உயிரின் விலை!

இந்தக் குன்னூர் ரொம்ப அழகா இருக்கே....மலைகளும், மரங்களும் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு!...இங்கே பறவைங்க இருக்கு....உங்களையும் பறவைகளாகவே பார்க்கிறேன்... 
உயிரின் விலை!

அரங்கம்

காட்சி - 1
இடம்- வகுப்பறை
மாந்தர்- ஆசிரியை அருள்மேரி, 
ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்.

(அருள்மேரி அந்தப் பள்ளிக்குப் புதிதாக வந்திருக்கின்றனர்)

அருள்மேரி: இந்தக் குன்னூர் ரொம்ப அழகா இருக்கே....மலைகளும், மரங்களும் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு!...இங்கே பறவைங்க இருக்கு....உங்களையும் பறவைகளாகவே பார்க்கிறேன்...
மாணவி: ரொம்ப மகிழ்ச்சி டீச்சர்...இங்கே பறவைங்க இருக்கு...கூடவே காட்டெருமை, யானை, சிறுத்தையெல்லாம் இருக்கு...
மாணவன்: போன வாரம் எங்க தெருவுக்கு நடு ராத்திரியிலே ஒரு சிறுத்தை வந்திடுச்சு!.....வெளியே கட்டியிருந்த ஒரு ஆட்டைப் பிடிச்சு இழுத்திட்டுப் போச்சு... பொழுது விடியறவரைக்கும் எல்லோரும் மூச்சைப் பிடிச்சுக்கிட்டு உறைஞ்சு போயிருந்தோம்!
மாணவி: ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு யானை, பக்கத்திலே இருக்கிற "சுல்தானா காட்டேஜ்' தோட்டத்துக்கு வந்திடுச்சு.... 
பலாமரத்திலே இருந்த பலாப்பழத்தைக் கிளையோட ஒடிச்சு.....பழத்தைக் காலிலே வெச்சுப் பிளந்து தின்னுருக்கு...மறுநாள் காலையிலே கால்தடத்தையும் சிதறிக்கிடந்த பழத்தையும் பார்த்தோம்!....
அருள் மேரி: இதெல்லாம் கேட்க எனக்கு வியப்பாவும் இருக்கு....திகைப்பாவும் இருக்கு....செய்தித்தாள்...,தொலைக்காட்சியிலே பார்த்திருக்கேன்...நீங்க சொல்றதைப் பார்க்கும்போது பயமாவே இருக்கு....இங்கே கூடுதலா எச்சரிக்கை தேவை. 
மாணவி: (வேடிக்கையாக) அதுக்காக நீங்க வேறே ஊருக்குப் போயிடாதீங்க....
அருள் மேரி: நான் போகமாட்டேன்....ரொம்ப நாளா இங்கே அறிவியல் பாடத்துக்கு ஆசிரியர் இல்லே....நான் வந்திருக்கேன்....இனிமே உங்களுக்கு அந்தக் கவலை இல்லே...

காட்சி-2
இடம்-வகுப்பறை
மாந்தர்-அருள்மேரி, மாணவர்கள்.

மாணவி: (அருள்மேரியிடம்) இந்த விலங்கெல்லாம் ஏன் காட்டை விட்டு நாம இருக்கற பக்கம் வருதுங்க?...
அருள்மேரி; அதுங்க வாழற காடு இது!...நாமதான் இதை அழிச்சு நம்ம வசதிக்காக இங்கே வந்திருக்கோம்!....தேயிலை எஸ்டேட்...காட்டேஜ்...வீடு...ஓட்டல்....அலுவலகம்....தொழிற்சாலை இப்படி வரிசையா வந்திடுச்சு!...தேன்கூடு கலைஞ்சா தேனீயெல்லாம் பதற்றத்தோட அலையுமே அப்படித்தான் இந்த விலங்குகளும் அலையுது!....உணவுக்கும்...நீருக்கும்...தங்குமிடத்துக்கும்தான் இந்த அலைச்சல்.....
மாணவன்: அதுங்க மனிதர்களை ஏன் தாக்குதுங்க?...
அருள்மேரி: அதுங்க இருக்கற இடத்தை நாம ஆக்கிரமிச்சா....அதுங்க வழியிலே நாம குறுக்கிட்டாதான் இந்தப் பிரச்னை!....நாம் இப்போ மனிதர்களிடமே விழிப்பா இருக்க வேண்டி ய காலம்....விலங்குகளிடமோ ரொம்ப ரொம்ப விழிப்பாவும் எச்சரிக்கையாவும் இருக்கணும்.
மாணவி: காட்டெருமை, யானை, சிறுத்தை இதெல்லாம் நாம இருக்கற இடத்துக்கு வர்றதும் ஒரு பயம் கலந்த மகிழ்ச்சி...."த்ரில்லிங்' தானே டீச்சர்?
அருள்மேரி: உன் பேரு என்னம்மா?
பக்கத்து மாணவி: பேரு ரோஸலின்...அவளும் இந்தப் பள்ளிக்கூடத்துக்குப் புதுசு...
அருள்மேரி: ஆடு மாடெல்லாம் போகுது....பாடுபட்டு வளர்த்த பயிர் அழியுது....குடிசை...ஓட்டு வீடுகள்ல இருக்கற மனிதர்களோட உயிருக்கும் ஆபத்து வருது....இரவிலே வெளியே வரமுடியலே....வேலைக்குப் போக முடியலே....பகல்லேயே தேயிலைத் தோட்டத்துக்குச் சிறுத்தை வருதே....இதெல்லாம் "த்ரில்லிங்'கா?.....

(ரோஸலின் அமைதியாக இருக்கிறாள்.....பள்ளி மணி ஒலிக்கிறது....ஒரு கார் 
வருகிறது...ரோஸலின் அதில் ஏறிப் போகிறாள்...அருள்மேரி சற்று நேரம் வகுப்பில் மாணவர்களோடு இருக்கிறார்....அவர்களின் இருப்பிடம் .....பெற்றோர் பற்றிக் கேட்கிறார். பின் புறப்படுகிறார்)

காட்சி-3
இடம்-சாலையோரம்
மாந்தர்-அருள்மேரி, ரோஸலின், மஞ்சுளா.

(மாலை நேரம். அருள்மேரி தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் மாணவி மஞ்சுளாவுடன் நடந்து வருகிறார்)

மஞ்சுளா: டீச்சர்,...இந்த ரோஸலின் ஏன் இப்படிப் பேசறா?
அருள்மேரி: "இளங்கன்று பயமறியாது'ன்னு சொல்லுவாங்க.....நாம பயப்படவேண்டிய விஷயங்கள் சில இருக்குன்னு பின்னாலே புரிஞ்சுக்குவா....
மஞ்சுளா: எது கேட்டாலும் அவங்க அப்பா உடனே வாங்கிக் கொடுப்பாராம்!....ஒன்பதாம் வகுப்பு படிக்கிற இவளுக்குப் பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்திருக்காரு....பள்ளியிலே சேர்ந்த முதல் நாளே அந்தப் பெருமைதான்!
அருள்மேரி: ரோஸலின் நல்ல பொண்ணு....இன்னும் சில நல்ல விஷயங்களை அவளுக்கு நான் சொல்லிப் புரிய வைப்பேன்....

(மஞ்சுளா சற்றுத் தூரத்தில் ஒரு காட்சியைப் பார்க்கிறாள்.....அதிர்ச்சி அடைகிறாள்)

மஞ்சுளா: அங்கே பாருங்க ஒரு காட்டெருமை!....வாங்க ஓடலாம்!....
அருள்மேரி: (திகைப்புடன்) அதுக்கு முன்னால அந்தத் தேக்கு மரத்துக்குப் பக்கத்திலே நிற்கறது யாருன்னு பாரு!....

(அங்கே ரோஸலின் நடுக்கத்தோடு நிற்கிறாள். கையில் ஸ்மார்ட் போன். காட்டெருமையைப் பார்த்ததும் தற்படம் (செல்ஃபி) எடுக்கும் முயற்சி....விளைவை அறியாத அசட்டுத் துணிச்சல்!....காட்டெருமை அவளை நோக்கி வருகிறது. அதன் கொம்புகள் குலை நடுக்கத்தை ஏற்படுத்துகின்றன....அருள்மேரி அங்கே ஓடுகிறாள். மஞ்சுளாவுக்கு வியர்த்துக் கொட்டுகிறது.)

காட்சி- 4
இடம்- வகுப்பறை
மாந்தர்-அருள்மேரி, ரோஸலின், மஞ்சுளா, 
மாணவர்கள்.

(இரண்டு நாட்களுக்குப்பின் அருள்மேரியும் ரோஸலினும் பள்ளிக்கு வருகிறார்கள்)

மாணவி: என்ன டீச்சர்!....நீங்க ரெண்டு நாளைக்கு வரலே...
அருள்மேரி: நடைப்பயிற்சியிலே சாலையிலே கல் தடுக்கி விழுந்தேன்....முழங்கையிலே சின்ன காயம்....
மாணவிகள்: கவனமா இருக்கணும் டீச்சர்...இங்கே அடிக்கடி மழை பெய்யும்....மலையிலே மண் சரியும்.
அருள்மேரி: உங்க அன்புக்கு நன்றி, நான் இனிமே கவனமா இருப்பேன்...
ஒரு மாணவி: நாங்க வருத்தப்படுவோம்னுதானே இப்படிச் சொல்றீங்க.....நீங்க விழமாட்டீங்க....வேற ஏதோ விஷயமாó....விரும்பினா சொல்லுங்க....

(நடந்ததை அருள்மேரியின் அனுமதியோடு மஞ்சுளா கூறுகிறாள்)

மஞ்சுளா: (ரோஸலினின் அசட்டுத் துணிச்சல்.....செல்ஃபி...அதன் விளைவைக் கூறிவிட்டு) காட்டுருமை யானையைப்போல் பருத்த உருவம். அது கொம்பை ஆட்டயபடி அவளை நோக்கி வந்ததைப் பார்த்த டீச்சர் வேகமா ஓடினாங்க....அவளைப் பிடிச்சு 
பக்கத்திலே இருந்த பள்ளத்திலே தள்ளி
னாங்க.... அவங்களும் குதிச்சாங்க....அங்கே ஈர மண்ணா இருந்தது.... ரோஸலினுக்கு எதுவும் ஆகலே.... டீச்சருக்கு மட்டும்தான் முழங்கையிலே காயம்.... டீச்சர் தன் உயிரைப் பொருட்படுத்தாம, துணிச்சலா ஓடி அவளைக் காப்பாத்திட்டாங்க....அப்போ அவங்க இல்லைன்னா அவளோட கதி என்ன ஆயிருக்கும்?.... நினைச்சே பார்க்க முடியலே....

(திகைப்பில் வகுப்பு அமைதியாகிறது)

அருள்மேரி: இந்தப் பெரிய ஆபத்திலிருந்த காத்த அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்வோம்....அதே நேரத்திலே, கடவுள் துணை இருப்பார்னு நாம நினைச்சபடியெல்லாம் ஆடக்கூடாது!....மனிதப் பிறவி எவ்வளவு உயர்ந்தது!....உயிரோட மதிப்பு இன்னும் நமக்குத் தெரியலே....என்ன விலை கொடுத்தாலும் போன உயிரை மீட்க முடியுமா?.....காட்டெருமையோட "செல்ஃபி' எடுக்கப்போய் ஓர் உயிர் போயிடுச்சுன்னா அது எவ்வளவு பெரிய கொடுமை? வேலு நாச்சியார் போல வீரப்பெயண் என்றா பேசுவாங்க? புத்தியில்லேன்னு ஏளனம்தான் மிஞ்சும்!....பல துன்பங்களுக்குக் காரணம் நம் அறியாமே...வீண்பெருமை!....இந்த நிகழ்வு எல்லோருக்கும் ஓரு பாடம்! இதை நீங்க மறக்கவே கூடாது! 

(ரோஸலின் கண்ணீர் வடிக்கிறாள். அருள்மேரியிடம் வருகிறாள். அவர் அவளை அன்போடு அரவணைக்கிறார்)

திரை
பூதலூர் முத்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com