மனசு!

பேருந்தில் நல்ல கூட்டம்! வயதான ஒருவர் தனது ஐந்து வயது பேத்திக்கு இடம் தேடினார். சுமார் எட்டு வயது பையனுடன்
மனசு!

பேருந்தில் நல்ல கூட்டம்! வயதான ஒருவர் தனது ஐந்து வயது பேத்திக்கு இடம் தேடினார். சுமார் எட்டு வயது பையனுடன் உட்கார்ந்திருந்த ஒரு தம்பதியினரிடம் கொஞ்சம் இடம் கேட்டார். "இரண்டரை டிக்கெட் எடுத்திருக்கோம்....அவ்வளவுதான் இடம்....'' என முகத்தைச் சுழித்தவாறு சொன்னார்கள். இதைப் பார்த்த நடத்துனர், ""சின்னப் பொண்ணுதானே பாவம்...கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தா என்னம்மா'' என்று கேட்டார். அவரிடம் கடுகடுப்பாக, ""நாங்க என்ன சும்மாவா வர்றோம்....காசு வாங்கலே...வேணும்னா பையனுக்கு முழு டிக்கட் போட்டுக்குங்க....தொந்தரவு செய்யாதீங்க!'' என்று மீண்டும் கடுகடுத்தனர்.
 "சரி அவங்களைத் தொந்தரவு செய்யாதீங்க கண்டக்டர்!.... யாருக்கும் சிரமம் வேண்டாம்...'' என்று கூறிவிட்டு பேத்தியை பத்திரமாக ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் கம்பியைப் பிடித்துக்கொண்டு நின்றார் பெரியவர்.
 குறிப்பிட்ட நிறுத்தத்தில் அந்த எட்டு வயது பையனுடன் தம்பதியினர் இறங்குவதற்காக எழுந்தனர். அவர்களது இருக்கைகள் காலியானதும் தாத்தா தன் பேத்தியுடன் அந்த இருக்கையில் அமர்ந்தார். அவரது பேத்தி, இறங்கிக் கொண்டிருந்த நபரை நோக்கி, "அங்கிள்!....இந்தாங்க உங்க பர்ஸ்!....சீட்டில் கிடக்கு!'' என்று கூறி நீட்டினாள்!
 அந்த நபர் அசடு வழிந்த முகத்தோடு முதியவரிடமும், அவரது பேத்தியிடமும் ""ரொம்ப நன்றி'' என்றார். "நன்றியெல்லாம் வேண்டாம்!.... இது போன்று யாராவது வயதானவர் குழந்தைகளுடன் தடுமாறிக்கொண்டிருந்தால் எதிர்காலத்தில் இரக்கம் காட்டுங்கள்!'' என்றார்.
 பேத்தியை உச்சி முகர்ந்த தாத்தா மன நிறைவுடன் பயணத்தைத் தொடர்ந்தார்.
 -ஆர்.சிவானந்தம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com