அப்பாவுக்கு உணர்த்திய ஆறுமுகம்!

சந்தன நல்லூர் கிராமத்தில் சங்கரன் கூலித் தொழிலாளி!
அப்பாவுக்கு உணர்த்திய ஆறுமுகம்!

சந்தன நல்லூர் கிராமத்தில்
 சங்கரன் கூலித் தொழிலாளி!
 அன்றைய கூலி அன்றைக்கே
 ஆகிடும் வீட்டுச் செலவுக்கு!
 
 அவரது மகன்தான் ஆறுமுகம்
 ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான்!
 அவரிடம் வாங்கித் தின்னவென
 இரண்டு ரூபாய் கேட்டிடுவான்!
 
 அப்பா கொடுத்திட மறுத்தாலோ
 அம்மா தருவாள் அவனுக்கு!
 நித்தம் பள்ளி செல்லும் முன்
 நின்றே வாங்கிச் செல்வானே!
 
 ஒருநாள் அம்மா "வலி' எனவே
 உருண்டே அழுதாள் தரையினிலே!
 மருத்துவ மனையில் மருத்துவரும்
 மருந்தை எழுதிக் கொடுத்திட்டார்!
 
 மருந்துக் கடையில் கேட்ட தொகை
 மடியில் இல்லை அப்பாவிடம்!
 மருந்தை வாங்கிச் சென்றிடவும்...
 மருத்துவ ருக்குக் கொடுத்திடவும்
 
 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு
 அலைந்தார் கொடுப்பார் எவருமில்லை!
 தாயின் நிலையை அறிந்த மகன்
 சட்டென அழைத்தான் அப்பாவை!
 
 சிறுகச் சிறுக அஞ்சலகச்
 சேமிப்பாக அவன் கணக்கில்
 இருந்த ரூபாய் ஆயிரத்தை
 எடுத்துக் கொடுத்தான் ஆறுமுகம்!
 
 அம்மா வீடு திரும்பிவிட்டாள்!
 "ஆயிரம் ரூபாய் எப்படிடா?''
 அம்மா மகனை அன்புடனே
 அருகில் அழைத்தே கேட்டிட்டாள்!
 
 வாங்கித் தின்ன தினமும் நான்
 வாங்கிச் சென்ற ரூபாயில்
 வாங்கித் தின்னவில்லை அம்மா!
 வங்கியில் சேர்த்தேன் எனச் சொன்னான்!
 
 அம்மா, அப்பா இருவருமே
 ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள்!
 அன்பு மகனின் கன்னத்தில்
 ஆயிரம் முத்தம் இட்டார்கள்!
 
 நானும் இனிமேல் கூலியிலே
 நாளும் எடுத்தே சிறுதொகையை
 நாளைக்கென்றே வைத்திடணும்!
 நன்கே உணர்ந்தார் அப்பாவும்!
 -புலேந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com