முத்துக் கதை: தாம்பாளம்!

அலமேலு பாட்டி அடுத்த வீட்டில் சத்தம் ஏதோ வருவதைக் கேட்டு எட்டிப் பார்த்தாள்.  பல மாதங்களாக பூட்டிக் கிடக்கும் வீடு. 
முத்துக் கதை: தாம்பாளம்!

அலமேலு பாட்டி அடுத்த வீட்டில் சத்தம் ஏதோ வருவதைக் கேட்டு எட்டிப் பார்த்தாள்.  பல மாதங்களாக பூட்டிக் கிடக்கும் வீடு. 
மூன்று பேர் ஏணி பெயிண்ட் டப்பா சகிதம் வந்து வேலை செய்ய வந்திருப்பது தெரிந்தது.  வீட்டுச் சொந்தக்காரர் வெளி நாட்டில் இருக்கார்.  பெயிண்ட் அடித்து வாடகைக்கு விடுவார் என நினைத்தபடி உள்ளே 
வந்தாள். 
மதியம் மூன்று மணி இருக்கும்.  வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவன், ""டேய் ரங்கா.. பக்கத்து வீட்டில் பாட்டி இருக்கு.  வெளியே பித்தளை சாமான்கள் கிடக்கு.  எடுத்துப் போய் போட்டால் ஒரு ஆயிரம் தேறும்!''
""ம்ம்...ம்ம்...கபாலி.....பார்த்து'' என்றான் ரங்கன். 
""ஏண்டா கபாலி.. ஜெயிலை விட்டு வந்து மூணு மாசம் கூட ஆகலே.. உன் பழைய புத்தி தலை காட்டறியா?'' என்றான் முனியன். 
""ஸ்ஸ்ஸ்ஸ்...பேசாம இருடா...'' என்ற கபாலி, காம்பவுண்டில் ஏறி குதித்து பித்தளை தாம்பாளத்தை தூக்கி ஒரு சிமெண்ட் சாக்குப் பையில் போட்டுக்கொண்டான்
சாயந்திரம் பாட்டி வந்து சாமான் களை எடுத்து உள்ளே வைத்தாள். தாம்பாளம் காணாமல் போனதைக் கவனிக்கவில்லை.
அன்று வேலையை முடித்து விட்டுக் கிளம்பும் போது பாட்டி இவர்களைக் கூப்பிட்டாள்.   ""ஏ, தம்பிங்களா!... சித்தே வாங்க!.....''
மூவரும் உள்ளே வந்தார்கள்.
ஆளுக்கு ஒரு டம்ளர் பாயசம் கொடுத்தாள்.  ""இன்னிக்கு என் கணவர் நினைவு நாள்..... சாம்பிராணி போட்டேன்.. 
...சாப்பிடுங்க....நல்லா இருக்கா!''
""நல்லா இருக்கு பாட்டி!''                                                          
ஆளுக்கு ஒரு பை தந்தாள்.  ""இதில் உங்களுக்கு ஆளுக்கு ஒரு சட்டை புது வேட்டி இருக்கு.  உடுத்திக்குங்க!...''
கபாலி, ரங்கன் முகத்தில் ஈயாடவில்லை.  முனியன் ரங்கனை முறைத்தான். ""என்னா ஆளுங்கடா நீங்க?''  என்பது அவன் முகத்தில் தெரிந்தது.
""யோசிக்காதீங்க தம்பிங்களா.  அவர் நினைவு நாளில் இது மாதிரி புது சட்டை வேட்டி தர்றதை வழக்கமா வச்சிருக்கேன்.....அப்புறம் ஒரு சின்ன உதவி செய்யமுடியுமாப்பா!''
ரங்கனும், முனியனும், ""சொல்லுங்க பாட்டி'' என்றனர். 
""பழைய பித்தளை பாத்திரங்கள் கொஞ்சம் வச்சிருக்கேன்.  அதை எடைக்குப் போட்டு பணம் வாங்கித் தர்றீங்களா.  இந்த மாசம் மாத்திரை மருந்து வாங்க உதவும்!''
-- கபாலிக்கு மனசு ரொம்பவும் உறுத்த ஆரம்பித்து விட்டது.  மூடிய சிமென்ட் பையில் பாட்டியின் தாம்பாளம்!--
""சரி பாட்டி  இரண்டு நாளில் வேலை முடிஞ்சுடும்.... போகும் போது வித்து பணம் வாங்கி வர்றேன்'' என்றான் கபாலி. 
தாம்பாளத்தை அவன் கடையில் போடவே இல்லை...மனதில் ஏதோ தீர்மானித்தான். 
இரண்டு நாள் கழித்து ஒரு ஆட்டோவில் பாட்டி தந்த பித்தளைச் சாமான்களை எடைக்குப் போட்டான்! 
""எடை போட்டு பணம் தாங்க...''
மொத்தம் மூவாயிரத்து ஐநூறைத் தந்தார் கடைக்காரர். 
சிமென்ட் பையிலிருந்த தாம்பாளத்தயும் எடைக்குப் போட்டான். அதற்குத் தனியாக இருநூறு கிடைத்தது.  
மூவாயிரத்து ஐநூறோடு இருநூறு ரூபாயையும் சேர்த்து ரூபாய் மூவாயிரத்து எழுநூறு ரூபாயைப் பாட்டியிடம் தந்தான். 
 பாட்டி அவனிடம் இரு நூறு கொடுத்தாள்.  ""வச்சுக்கப்பா செலவுக்கு''
""வேண்டாம் பாட்டி.. நீங்க வயசானவங்க.. வச்சுக்குங்க.  உங்க பிள்ளையா இருந்தா  பணம் கொடுப்பீங்களா?'' 
""என் பிள்ளையா நினைச்சுதாம்ப்பா 
தர்றேன்...வச்சுக்க!''
மேலும் ஒரு நூறை எடுத்து கபாலி, முனியனிடம், "தம்பிங்களா.. ஹோட்டலில் டிபன் சாப்பிடுங்க..இன்னியோட வேலை முடிஞ்சிட்டு இல்லே..இந்த பக்கம் வந்தா வாங்க!''
கபாலியின்  கண்களில் பொல பொல வென்று கண்ணீர் அருவி போல கொட்டுகிறது. ரங்கனும் தன் கண்களில் தளும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான். 
""ஏன் தம்பி அழுவறே?''
""இல்லே பாட்டி தூசு விழுந்திட்டுது!''
பல மாதங்கள் கழித்து ரங்கனையும், கபாலியையும் பார்த்த முனியன், இப்பவெல்லாம் திருந்திட்டீங்க போலிருக்கு. 
கபாலி,  ""அன்பு, பாசம் இதெல்லாம் ரொம்ப வலிமையானதுடா!...'' என்றான். ரங்கனும் அதை ஆமோதிப்பது போல் புன்னகைத்தான். இப்போது இருவரும் நேர்மையான உழைப்பாளிகள்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com