப்பாட்டில் சிறப்பு வாய்ந்தது. மிகவும் அபூர்வமானதும் கூட! இவ்வாலயத்தின் கர்ப்பகிரகத்தின் மேல் இருக்கும் 16 சிம்மங்கள் தாங்கிய வடிவில் உள்ள விமானமும், நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளும் சிறப்பானவை!

கூத்தனூர் சரஸ்வதி ஆலயம்!
மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம். தமிழகத்தில் சரஸ்வதி அம்மனுக்கு என கட்டப்பட்ட மிகப் பெரிய தனிக்கோயில் இது மட்டுமே! இக்கோயிலே இரண்டாம் ராஜராஜசோழனின் அவைப்புலவராக இருந்த ஒட்டக்கூத்தர் கட்டியதாக தல புராணம் கூறுகிறது. மன்னரால் இவ்வூர் ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டதால் அவர் பெயராலேயே "கூத்தனூர்' என்று அழைக்கப்படுகிறது. ஒற்றைப் பிரகாரமும் ராஜகோபுரமும் கொண்ட இக்கோயிலில் ஒட்டக் கூத்தருக்கு சிலையும் உள்ளது. இங்கு விஜயதசமி நாளில் இங்கு நடத்தப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி பிரபலமானது. அன்று ஏராளமான குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 

ஊத்துக்காடு ஸ்ரீகாளிங்கநர்த்தன கிருஷ்ணர் ஆலயம்!
இந்த ஆலயத்தில் இருக்கும் உற்சவர் சிலை விசேஷமானது. காளிங்கன் என்ற நாகத்தின் மீது கிருஷ்ணர் நர்த்தனமாடும் கோலத்தில் உள்ள சிலை இது! இச்சிலையில் கிருஷ்ணரின் பாதம், காளிங்கனின் தலைமீது பதிந்தது போல் தோற்றமளித்தாலும் இடையே நூல் விட்டு எடுக்கும் அளவில் மெல்லிய இடைவெளி உள்ளது. மற்றொரு பாதமோ தூக்கியபடி நர்த்தன பாவத்தில் உள்ளது. ஒரு கையின் கட்டை விரல் மட்டுமே காலிங்கனின் வாலைத் தொட்டபடி இருக்கும். மற்றபடி கிருஷ்ணருக்கும், காளிங்கனுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் கிடையாது. இதுவே இச்சிலையின் சிறப்பு. 

இத்தலத்தின் மற்றொரு சிறப்பு, கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவி ஸ்ரீவேங்கட சுப்பையர் இக்கிருஷ்ணரைப் போற்றி, ..."அலைபாயுதே கண்ணா...'... "பால் வடியும் முகம்'...."என்ன தவம் செய்தனை‘ ....போன்ற புகழ் பெற்ற பல நூறு பாடல்கள் இயற்றியுள்ளார். இவருக்கு இங்கு தனி சன்னிதியும் உள்ளது.
(தொடரும்) 

கே. பார்வதி, 
திருநெல்வேலி டவுன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com