முத்திரை பதித்த முன்னோடிகள்: கர்ணம் மல்லேஸ்வரி!

அந்த சிறுமி தனது சகோதரிகள் பளு தூக்கி பயிற்சி செய்வதை பார்த்துக்கொண்டே இருப்பாள்.
முத்திரை பதித்த முன்னோடிகள்: கர்ணம் மல்லேஸ்வரி!

அந்த சிறுமி தனது சகோதரிகள் பளு தூக்கி பயிற்சி செய்வதை பார்த்துக்கொண்டே இருப்பாள். பள்ளி முடிந்து வந்ததும் பளு தூக்கும் வட்டுக்களை கையால் தூக்க முயற்சி செய்வாள். ஆனால் அவற்றுள் ஒன்றைக் கூட அவளால் தூக்க முடியாது.
அப்படி ஒருமுறை தூக்க முயற்சித்து தன் காலிலேயே போட்டுக் கொண்டாள். நல்ல வேளையாக எலும்பு முறிவு ஏற்படவில்லை. சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டது.
அம்மா அவளைக் கடுமையாக கண்டித்தார். "ஒன்று படி, அல்லது வீட்டு வேலை செய்! இவை இரண்டைத் தவிர வேறெதுவும் செய்யக் கூடாது!' என்றார். அப்பொழுது 5 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.ஆனால் வளர்ந்து பெரியவள் ஆன பிறகு அவள் தன் ஆர்வத்தில் பிடிவாதமாக இருந்தார்.இதனால் தன் தாயுடன் கொண்ட கருத்து வேற்றுமையால் பல நாட்கள் சாப்பிடாமலேயே இருந்து விடுவாள். இறுதியில் அவரது நோக்கமே வென்றது. 
பின்னாளில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு கொண்டு வெண்கலப் பதக்கம் பெற்றார். அவர்தான் கர்ணம் மல்லேஸ்வரி!
மல்லேஸ்வரி ஆந்திர மாநிலத்தில் உள்ள "வூசவாணி பேட்டா' என்ற சிறிய கிராமத்தில் 1.6.1975 அன்று பிறந்தார். இவருக்கு 4 சகோதரிகள். நால்வரும் பளு தூக்கும் வீராங்கனைகள்.
அந்நாளில் மிகச்சிறந்த பயிற்சியாளராக விளங்கிய "நீலம் செட்டி அப்பண்ணா' என்பவரிடம் பயிற்சி பெற்றார் .தன் சகோதரியுடன் டெல்லி சென்றார். அங்கு இவரது திறமையை கண்ட இந்திய விளையாட்டு ஆணையம் (Sports authority of India) இவருக்கு பயிற்சி தர முன்வந்தது.
முதல்முறையாக 1993ஆம் ஆண்டு "மெல்போர்ன்' நகரில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகளில் 54 கிலோ கிராம் எடை பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றார்.
1994 ஆம் ஆண்டு இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற உலக பளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.
1998 ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
2000 ஆம் ஆண்டு சிட்னியில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. அதில் 110 கி. கி எடையை "ஸ்னாட்ச்' என்ற பிரிவிலும்,130 கி.கி. எடையை "க்ளீன் அண்ட் ஜெர்ந்'என்ற பிரிவிலும் தூக்கினார். இதன் காரணமாக இவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
இதனால் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையையும் பளு தூக்கும் போட்டிகளில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்.
சக பளு தூக்கும் வீரர் "ராஜேஷ் தியாகி' என்பவரை 1997ஆம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.

பெற்ற விருதுகள்
இவருக்கு 1994 ஆம் ஆண்டு "அர்ஜுனா விருது' வழங்கப் பட்டது.
1995 ஆம் ஆண்டு "ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது' வழங்கப்பட்டது.
1999 ஆம் ஆண்டு "பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது.
தனது தந்தையின் மறைவால் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன் வெல்த் போட்டிகளில் பங்கு பெறுவதில் இருந்து விலகினார்.
2004 ஆம் ஆண்டு ஏதென்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தகுதிச் சுற்றில் தேவையான புள்ளிகள் பெறத் தவறினார். இதனால் பங்கு பெற முடியவில்லை. எனவே சர்வதேச போட்டிகளில் இருந்து தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இச்சாதனையாளரின் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 

தொகுப்பு: லக்ஷ்மி பாலசுப்ரமணியன், 
கடுவெளி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com