கருவூலம்: தூத்துக்குடி மாவட்டம்!

மாவட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பாசன வசதி இல்லாததால், இடைப்பட்ட பகுதிகளில் மட்டும் புஞ்சைப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
கருவூலம்: தூத்துக்குடி மாவட்டம்!

விவசாயம்

மாவட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பாசன வசதி இல்லாததால், இடைப்பட்ட பகுதிகளில் மட்டும் புஞ்சைப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.  கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் தாலுக்காக்களில் பருத்தியும், மிளகாயும் அதிகம் விளைகிறது. இதைத் தவிர கம்பு, உளுந்து, சோளம், மல்லி, வெங்காயம் முதலியவை நல்ல விளைச்சல் உள்ளவை. 

தொழில் வளம்

பாரம்பரியமான தொழில்களாக முத்துக் குளித்தல், மீன் பிடித்தல், மட்பாண்டங்கள் செய்தல், பாய் பின்னுதல், உப்புக் காய்ச்சுதல், கைத்தறி நெசவு முதலியவை நடைபெறுகிறது. 

உப்பு உற்பத்தி!

வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி, பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. ஆண்டுக்கு சராசரி 25 லட்சம் டன்  உப்பு உற்பத்தியாகிறது.  நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் 2 ஆவது இடத்தில் உள்ளது. சுமார் 30,000 தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.  

முத்துக்குளித்தல்!

இரு பகுதி ஓடுகளைக் கொண்டது சிப்பி என்ற உயிரினம்.  இந்த சிப்பிக்குள் சிறிய திடப்பொருள் புகுந்து விட்டால் உயிருள்ள சிப்பி, தன்  வழுவழுப்பான படலத்தால் அதை மூடிவிடும். சிப்பியின் உடலில் சுரக்கும் திரவம் திடப்பொருளில் படிப்படியாகப் படிந்து முத்தாக மாறுகிறது. இப்படி முத்து உருவாக 3 முதல் 6 ஆண்டுகள் வரை ஆகும். 

முத்துச் சிப்பிகளை கடலடியிலிருந்து எடுத்து வருவதையே முத்துக்குளித்தல் என்பார்கள். கடலடியில் இருக்கும் முத்துப் படுகைகளில் இருந்து ஆயிரக்கணக்கில் சிப்பிகளை எடுத்து வருவார்கள். பின்னர் இவற்றில் இருந்து முத்துக்களைப் பிரித்து எடுப்பார்கள்.  இத்தகைய இயற்கை முத்துக்கள் கிடைப்பது தற்போது குறைந்துவிட்டது.

செயற்கை முத்துக்கள்!

19 ஆம் நூற்றாண்டின்இறுதி வரை இயற்கை முத்துக்கள் மட்டுமே இருந்தது. 1896 இல் ஜப்பான் நாட்டில்தான் முதல்முதலில் செயற்கை முத்து உருவாக்கப்பட்டது.

பளபளப்பான நுண்துகள் ஒன்றை முத்துச் சிப்பி ஒன்றின் உடலுக்குள் செலுத்தி பின் அந்த முத்துச்சிப்பியை ஒரு கூட்டினுள் வைத்து அதனை நீருக்குள் இருக்கும்படி வைத்துவிடுவார்கள். இதில் 3 முதல் 6 ஆண்டுகளுக்குள் முத்து உருவாகிவிடும். 

செயற்கை முத்து உற்பத்தி குறித்த பயிற்சி தூத்துக்குடியில் C.M.F.R.I.  (CENTRAL MARINE FISHERIES RESEARCH INSTITUTE) மூலம் அளிக்கப்படுகிறது. நம் நாட்டில் முதன்முதலில் செயற்கை முத்து 1973 இல் தூத்துக்குடியில்தான் உருவாக்கப்பட்டது. இன்று இத்தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம். 

பவளப்பாறைகள்!

மன்னார் வளைகுடாவில் 117 வகையான பவளப்பாறைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.  முன்பு பவளப்பாறைகள் வெட்டியெடுப்பது அதிகமான அளவில் நடந்து வந்தது.  இதனால் கடல் சூழலில் மிகப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்ப்பட்டன. அதனால் 2005 ஆம் ஆண்டோடு தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனாலும் பவளப்பாறைகளின் இழப்பால் தூத்துக்குடிடை ஒட்டிய விலங்கு சல்லி தீவு கடலில் மூழ்கிவிட்டது. அதேபோல் 16 ஹெக்டேராக இருந்த வான்தீவு 5.7 ஹெக்டேராக குறைந்து விட்டது. 

பிற தொழிற்சாலைகள்!

ஸ்பிக், தூத்துக்குடி ஆர்கானிக் கெமிக்கல்ஸ், தாரங்கதாரா கெமிக்கல்ஸ், கோவில்பட்டியில் சிறிய அளவிலான தீப்பெட்டித் தொழிற்சாலைகள் உள்ளிட்ட சில தொழிற்சாலைகள் இங்கு செயல்படுகின்றன. 

பனை ஓலை, பனை நார் கொண்டு பொருட்கள் தயாரித்தல், நுங்கு மற்றும் பதநீர் வியாபாரம், கருப்பட்டி செய்தல் போன்ற தொழில்கள் குறிப்பிட்ட அளவு நடைபெறுகிறது. 

மீன் பிடித்தல்!

வளமான மன்னார் வளைகுடா பகுதியில் இருப்பதால் மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக உள்ளது. மீன்களைப் பாதுகாக்க குளிர்பதன சாலைகள் பல உள்ளன.  

மின் உற்பத்தி!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் மூலம் 1080 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.  செங்கோட்டை கணவாய் வழியாக வீடும் காற்றைக்கொண்டு கயத்தாறு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தியும் நடைபெறுகிறது.

புதியம்புதூர் ஆயத்த ஆடைகள்!

புதியம்புதூரில் 300 க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடைகள் (READY MADE) தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன.  

வ.உ.சி. துறைமுகம்!

தூத்துக்குடி வ.உ.சிதம்பனார் துறைமுகம் 12 முக்கியமான துறைமுகங்களில் ஒன்று! தமிழகத்தின் இரண்டாவது பெரிய துறைமுகம். பல நூற்றாண்டுகளாக முத்து வளர்ப்பிற்கும், கடல் வணிகத்திற்கும் பெயர் பெற்றது. கி.பி. 7 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை, பாண்டியர், மற்றும் சோழ மன்னர்களின் ஆட்சியில் இயற்கைத் துறைமுகமாக சிறப்புடன் திகழ்ந்துள்ளது. 

வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்தும், அந்நிய பொருட்களை புறக்கணிக்கவும், ஆங்கிலேயர்களின் அனைத்து அடக்கு முறைகளையும் முறியடித்து எஸ்.எஸ்.காலியா, லாவோஸ் என்ற இருண்டு கப்பல்களை தூத்துக்குடி துறைமுகத்திற்குக் கொண்டுவந்தார். இவற்றை தூத்துக்குடி, கொழும்பு இடையே சுதேசிக் கப்பல் கழகம் என்ற பெயரில் இயக்கினார். 

அவரது நினைவைப் போற்றும் வகையில் இத்துறைமுகத்திற்கு அன்னாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  1974 இல் புதிய தொழில்நுட்பங்களுடன் செயற்கைத் துறைமுகம் கட்டப்பட்டு, அதனுடன் இயற்கை துறைமுகம் இணைக்கப்பட்டு நாட்டின் பெரிய துறைமுகமாக இன்று செயல்படுகிறது! 

ஆண்டுக்கு சுமார் 37 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்து வருகிறது.  அமெரிக்கா, சீனா, இலங்கை, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சரக்குகள் பரிவர்த்தனை நடைபெறுகிறது!

பழமையான புகழ் பெற்ற ஆலயங்கள்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்!

முருகனின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடு! மற்ற 5 படை வீடுகள் குன்றின் மீதிருக்க, இத்தலம் மட்டும் கடற்கரையில் அமைந்துள்ளது. அறுபடை வீடுகளில் இக்கோயிலே பெரியது! 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம், தேவார பதிகம், அருணகிரிநாதர் பாடல் என பல இலக்கிய நூல்களிலும் இத்தலம் பற்றிய குறிப்புகள் உள்ளன. திருச்சீரலைவாய் என்பதே இவ்வூரின் பழைய பெயர். 

இக்கோயில் 1646 லிருந்து 1648 வரையிலான காலகட்டத்தில் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டது. கோயிலை மீட்பதற்கான  உள்ளூர் மக்களின் முயற்சிகள் தோல்வியடைந்தன. பிறகு நாயக்க மன்னர்களே டச்சுக்காரர்களை கோயிலை விட்டு வெளியேற்றினர். 

அப்பொழுதும் அவர்கள் முருகனின் மூல விக்கிரகத்தை கப்பலில் எடுத்துச் சென்றனர். அக்கப்பல் பயங்கர புயல் காற்றில் சிக்கிக் கொண்டது! தங்கள் தவற்றை உணர்ந்து விக்கிரகத்தைக் கடலில் போட்டுவிட்டனர்! பின்னரே புயல் காற்று நின்றது. 

அதன்பின் இறைவன் செந்தில் ஆண்டவரே "வடமலையப்ப பிள்ளை' என்ற ஒரு பக்தரின் கனவில் சிலை இருக்கும் இடத்தைக் கூறினார். 1653 இல் வடமலையப்பரும், ஆதித்த நாடார் என்பவரும் கடலுக்கு ஒரு படகில் சென்று சிலையை மீட்டனர்!  இந்த உண்மை சரித்திர நிகழ்வாக ஓவியங்களாக கோயிலில் தீட்டப்பட்டுள்ளது!

இங்குள்ள நாழிக்கிணறு கடற்கரையை ஒட்டி இருந்தபோதும் இன்றுவரை சுவையான நீருடன் புனித தீர்த்தமாக திகழ்கிறது. 

முருகன் தேவர்களைத் துன்புறுத்திய சூரபத்மன் என்ற அசுரனை அழித்த தலம் என்பதால் இங்கு நடைபெறும் கந்தசஷ்டிதிருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது,. "சூரசம்ஹாரம்'  நிகழ்ச்சையைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவர். 

கழுகுமலை வெட்டுவான் கோயில்!

தமிழக அரசால் புராதனமான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கழுகுமலை குன்றும், கோயிலும் கோவில்பட்டி அருகே உள்ளது. உலகமே வியந்து போற்றும்படியான சிற்பக் கலையை தன்னகத்தே கொண்டுள்ளது. தென் தமிழகத்தின் எல்லோரா என்றும் அழைக்கப்படுகிறது.  குன்றில் மூன்று கோயில்கள் உள்ளன. ஒரு முழுமை பெறாத கோயிலும், கழுகாசல மூர்த்தி எனப்படும் முருகன் கோயிலும் மற்றும் சமணப் படுக்கைகளுடன் கூடிய பகுதியும் ஆகும். 

வெட்டுவான் கோயில்!

பாண்டிய மன்னர்களால் 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. எல்லோரா கைலாச நாதர் கோயில் போன்றும், மாமல்லபுரம் கைலாசநாதர் கோயில் போன்றும் தனிச் சிறப்பு மிக்கது. பார்ப்பதற்கு கற்சுவரால் ஆன மதிலால் சூழப்பட்டது போல் காட்சியளிக்கிறது.  நான்கு பக்கமும் மலையை வெட்டியெடுத்து நடுவில் உள்ள பாறையில் கோயிலை செதுக்கியுள்ளனர். இதற்கு பல ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பதே உண்மை!  இக்கோயிலின் பணி முற்றுப் பெறவில்லை. சிகரம் மட்டுமே முடிந்துள்ளது. கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளன. இங்குள்ள உமா மஹேஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகிய சிலைகளின் சிற்ப வேலைப்பாடுகள் எழில் மிக்கவை. 

சமணர் பள்ளிகள்!

பாண்டிய மன்னன் பராந்த நெடுஞ்டையான் காலத்தைச் சேர்ந்தது. இங்குள்ள சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் கல்வெட்டுகள் மற்றும் சமண படுக்கைகளும் குறிப்பிடத்தக்கவை. அந்நாளில் சமணர் பள்ளியாக இருந்துள்ளது. 

கழுகு மலை கழுகாசல மூர்த்தி கோயில்

முருகனுக்கான குடைவரைக்கோயில். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம். தமிழ்ப்புலவர் அண்ணாமலை ரெட்டியாரின் புகழ் பெற்ற "காவடிச் சிந்து' பாடல்கள் எல்லாம் இத்தல முருகனுக்காக பாடப்பட்டவையே! (இவ்வகைப் பாடல்கள் பற்றி பிறகு பார்ப்போம்)

குலசேகரப்பட்டினம் - முத்தாரம்மன் கோயில்!

பல நூற்றாண்டுகளுக்கு முன் புகழ் பெற்ற துறைமுகமாக இருந்துள்ளது. முதலாம் மாறவர்ம குலசேகர பாண்டினன் (1268 - 1308) பெயரைக் கொண்டே "குலசேகரப்பட்டினம்' என்ற பெயரைப் பெற்றது. இங்குள்ள முத்தாரம்மன் கோயில் மாவட்டத்தின் புகழ்பெற்ற சக்தி ஸ்தலம்! இங்கு நடைபெறும் நவராத்திரி திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த பத்து நாட்களில் சுமார் 15,00000 பேர் வருகை தருகின்றனர்! 

மெய்ஞானபுரம் தேவாலயம்!

(THE PARI PAULIN CHURCH)

1847 இல் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தின் முன் பகுதியில் 192 அடி உயரத்தில் வானைத் தொடுவது போன்ற உயரமான கோபுரம் உள்ளது. 

கற்குவேல் ஐய்யனார் கோயில்!

இயற்கை எழில் வாய்ந்த செம்மண் தேரியில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது இக்கோயில். பல நூற்றாண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் நடைபெறும் "கள்ளர் வெட்டுத் திருவிழா' பிரசித்தி பெற்ற விழாவாகும்.  

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம்!

400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயம்! தேவாலயத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பானது.  சிந்தளக்கரை - வெக்காளியம்மன்!

இங்குள்ள 42 அடி உயர வெக்காளியம்மன் சிலையும் 72 அடி நீளத்திற்கு பாம்பின் மீது பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி அளிக்கும் மஹாவிஷ்ணு சிலையும் குறிப்பிடத்தக்கவை. 

இவை தவிர பிரத்யங்கரா தேவி ஆலயம், வன திருப்பதி ஆலயம், நவகைலாயம், மற்றும் நவ திருப்பதி கோயில்கள் என பல புகழ்பெற்ற ஆலயங்கள் இங்குள்ளன. 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com