கருவூலம்: மதுரை மாவட்டம்

இந்தியாவின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று! நகரின் மையத்தில் அமைந்துள்ளது. கோயிலை
கருவூலம்: மதுரை மாவட்டம்

பழமையான புகழ் பெற்ற ஆலயங்கள்!

மீனாட்சி அம்மன் கோயில்!

இந்தியாவின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று! நகரின் மையத்தில் அமைந்துள்ளது. கோயிலை மையமாகக் கொண்டே அடுக்கடுக்காக சதுர வடிவில் தெருக்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது!

சிவனின் லீலைகளாகக் கருதப்படும் 64 திருவிளையாடல்கள் நடந்தது இங்குதான்! நடராஜரின் ஐந்து சபைகளில் இது வெள்ளியம்பலம்! தேவாரப் பாடல் பெற்ற தலம்! அம்பிகையின் சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று! ஆன்மீக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் முக்கியமான கோயில். 

சங்க இலக்கிய நூல்களிலேயே இக்கோயிலைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு மேலான புனித ஸ்தலம். ஆனாலும் நாம் இப்போது காணும் கற்கோயில் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதுதான். ஆரம்ப காலத்தில் கோயிலை மண்ணால்தான் கட்டியுள்ளனர். சிவனுக்கு மட்டுமே சன்னிதி இருந்துள்ளது. திருஞானசம்பந்தர் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் மதுரைக்கு வந்தபோது மீனாட்சி அம்மனுக்கு தனிக்கோயில் இல்லை என்று சில தகவல்கள் கூறுகின்றன. 

கி.பி.12 ஆம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியன் காலத்தில் கோயிலை விரிவு படுத்திக் கட்டினார்கள். மீனாட்சிக்கு தனிக் கோயிலும் எழுப்பியுள்ளனர். 

14 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் டெல்லி சுல்தானின் படைத் தளபதி மாலிக்காபூர் படையெடுத்து வந்தபோது கோயில் சூறையாடப்பட்டதுடன் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது! தொடர்ந்து 40 ஆண்டுகள் மதுரையில் இஸ்லாமியர் ஆட்சி இருந்தது. அப்போது பூஜைகள் கூட நடைபெறவில்லை. நூற்றாண்டின் இறுதியில் ஆந்திர பகுதியைச் சேர்ந்த குமார கம்பணன் என்ற மன்னர் மதுரையை கைப்பற்றினார். அதன்பின் கோயில் இடிந்த நிலையில் இருக்க மீண்டும் பூஜைகள் நடைபெற்றன. 

பின்னர் கிருஷ்ண தேவராயரால் அனுப்பப்பட்ட விஸ்வநாத நாயக்க மன்னர், கோயிலை பாண்டியர் கால கோயில் போன்றே மீண்டும் கட்டினார். இவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ராணி மங்கம்மாள், திருமலை நாயக்கர் மன்னர் உள்ளிட்டவர்களின் பல திருப்பணிகளினால், கோயில் இப்பொழுதுள்ள முழுவடிவத்தைப் பெற்றது. கோயிலைச் சுற்றி பாதுகாப்பிற்காக அரண் ஒன்றும் கட்டப்பட்டது. இச்சுவர் 1837 இல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது முற்றிலும் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது! 

கோயிலின் அமைப்பு!

மீனாட்சி ஆலயம் 847 அடி நீளமும் 792 அடி அகலமும், 15 ஏக்கர் பரப்பளவும் கொண்டது. கோயிலில் 8 கோபுரங்களும் 2 விமானங்களும் உள்ளன. இக்கருவறை விமானங்கள், 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்பது போல் அழகிய வேலைப்பாடுடன் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு விமானங்களும் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன. கோயிலுக்குள் சுமார் 33,000 சிற்பங்கள் உள்ளன. 

மண்டபங்கள்!

ஆலயத்திற்குள் மங்கையர்க்கரசி மண்டபம், அஷ்டசித்தி மண்டபம் உள்ளிட்ட 9 மண்டபங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான சிற்ப நுணுக்கங்களுடனும், கலைநயமும் கொண்டதாக உள்ளன. 

இக்கோயில் "தூய்மை பாரதம்' இயக்க திட்டத்தின் கீழ் இந்தியாவின் தூய்மையான சிறந்த புனிதத் தலமாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது

ஆயிரங்கால் மண்டபம்! 

மண்டபங்களில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் ஆயிரங்கால் மண்டபமே பெரியது. எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் ஒரே வரிசையாக காட்சியளிப்பது வியப்பூட்டும்! இங்கு இன்னிசை ஒலியூட்டும் தூண்களும் உள்ளன. இம்மண்டபம் கோயிலின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு சிற்பங்கள், ஓவியங்கள், பரதக்கலை முத்திரைகள் என பல சிறப்பான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. 

புது மண்டபம்! 

அவசியம் பார்க்க வேண்டிய இடம். கோடைக்காலத்தில் வசந்த விழா நடைபெறும் இம்மண்டபத்தில் 25 அடி உயரம் கொண்ட 4 வரிசைகளில் அமைந்த 125 தூண்கள் உள்ளன. இத்தூண்களில் பத்திரகாளி, யாழிகள், புராண காட்சிகள், அர்த்தநாரீஸ்வரர், நாயக்க மன்னர்கள், மற்றும் ராணிகள் உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் கலை நுணுக்கத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் சிற்ப மற்றும் கட்டிடக் கலைக்கு சான்றாகத் திகழ்கிறது. 

கம்பந்தடி மண்டபம்!

இங்கு சிவனின் பல்வேறு வடிவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இதில் மீனாட்சி திருக்கல்யாண சிற்பம் உலகப் புகழ் பெற்றது. 

கோயிலைச் சுற்றி ஆடி வீதிகள், அதற்கு வெளியே அடுத்தடுத்து தமிழ் மாதப் பெயர்களில் தெருக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆடி வீதிகளில் நான்கு புறமும் நான்கு கோபுரங்கள் உள்ளன. 

பொற்றாமரைக்குளம்!

கோயிலுக்குள் 1 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தூண்களில் சங்கப் புலவர்களின் உருவங்களும், திருக்குறள் பாக்களும் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுச் சுவர்களில் திருவிளையாடற்புராணக் கதைகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன. இக்குளத்தில் 7 கிலோ எடையில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட தாமரை மலர் மிதக்கவிடப்பட்டுள்ளது. 

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்!

தமிழகத்தின் மிகப்பெரிய தெப்பக்குளம் இது! மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளி உலை வரும் நிகழ்வு இக்குளத்தில்தான் தைப் பூசத் திருநாளன்று நடைபெறும். 

இத்தெப்பக்குளம் 304. 8 மீட்டர் பக்க அளவுடன் சதுர வடிவில் அமைந்துள்ளது. குளத்தின் நான்கு புறமும், 12 நீளமான படிக்கட்டுகளும், மேலும் குளத்தைச் சுற்றிலும் 15 அடி உயர கல்சுவரும் கட்டப்ப்டடுள்ளது. இதன் நடுவே நீராழி மண்டபத்தில் தோட்டத்துடன் கூடிய விநாயகர் ஆலயம் ஒன்றும் உள்ளது. சுரங்கக் குழாய்கள் மூலம் வைகை ஆற்றில் இருந்து நீர் கொண்டு வரப்படுகிறது. 

திருமலை நாயக்கர் அரண்மனை கட்டப்பட்டபோது, கட்டுமானத்திற்குத் தேவையான மணலை இங்குதான் தோண்டினார்கள். மணலை தோண்டியதால் ஏற்பட்ட பெரிய பள்ளத்தையே சீரமைத்து 1645 இல் சதுர வடிவில் தெப்பக்குளமாக மாற்றினர். இங்கு கிடைத்த விநாயகர் சிலைதான் மீனாட்சி கோயிலில் முக்குறுணி விநாயகராக உள்ளார்.

சித்திரைத் திருவிழா!

மதுரையின் அடையாளமாகத் திகழும் பிரசித்தி பெற்ற கோலாகலமான விழா! பத்து நாட்கள் நடக்கும் இவ்விழாவின் போதுதான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் சேர்ந்து நடைபெறுகிறது. 

திருப்பரங்குன்றம் முருகன் கோயில்!

அறுபடை வீடுகளில் முதல் படைவீடு. புராணங்களின்படி முருகன் இங்குதான் தெய்வானையைத் திருமணம் செய்துகொண்டார். குடைவரை கோயில்களில் இது பெரியது. மலையைக் குடைந்து 5 தெய்வங்களின் சந்நிதிகள் உள்ளன. 
அகநானூறு, திருமுருகாற்றுப்படை, மதுரை காஞ்சி, பரிபாடல், போன்ற இலக்கிய நூல்களில் இக்கோயில்கள் பற்றிய பாடல்கள் உள்ளன. 

அழகர் மலை! - கள்ளழகர் ஆலயம்!

அழகர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள விஷ்ணு ஆலயம். 108 திவ்ய தேசங்களில் ஒன்று. சிலப்பதிகாரத்தில் அழகர் கோயிலின் சிறப்புகள் பற்றி பாடல்கள் உள்ளன. விமானமும், இசைத்தூண்களும், வசந்த மண்டபத்தின் ஓவியங்களும் மிகவும் அற்புதமானவை. 

பழமுதிர்சோலை முருகன் ஆலயம்!

அழகர் மலையின் மத்தியபகுதியில் அடிவாரத்தில் இருந்து 2 கி.மீ. உயரத்தில் இந்த முருகன் கோயில் உள்ளது. முருகனின் ஆறாவது படைவீடு! எழில் மிக்க இயற்கைக் காட்சிகள் நிறைந்த மலையில் பழமரங்கள் நிறைந்திருக்கும். அவற்றின் பழங்கள் உதிர்ந்து காணப்படுவதால் பழம் உதிர் சோலை எனப் பெயர் பெற்றது. முருகன் ஒüவையாரிடம், ""சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?'' எனக் கேட்டு திருவிளையாடல் புரிந்தது இத்தலத்தில்தான்! நக்கீரரும், அருணகிரிநாதரும், ஒüவையாரும் முருகனை துதித்துப் பாடியுள்ளனர். 

மேலும் பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள்!

கூடலழகர் கோயில், திருவாதவூர் திருமறைநாதர் ஆலயம், திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் ஆலயம், திரு மோகூர் காளமேகப் பெருமாள் ஆலயம், போன்ற பல ஆலயங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன. 

ஹாஜிமார் பெரிய மசூதி!

இறைதூதர் முகம்மது நபிகளின் வழித்தோன்றல் என்று அறியப்படும் ஓமனில் இருந்து தமிழகம் வந்த காஜி சையத் தாஜுத்தீனால் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனிடம் (கி.பி.1268 - 1308) அன்பளிப்பாக நிலம் பெற்று இந்த மசூதியைக் கட்டினார். பழமையான இந்த பெரிய மசூதியில் 2500 பேர்கள் தொழுகை நடத்த முடியும்!

தொடரும்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com