அரங்கம்: காடு

அரங்கம்: காடு

காட்சி - 1

இடம் - குடிசை மாந்தர் - விறகு வெட்டி செல்லப்பனின் மகன் கந்தன் (விளையாட்டுப்பிள்ளை), அவன் அம்மா. 

(குடிசையின் பின்புறத்தில் இருந்து அம்மா குரல் கொடுக்கிறாள்)

அம்மா: ""கந்தா.. போயி விறகு சுள்ளி குச்சி பொறுக்கி வா. பட்ட மரத்தின் கிளைகளை வெட்டி வா. சோம்பலா இருக்காதே!... வயசு பதினைஞ்சாவுது..''

(சிணுங்கிக் கொண்டே எழுகிறான் கந்தன். )

அம்மா: உன் அப்பா உயிரோடு இருந்தால் உன்னை போகச் சொல்வேனா..எனக்கு என்னவோ இன்னிக்கு தலை சுத்தற மாதிரி இருக்கு. இல்லாட்டி நான் உன்னைத் தொந்தரவு பண்ண மாட்டேன். போப்பா.. ம். உன் அப்பா உன்னைப் படிக்க வைக்கணும்ன்னு ஆசைப்பட்டார்.. பாழுங்காய்ச்சல் பலி வாங்கிடுச்சி. சரியான வைத்தியம் பண்ண முடியலே..ம்..அரிவாளை எடுத்துப் போ'
கந்தன்: "சரிம்மா..'


காட்சி - 2

இடம் - காடு மாந்தர் - கந்தன், ஒரு சிறு புழு.

(காட்டுக்குள் விசிலடித்தபடி தெம்மாங்கு பாடி துள்ளி நடக்கிறான் கந்தன்) 
(காய்ந்த சுள்ளிகளை சேகரிக்கிறான். ஒரு பட்ட மரத்தில் ஏறிக் கிளையை வெட்ட அரிவாளை ஓங்க, அப்போது கிளையில் ஒரு புழு நெளிந்து சென்று கொண்டிருக்கிறது. வெட்டாமல் அந்தப் புழுவையே பார்க்கிறான். ஒரு பெரிய வாதாமர இலையில் அந்தப் புழுவை மெல்ல எடுத்து வைத்து இறங்குகிறான்)
கந்தன்: "புழு நண்பா. நீயும் ஒரு உயிர் தானே... வெயில் சுடுதா?....'

(தூரத்தில் ஆற்றுப் படுகை அருகில் அதை ஓரமாக வைக்கிறான். பின் மரத்தில் ஏறிக் கிளையை வெட்டுகிறான். அங்கிருந்த வலுவான ஒரு கொடியை இழுத்துப் பிடித்து அறுக்கிறான். சுள்ளிகளை கட்டாகக் கட்டி தலையில் தூக்கி சுமந்தபடி இடுப்பில் அரிவாளைச் செருகி நடக்கிறான்)

குரல்: "கந்தா!... நண்பனே!' 
கந்தன்: யார் கூப்பிடறது..? (தனக்குள்)... "யாருமில்லை. மனப் பிரமை தான்.'
புழு:"உன்னைத்தான் கந்தா!' 
கந்தன்: குரல் தரையில் இருந்து வருகிறதே?.....( குனிந்து பார்த்தால் புழு!) "நான் ஒரு தேவதை!.... விண்ணுலகில் இருந்து வந்திருக்கிறேன்!'

(அங்கு ஒரு வெண் புகை போல மூட்டம் எழுகிறது. நடுவே ஒரு தேவதை இறக்கைகளுடன்.) 

தேவதை: "மிக்க நன்றி!.... தாகமாக இருந்தது...., என்னை நதி அருகில் வைத்தாயல்லவா?.... தாகம் தீர்ந்து விட்டது!'
கந்தன்: அடடே!... உனக்கு சாப்பிட ஏதாவது பழம் பறிச்சுத் தரவா?...
தேவதை: வேண்டாம் நண்பா!.... என் பசி, களைப்பு அத்தனையும் ஒரு துளி நீரில் போய்விட்டது! இனி எனக்குப் பல நாட்களுக்கு உணவு தேவையில்லை. உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்!...
கந்தன்: "ஒண்ணும் வேண்டாம்.. அம்மா தேடுவாங்க.. நான் போறேன். நாளைக்கு வர்றேன்..'
தேவதை: சரி!

(தலையில் சுள்ளிக் கட்டுடன் விரைகிறான் குடிசை நோக்கி. தேவதை அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு புழுவாக மாறி நகரத் தொடங்குகிறது.)


காட்சி - 3

இடம் - குடிசை மாந்தர் - கந்தன், கந்தனின் அம்மா.

(குடிசையில் சுள்ளிக் கட்டை இறக்கி விட்டு அரிவாளை கூரையில் செருக எடுக்கிறான். என்ன இது கனமாக இருக்கு. மஞ்சள் நிறத்தில் மின்னுது.)

கந்தன்: "அம்மா ஓடி வாயேன்!..' 
அம்மா : "என்னப்பா கந்தா?....'
கந்தன்: "இதைப் பாரேன்!'
அம்மா: "என்னப்பா இது அதிசயம் அரிவாள் மஞ்சளா மாறி இருக்கு.. தங்கம் போலத் தோணுதே'

(காட்டில் நடந்ததை விவரிக்கிறான்.) 

அம்மா: (ஆச்சரியத்துடன்) "சரி, சமைக்கிறேன் சாப்பிடு.' (அடுப்பை எரிக்க அரிவாளால் காய்ந்த கிளையை அவள் வெட்ட தங்கக் கூர் முனை நசுங்குகிறது.) கந்தா.. என்ன இது அரிவாள் வெட்டலியே.. நமக்கு வெட்டற அரிவாள் தான் வேலைக்கு ஆகும்.. போய் அந்த தேவதையிடம் இதை மாற்றி வா! இத்தனை தங்கத்தை எனக்கு என்ன பண்றதுன்னும் தெரியாது!...விற்கப் போனால் எங்கேயாவது திருடினியான்னு தண்டிச்சுடுவாங்க!... வேணாம்!... அபாயம்!


காட்சி - 4

இடம் - காடு மாந்தர் - தேவதை, கந்தன்.

(காட்டுக்குள் ஓடுகிறான்)

கந்தன்:"தேவதையே எங்கே இருக்கே?...இந்த தங்க அரிவாள் எங்களுக்கு வெட்ட உதவாது!.... பழைய இரும்பு அரிவாளே போதும்!'

( தேவதை தோன்றுகிறது) 

கந்தன்:"எங்களுக்கு இது வேணாம்!' (அம்மா கூறினவற்றைச் சொல்லி) தங்கத்தைப் பார்த்தா பயமா இருக்கு அம்மாவுக்கு! 

(சிரித்த தேவதை அரிவாளை பழையபடி இரும்பாக்கித் தருகிறது)

தேவதை: சரி, வேறே ஏதாவது கேள்! 
கந்தன்: "எனக்கு வைத்தியம் படிச்சு வைத்தியர் ஆகணும்ன்னு ரொம்ப ஆசை! ஆனா வசதி இல்லை எங்களுக்கு! இலக்கியங்கள், இலக்கணங்கள், சொல்லிக் கொடு...., கணிதம் நிகண்டு சாத்திரங்களைச் சொல்லித்தா! வருங்காலத்தைக் கணிக்கும் சோதிட அறிவைத் தா!.....முக்கியமாக நோய் போக்கும் வைத்திய சாத்திரம் சொல்லித் தா!....நான் அதை வைத்து பிழைத்து அம்மாவைக் காப்பாற்றுவேன்!.....உன்னால் முடியுமா ?'
தேவதை : (சிரித்தபடி) "அப்படியே செய்கிறேன்!' 

(அவன் தலையில் கை வைத்து ஆசீர்வதிக்கிறது. கந்தனைச் சுற்றி ஒரு புகை வளையம் சூழ்கிறது. அது அடங்கிய பின் கந்தன் தன்னை ஒரு புது மனிதனாக உணர்கிறான். அவன் எதிரில் ஒரு பெட்டி. அதில் நூற்றுக்கணக்கில் ஓலைச் சுவடிகள். அதை எடுத்துப் படித்த போது படிக்க முடிகிறது! --- காலச் சக்கரம் விரைவாகச் சுழல்கிறது!---)


காட்சி - 5

இடம் - அரண்மனை மாந்தர் - மன்னர், அமைச்சர், தளபதி

அமைச்சர்: ம்... .. வைத்தியர் கந்தன் என்றால் சோழ நாட்டில் அத்தனை செல்வாக்கு வந்திடுச்சி!....இப்போவெல்லாம் அரசருக்கு அரண்மனைக்குள் புதுசா வந்திருக்கும் கந்த வைத்தியர் சொல்றது தான் வேத வாக்கு. 
தளபதி: அவர் கை பட்டால் தீராத நோயும் தீர்ந்து விடுகிறது! மக்களுக்கு வைத்தியர் மேல் அளவு கடந்த பிரியம். ஏனெனில் யாரிடமும் பணம் வாங்குவதில்லை. இலவச வைத்தியம். பரம ஏழைகளுக்கு செலவுக்குப் பணம்கூடத் தர்றார்!
அமைச்சர்: பெரிய குடும்பத்துப் பிள்ளைகள், மந்திரி பிரதானிகள், குழந்தைகள் அனைவரும் வைத்தியத்துக்கு இங்கே வர்றாங்க. கந்தபண்டிதரின் கை பட்டால் குணமாயிடுதாம்!
தளபதி: காட்டை ஒட்டிய தன் இல்லத்தில் மூலிகை தோட்டம் அமைத்து இருக்கார் பார்த்தீங்களா!....
கந்த வைத்தியர்.. வயதான அவர் அம்மா, மருமகள் வள்ளி நீர் ஊற்றிப் பராமரிக்கிறாங்க. அரசர் நூறு காணி மூலிகை வளர்க்கவே தந்திருக்கார் தெரியுமா?...

(இதையெல்லாம் மன்னர் காதில் வாங்கியபடி வருகிறார்) 

மன்னர்: உண்மை தான் தளபதியாரே நான் கந்த வைத்தியரைப் பொக்கிஷம் போல பாதுகாக்கிறேன்.ஏன் தெரியுமா ? அவர் வைத்தியத்துக்காக அண்டை நாட்டு மன்னர்களும் நம் நாட்டுடன் நட்பு பாராட்டி வருவதால்..! வாருங்கள்! அவரிடம் முக்கிய வேலை ஒன்று இருக்கு.. போகலாம்!

(மன்னர் அவ்வப்போது மகாராணியுடன் வந்து தன் ஜாதகத்தைப் பார்க்கச் சொல்லி முக்கிய ராஜாங்க முடிவுகள் எடுக்க வருவார். கந்த வைத்தியர் சோதிடத்திலும் வல்லவர் ஆயிற்றே!)


காட்சி - 6

இடம் - காடு மாந்தர் - விறகு வெட்டிகள், சுள்ளி பொறுக்கும் பெண்.

ஒருவன்: நம்ம கூட விறகு வெட்டின செல்லப்பன் மகன் கந்தன் நிலை எப்படி மாறிடுச்சி பார்த்தியா!...என்ன படிப்பு!..... என்னா வைத்தியம்!..... ஒரே வேளை சூரணம் தான் தந்தாரு.. காய்ச்சலா கிடந்த என் பெண்டாட்டி எழுந்து சமைக்கக் கிளம்பிட்டா. காசு வாங்கிக்கலே தெரியுமா ..?
மற்றவன்: எல்லாம் கடவுள் செயலப்பா.. அசலூர் பட்டணம், ராஜாக்கள் எல்லாம் வியாதிக்கு மருந்து வாங்கிப் போறாங்க. கந்தன் சொல்லு என்னா சொல்லு.. சொன்னா அப்படியே பலிக்குது அப்பா..

சுள்ளி பொறுக்கும் பெண்: அவர் நாக்கில் சரஸ்வதி குடி இருக்கணும்.

திரை 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com