முத்துக் கதை: ஓய்வும் ஊக்கமும்!

வசந்த சேனர் கட்டிடக்கலையில் நிபுணர்! சுவர்ணபுரியில் அவர் எழுப்பிய கட்டிடங்கள் அனைத்தும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்!
முத்துக் கதை: ஓய்வும் ஊக்கமும்!

வசந்த சேனர் கட்டிடக்கலையில் நிபுணர்! சுவர்ணபுரியில் அவர் எழுப்பிய கட்டிடங்கள் அனைத்தும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்! பற்பல அணைகள், பாலங்கள், அரண்மனைகள், கோட்டைகள் அனைத்தும் அவரது திறமைக்குச் சான்றாக இருந்தன. அரசரின் நெருங்கிய பந்துக்கள், அவர்களது இல்லங்கள் அனைத்தும் வசந்த சேனரின் கைத்திறமையால் மிளிர்ந்தன. அரசர் அமரேந்திரருக்கு வசந்தசேனரிடம் பிரியம் அதிகம். ஆனால் வசந்த சேனருக்கு வயதாகிவிட்டது. மன்னரிடம் வேலைக்குச் சேர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. சற்றுத் தளர்ந்து போயிருந்தார் அவர். 

இனி நம்மால் உழைக்க முடியாது என உணர்ந்த அவர் அரசரிடம், ""எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது! என்னை பணியிலிருந்து விடுவித்தால் மகிழ்ச்சியுறுவேன், மேலும் நல்ல முறையில் சீடர்களைத் தயார் செய்துள்ளேன். அவர்களில் யாரேனும் உங்களுக்கு கட்டிட வேலைகளில் உதவுவர். இது என் தாழ்மையான கோரிக்கை'' என்றார். 

அரசரும், ""சரி,....நானும் அதை உணர்கிறேன்....கடைசியாக ஒரே ஒரு பணி! மிக முக்கியமான ஒரு நண்பருக்கு ஊருக்கு அருகிலேயே ஒரு புதிய கட்டிடம் கட்ட திட்டமிட்டுள்ளேன். இதுதான் உங்களால் எழுப்பப்படும் கடைசிக் கட்டிடமாக இருக்கும். அதற்கான வரைபடத்தை தயார் செய்யுங்கள். இந்த வேலையை முடித்தவுடன் உங்களை விடுவித்து விடுகிறேன்.'' என்று கூறி அந்தக் கட்டிடத்திற்கான விளக்கத்தையும் கொடுத்து குறிப்பையும் வசந்த சேனரிடம் வழங்கினார். 

அற்புதமான விளக்கக் குறிப்புகள் இருந்தன. பெரிய திண்ணைகள், ரேழி, தாழ்வாரம், சாளரம், தேக்கில் தூண்கள், மிக அற்புத வேலைப்பாடுகள் நிறைந்த ஊஞ்சல் , சமையல் அறை, சாப்பாட்டு அறை, வரவேற்பு அறை, சயன அறை, மற்றும் நந்தவனம் என்று மிகப் பாரம்பரிய கட்டிடத்திற்கான விளக்கக் குறிப்புகள் அதில் இருந்தன. பெரும் பொருட்செலவு ஆகும்போல் இருந்தது அது! அரசரோ எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று கூறிவிட்டார். 

தன் கடைசி வேலையாக இருந்ததால் வசந்த சேனர் அந்தக் கட்டிடத்திற்கான வரைபடத்தை ஆர்வத்தோடு வரைந்தார். பணியாட்களைத் தேர்ந்தெடுத்தார்! மிகச் சிறப்பாக கட்டிடம் அமைந்து விட்டது! அரசர் அமரேந்திரருக்கு மிகவும் மகிழ்ச்சி! 

ராணி, தளபதி, மந்திரி பரிவாரங்களுடன், புதிய கட்டிடத்தைப் பார்வையிட்டார். அனைவரையும் அந்தக் கட்டிடம் வசீகரித்தது! அமரேந்திரரும் வசந்த சேனரை மனமாறப் பாராட்டினார். 

""வசந்த சேனரே!....உங்களுக்கு இதோ என் சன்மானம்!'' என்று 50000 பொற்காசுகளை வழங்கினார் அரசர். 

""நன்றி அரசே!....ஆனாலும் இது எனக்குப் பெரிய தொகைதான்! ‘'

""அது மட்டுமல்ல....இந்தாருங்கள்! இந்த கட்டிடத்தின் சாவி! இந்தக் கட்டிடமே உமது சேவைக்கு நான் அளிக்கும் அன்புப் பரிசு! மறுக்காமல் ஏற்றுக் கொள்வீர்! மேலும் பராமரிப்புக்கு அரசு ஊதியத்தில் பணியாளர்களையும் அனுப்புகிறேன்! நீங்கள் உங்கள் குடும்ப சகிதம் பேரன் பேத்திகளோடு இங்கு குடி பெயர்வீர்! எத்தனை திட்டங்களை செவ்வனே நிறைவேற்றிக் கொடுத்தீர்! உங்கள் ஓய்வுக் காலத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பீர் நண்பரே!''

தன்னை முக்கியமான நண்பர் என அரசர் குறிப்பிட்டதும், புதிய கட்டிடத்தின் சாவியை அரசர் தந்ததும் வசந்த சேனரின் கண்களில் நன்றிப் பெருக்கால் நீரை வரவழைத்தது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com