முத்திரை பதித்த முன்னோடிகள்! பி.கே.எஸ்.அய்யங்கார்

அந்த சிறுவனுக்கு தொடர்ந்து மலேரியா டைபாய்டு போன்ற நோய்கள் தாக்கிக்கொண்டே இருந்தன.
முத்திரை பதித்த முன்னோடிகள்! பி.கே.எஸ்.அய்யங்கார்

அந்த சிறுவனுக்கு தொடர்ந்து மலேரியா டைபாய்டு போன்ற நோய்கள் தாக்கிக்கொண்டே இருந்தன. அத்துடன் காசநோயும் அவனை வாட்டி வதைத்துக் கொண்டே இருந்தது. இதனால் மிகவும் சோர்வுடன் எப்பொழுதும் ஒருவித மயக்க நிலையில் தலைகுனிந்தபடியே இருப்பான்.
அவனது குடும்பம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் "பெல்லூர்' என்ற சிற்றூர்.
அங்கு முறையான மருத்துவமனைகள் எதுவும் இல்லை. மேலும் ஊர் முழுக்க தொற்றுநோய்அபாயமும் இருந்தது. அவனது தந்தை பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தார். இச் சிறுவனையும் சேர்த்து அந்தக் குடும்பத்தில் 13 குழந்தைகள் இருந்தனர். எனவே பெற்றோரால் இவனை முறையாக கண்காணிக்கவோ கவனம் செலுத்தவோ முடியவில்லை. இதனால் அவன் பள்ளிக்குச் சென்ற நாட்கள் மிகவும் குறைவு. மேலும் அவனை பரிசோதித்த உள்ளூர் மருத்துவர் அவர் அதிக நாட்கள் உயிர் வாழ வாய்ப்பில்லை என்று கூறினார். ஜோதிடர்களும் இதே கருத்தையே மீண்டும் கூறினர். ஆனால் கடவுளின் விருப்பம் வேறு வகையாக இருந்தது. அச்சிறுவன் பின்னாளில் ஒரு மிகப்பெரிய யோகாசன பயிற்றுனராக மாறுவான் என்றோ 95 வயது வரை உயிர் வாழ்வான் என்றோ ஒருவருக்கும் தெரியாது. இவரே பி.கே.எஸ். அய்யங்கார் ஆவார்!
இவரே தமது யோகாசனப் பயிற்சியை மேலை நாடுகளில் அறிமுகம் செய்து வைத்தவர்; மேலும் பெல்ஜியம் நாட்டின் அரசியார் எலிசபெத் அவர்களுக்கு சிரசாசனம் கற்றுக்கொடுத்தார். இந்த ஆசனத்தை கற்றுக் கொண்ட பொழுது அரசியாருக்கு வயது என்ன தெரியுமா? 80 வயது! ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
தமது பதினைந்தாவது வயது வரை நோய்வாய்ப்பட்டு இருந்த இவரை இவரது உறவினர் திருமலை கிருஷ்ணமாச்சாரியார் என்பவர் தம்முடன் மைசூருக்கு அழைத்துச் சென்றார். 1934ஆம் ஆண்டுமுதல் இவருக்கு பிராணயாமம் மற்றும் யோகாசன பயிற்சிகளை அளிக்கத் தொடங்கினார். பயிற்சியை தொடங்கிய இரண்டாவது நாளில் இருந்தே தமது உடல் நிலையில் நல்ல மாற்றம் தென்படுவதை திரு அய்யங்கார் அறிந்து கொண்டார்.
வெகுவிரைவிலேயே யோகாசனம் மற்றும் பிராணாயாம பயிற்சிகளை சிறப்பாக கற்றுக்கொண்டார். இதனால் கிருஷ்ணமாச்சாரியார் இவரை 1937 ஆம் ஆண்டு புனேவுக்கு அனுப்பினார். தாம் கற்றுக்கொண்ட யோகாசன பயிற்சிகளை பிறருக்கும் கற்றுத் தருமாறு கூறினார். அப்பொழுது இவருக்கு வயது 18 மட்டுமே.
யோகாசனப் பயிற்சியின் பலன்களை அறிந்துகொண்ட பலரும் இவரிடம் மாணவர்களாக சேர்ந்துகொண்டனர். அவர்களுள் மிகப் பிரபலமான அரசியல் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் ஆன்மீகவாதி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் இருந்தனர்.
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஒரு முறை இவரை யாஹுதி மெனுஹின் என்ற புகழ்பெற்ற மேற்கத்திய வயலின் இசைக் கலைஞர் ஒருவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். மெனு ஹின் இவர்களுக்கு ஐந்து நிமிடம் மட்டுமே ஒதுக்கியிருந்தார். யோகாசன கலையின் பெருமைகளை அவரிடம் விளக்க முற்பட்டார் அய்யங்கார். ஆனால் அதைக் கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாத மெனுகின் "என்னை ஒரு பத்து நிமிடம் தூங்க வைத்தால் உங்களிடம் நான் யோகாசனக் கலையை கற்றுக் கொள்கிறேன்!' என்று சவாலாக கூறினார்.
அய்யங்கார் அவருக்கு சில எளிய பிராணயாமப் பயிற்சிகளை செய்ய வைத்து சவாசனத்தில் அவரை படுக்க வைத்தார். மெனுகின் சில நொடிகளுக்குள்ளாகவே ஆழ்ந்து உறங்க தொடங்கினார். ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவரை எழுப்பினர். பல நாட்கள் உறக்கமின்றி தவித்த மெனு ஹின் தான் ஒரு புது மனிதனாக மாறியதாகவும் யோகாசனம் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.
அதன்படியே யோகாசனம் கற்றுக்கொண்டார்.
1954ஆம் ஆண்டு மெனு ஹின் இவரை இவரை சுவிட்சர்லாந்துக்கு வருமாறு அழைப்புவிடுத்தார். அங்கு சென்ற அய்யங்கார் மேலைநாட்டினருக்கு பலவிதமான யோகாசனப் பயிற்சிகளை செய்து காட்டி அவற்றின் பலன்களையும் விளக்கி கூறினார்.
மேலை நாட்டினர் பலர் இவரது மாணாக்கர்களாக சேர்ந்துகொண்டனர். பல நாட்களாக சைனஸ், ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளால் அவதிப்பட்டு கொண்டிருந்த பலர் குணமடைந்தனர். இதன்மூலம் இவர் சர்வதேச அளவில் புகழ் பெற்றார். பல நாடுகளிலும் யோகாசன பயிற்சிப் பள்ளிகளை திறந்தார் அவை "ஐயங்கார் யோகா பயிற்சி மையங்கள்' (Ayyangar yoga centers) என்று அழைக்கப்பட்டன.
இதை தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான் போன்ற பல வெளிநாடுகளுக்கும் சென்று இந்திய யோகக் கலையை பரப்பினார். இவர் யோகாசன கலை குறித்து 14 நூல்கள் எழுதியுள்ளார்.1966-ஆம் ஆண்டு "Light on yoga' என்ற முதல் நூல் வெளிவந்தது. அந்நூல் 17 சர்வதேச மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மூன்று மில்லியன் காப்பிகள் வரை விற்கப்பட்டுள்ளது. இது ஒரு மாபெரும் சாதனையாகும்.
தற்காப்பு கலைகளுக்குப் பெயர்போன சீன நாட்டிலும் ஐயங்கார் அவர்களின் யோகாசனப் பயிற்சிகள் பிரபலமடைந்தன. சீன நாட்டில் 57 நகரங்களில் ஏறத்தாழ 30 ஆயிரம் மாணவர்கள் இவரது பயிற்சி மையத்தில் பயின்று வருகின்றனர். 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இவரை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல்தலை ஒன்றை பீஜிங் அஞ்சலகத்தில் சீன அரசு வெளியிட்டுள்ளது.
தமது யோகக் கலையால் அழியாப் புகழ்பெற்ற இம்மாமனிதர் தனது 95வது வயதில் 20.8.2014 அன்று காலமானார்.

அறிந்து கொள்வோம் வாருங்கள்.
(1) கூகுள் நிறுவனம் கூகுள் என்ற ஆங்கில எழுத்தை அழகாக வடிவமைக்கும் திறமையை "டூடுள்' என்று அழைக்கிறது. ஐயங்கார் அவர்களின் 97வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் 14.12.2015 அன்று சிறப்பு "டூடுள்' ஒன்றை வெளியிட்டது.
(2) அய்யங்கார் அவர்களுக்கு யோகாசனப் பயிற்சியை கற்றுக்கொடுத்த திருமலை கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் "நவீன யோகாசன கலையின் தந்தை'
(Father of modern yoga) என்று போற்றப்படுகிறார்.
(3) ஐயங்கார் அவர்களுக்கு இந்திய அரசு 1991 ஆம் ஆண்டு "பத்ம ஸ்ரீ' விருதையும் 2002 ஆம் ஆண்டு "பத்மபூஷன்'விருதையும் 2014ஆம் ஆண்டு "பத்ம விபூஷன்' விருதையும் வழங்கி சிறப்பித்தது.
(4) இவர் ஒரு கொடைவள்ளலாகவும் திகழ்ந்துள்ளார் மைசூரில் உள்ள சாமராஜேந்திர விலங்கியல் தோட்டத்திற்கு 20 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதற்கு முன் இந்தியாவில் எந்த தனிமனிதரும் இதுபோல மிகப்பெரிய தொகையை நன்கொடையாக விலங்கியல் துறைக்கு வழங்கியதில்லை.
(5) இவர் தனது சொந்த ஊராகிய பெல்லூரின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். யோகாசன கலையின் தந்தையாக கருதப்படும் பதஞ்சலி முனிவருக்கு என பிரத்தியேகமாக கோயில் ஒன்று அங்கு கட்டியுள்ளார்.மேலும் பெல்லூரில் தமது சொந்த செலவில் மருத்துவமனை ஒன்றையும், பள்ளி ஒன்றையும் நிறுவியுள்ளார் இம்மாமனிதர். 
தொகுப்பு: லக்ஷ்மி பாலசுப்ரமணியன், 
கடுவெளி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com