மருமகள் தேர்வு!

சீதபுரி என்னும் ஊர் எப்போதும் மிகவும் குளிராக இருக்கும்! அவ்வூரில் தனவந்தன் என்று ஒரு செல்வந்தன் இருந்தான். பல தொழில்களில் முதலீடு செய்து பெரும் பணம் சேர்த்திருந்தான்!
மருமகள் தேர்வு!

சீதபுரி என்னும் ஊர் எப்போதும் மிகவும் குளிராக இருக்கும்! அவ்வூரில் தனவந்தன் என்று ஒரு செல்வந்தன் இருந்தான். பல தொழில்களில் முதலீடு செய்து பெரும் பணம் சேர்த்திருந்தான்! நன்றாக உழைத்தான். நல்ல பலன் கிடைத்தது! அவனுக்கு ஒரு மகன். மகனையும் வியாபாரத்தில் ஈடுபடுத்தினான். மகனும் தகப்பனின் தொழிலை செவ்வனே செய்து வந்தான். ஒழுக்கமுடன் இருந்தான். பொறுப்புடன் தொழில்களைக் கவனித்தான்.

மகனுக்குத் திருமணம் செய்ய எண்ணினான் தனவந்தன். வரும் மருமகள் குடும்பத்தை நன்றாக நிர்வாகம் செய்பவளாகவும், பொறுப்புள்ளவளாகவும்
இருக்கவேண்டும் என்று நினைத்தான் தனவந்தன்! 

ஒரு நாள் நல்ல குளிர்! தனவந்தன் பிச்சைக்கார வேடம் பூண்டு ஒரு வீட்டிற்குச் சென்றான். 
""அம்மா தாயே!....பசிக்கிறது...சாப்பிட்டு இரண்டு நாளாயிற்று....சாப்பாடு ஏதாவது இருந்தால் கொடுங்கள்! குளிர் தாங்கவில்லை! ஒரு பழைய சட்டையோ, போர்வையோ இருந்தால் கொடுங்கள்'' என்றான். 

அந்த வீட்டுப் பெண்ணிற்கு அவன் மீது இரக்கம் உண்டாயிற்று! 
""இந்த சீதபுரியில் நீ எப்படி போர்வையில்லாமல் இருக்கிறாய்? ஆனால் என்னிடம் போர்வையோ சட்டையோ இல்லை....கொஞ்சம் சாதம் தருகிறேன்
சாப்பிட்டுவிட்டுப் போ'' என்று உணவைக் கொடுத்தாள் அந்தப் பெண். தனவந்தன் அதை வாங்கிக்கொண்டு சென்று விட்டான். மனதில், "இந்தப் பெண் மருமகளாக
வர தகுதியில்லாதவள்' என்று நினைத்துக் கொண்டான். 
வேறொரு வீட்டிற்குச் சென்றான். அங்கும், ""அம்மா தாயே!....பசிக்கிறது...சாப்பிட்டு இரண்டு நாளாயிற்று....சாப்பாடு ஏதாவது இருந்தால் கொடுங்கள்! குளிர்தாங்கவில்லை! ஒரு பழைய சட்டையோ, போர்வையோ இருந்தால் கொடுங்கள்'' என்றான். 
இந்தப் பெண்ணும் இரக்க சுபாவம் உடையவளே. அவள், ""என் தாயார் திடீரென்று வந்த விருந்தாளிகளுக்குச் சோறிட்டுவிட்டதால் என்னால் உணவுதர இயலாது.
ஆனால் உனக்கு என் தந்தையின் பழைய சட்டையைத் தருகிறேன்.'' என்று சட்டையைக் கொடுத்தாள். 
இந்தப் பெண்ணும் நமக்கு மருமகளாக வரத் தகுதியற்றவளே என நினைத்தான் தனவந்தன். 
மற்றும் ஒரு வீட்டிற்குச் சென்றான் தனவந்தன். அங்கும் முன்பு போலவே கேட்க, அந்தப் பெண் தனவந்தனை நோக்கி, ""பசி. என்கிறாய்!....குளிர் என்கிறாய்!....சரி,...
உனக்கு உணவும், சட்டையும் தருகிறேன்....ஆனால் உன்னைப் பார்த்தால் ஆரோக்கியமான மனிதனாகத் தெரிகிறதே!...ஏதாவது வேலை வெட்டி செய்து பிழைக்கக்கூடாதா? இனி இங்கே பிச்சை கேட்டு வராதே! 
இந்த உணவுக்குக் கூட நீ வேலை செய்ய விரும்பினால் என் தோட்டத்தில் சிறிது நேரம் வேலை இருக்கிறது! அதைச் செய்துவிட்டுப் போகலாம்!'' என்றாள்
கண்டிப்புடன்! 
ஆஹா!...உழைப்பின் அருமை தெரிந்தவள் இந்தப் பெண்!...அத்துடன் இரக்கமும், தர்ம சிந்தனையும் இவளுக்கு இருக்கிறது. நாளை முறையாக மகனுக்குப் பெண்
கேட்டு இந்த வீட்டிற்கு வரவேண்டும் என முடிவு செய்து கொண்டான் தனவந்தன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com