கருவூலம்: சிவகங்கை மாவட்டம்

கர்நாடக சங்கீதத்தில் பயன்படுத்தப்படும் பழமையான வாத்தியங்களில் கடமும் ஒன்று! வைகை நதிக்கரையில் அமைந்துள்ள மானாமதுரை நகரத்தில்
கருவூலம்: சிவகங்கை மாவட்டம்

மாவட்டத்தின் புகழ் பெற்ற அடையாளங்கள்

மானாமதுரை கடம்!
கர்நாடக சங்கீதத்தில் பயன்படுத்தப்படும் பழமையான வாத்தியங்களில் கடமும் ஒன்று! வைகை நதிக்கரையில் அமைந்துள்ள மானாமதுரை நகரத்தில் செய்யப்படும் கடம் தனிச்சிறப்பு வாய்ந்ததும், புகழ் பெற்றதும் ஆகும். களிமண்ணுடன் பித்தளை அல்லது இரும்பு துகள்கள் கலந்து இவை செய்யப்படுகின்றன. தட்டும்போது நல்ல இனிமையான ஓசையை தரக்கூடியது. 
சாதாரண மண் பானைகளும் இங்கு பிரசித்தம்!

மானாமதுரை மல்லி
 இவ்வூரில் சாகுபடி செய்யப்படும் மல்லியும் பிரசித்தி பெற்றதுதான். 

ஆத்தங்குடி டைல்ஸ்
 பாரம்பரியமான கம்பீர அழகு கொண்ட பிரம்மாண்டமான செட்டிநாடு வீடுகளின் வண்ணமயமான டைல்கள் பதிக்கப்பட்ட தரை தனித்துவமானது. சிறப்பானது! எவ்விக இயந்திரங்களுமின்றி மனிதர்களின் திறமை மற்றும் உழைப்பினாலேயே செய்யப்படுகின்றன. வேவ்வேறு வண்ணங்கள் வடிவங்கள், டிசைன்களில் தயாரிக்கப்படும் இந்த டைல்கள் கலை நயம் மிக்கவை!

செட்டிநாடு வீடுகள்
 செட்டிநாட்டு பகுதியில் உள்ள பாரம்பரியமான வீடுகளின் அமைப்பு உலகப் புகழ் பெற்றவை.  திருமணம் போன்ற விசேஷங்களை வீட்டிலேயே செய்வார்கள். எனவே வீடுகள் மண்டபம் போன்று இருக்கும்! சில வீடுகள் 30 அறைகள் கொண்டதாகக் கூட இருக்கும். முன் வாசலும், பின் வாசலும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்.  வீட்டின் தரைப்பகுதி தெருவிலிருந்து குறைந்தது 5 அடி உயரத்தில் அமைந்திருக்கும். வீட்டின் நடுவே முற்றம். எல்லா அறைகளின் வாசல்களும் நடுமுற்றத்தை நோக்கியே இருக்கும்! 

வீட்டில் பர்மா தேக்கில் செய்யப்பட்ட கம்பீரமான தூண்கள், கலைநயத்துடன் கூடிய முன்வாசல் நிலை, விசாலமான திண்ணைகள், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் கொண்ட உள்நிலைகள் என பார்ப்பவர்களை பிரமிப்புடன் கூடிய வியப்பில் ஆழ்த்திவிடும். 

மழைநீர் சேகரிப்பு
 செட்டிநாட்டு தெருக்களில் வலைகுடிலைக் கொண்டு மூடப்பட்ட குழிகளை அதிகமாகப் பார்க்கலாம். இதன் மூலம் மழை நீர் வழிந்தோடி விடாமல் அப்பகுதியிலேயே நிலத்தடி நீராக சேமித்துள்ளனர். 
 கழிவு நீரையும் தொழில்நுட்பத்தோடு மறு
சுழற்சி செய்துள்ளனர்.  நீர் மேலாண்மையில் முன்னோடிகளாக இருந்துள்ளனர். 

செட்டி நாட்டு சமையல்
 செட்டி நாட்டு உணவுக்கென்றே ஒரு தனிச் சிறப்பு உண்டு. நறுமணப் பொருட்கள்,  மற்றும் மூலிகை வகை உணவுப்  பொருட்கள், போன்றவற்றைப் பயன்படுத்தி காரசாரமாக மணம் வீசும் வகையில் செய்வார்கள். இந்த உள்ளூர் உணவைச் சுவைப்பதற்கென்றே ஏராளமான மக்கள் வருகிறார்கள். 
 கூட்டுக்கறி, துவட்டல், பச்சடி, மண்டி, மசியல், பிரட்டல், ஊறுகாய், கலவை சாதம் என பல ரக பதார்த்தங்களுடன்  உணவு பிரமாதமாக இருக்கும்! செட்டிநாட்டு இட்லி, சேவை, பணியாரம் போன்றவையும் புகழ்பெற்றவை. இவர்களது வரவேற்பும் உணவு பரிமாறும் அக்கறையும் பிரியமும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. 

கண்டாங்கி சேலைகள்
 செட்டி நாட்டில் நெய்யப்படும் தனித்தன்மை கொண்ட காட்டன் சேலைகள், கண்ணைக் கவரும் வகையில் பிரகாசமான நிறங்களில் பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும்! 250 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வகைச் சேலைகள் இங்கு நெய்யப்படுகின்றன.  இவை உலகின் பல நாடுகளிலும் பிரபலமானது. இதற்கு புவிசார் குறியீடும் பெறப்பட்டுள்ளது. 

செட்டிநாடு கொட்டான்
 இப்பகுதியில் பாரம்பரியமாக பனை ஓலை கொண்டு கூடைகள், அலங்காரத் தட்டுகள், சிறு பெட்டிகள் உட்பட  பல பொருட்கள் முடையப்படுகின்றன. பளிச்சென்ற நிறத்தில் அழகான டிசைன்களுடன் நேர்த்தியாக உள்ள இவைகளே கொட்டான்கள்! 

சுற்றுலாத்தலங்கள்
ராணி வேலுநாச்சியார் மண்டபம்
 ஆங்கிலேயரை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண் வீராங்கனை ராணி வேலு நாச்சியார் அவர்களே! ஜான்சி ராணிக்கு முன்னர் இவர் பிரிட்டஷாரை எதிர்த்து போரிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூரங்குளத்தில் இவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.  

சிவகங்கை அரண்மனை
 இப்பொழுது உள்ள அரண்மனை இரண்டாவதாக கட்டப்பட்டதே! முதலில் 1730 இல் ஒரு அரண்மனை கட்டப்பட்டிருந்தது. அதில்தான் மருதுபாண்டியர், வீரபாண்டிய கட்டபொம்மன் முதலானவர்கள் பங்குபெற்ற ரகசிய ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன. பழைய அரண்மனை 1762 முதல் 1789 வரை பலமுறை தாக்குதலுக்கு ஆளானது.  இவற்றால் மிக மோசமாக சேதம் அடைந்தது. 

 இப்பொழுது உள்ள அரண்மனை 19ஆம் நூற்றாண்டில் பாடமதூர் கெüரி வல்லப தேவர் என்பவரால் "கெüரி விலாசம்' என்ற பெயரில் கட்டப்பட்டது. இவருக்குப் பின் இவருடைய தம்பி இதில் குடியேறினார். இவருடைய மறைவுக்குப் பிறகு பிரிட்டிஷார் இவ்வரண்மனைதைக் கைப்பற்றினர். அரண்மனையினுள் தர்பார் ஹால், பளிங்கினால் ஆசனம், தெப்பக்குளம் என பல பகுதிகள் உள்ளன.  

சங்கரபதி கோட்டை
 முத்து வடுகநாதரால் கட்டப்பட்ட இந்த கோட்டை காரைக்குடிக்கு 8 கி.மீ. தொலைவில் பூதூரில் இருக்கிறது. இவரிடம் தளபதிகளாக இருந்த மருது சகோதரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த 5 கோட்டைகளில் இதுவும் ஒன்று. இங்கு போர் யானைகளுக்கும், குதிரைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோட்டையில் மருது சகோதரர்களும், ஊமைத்துரையும் சிறிது காலம் மறைந்து வாழ்ந்திருக்கிறார்கள். 

கம்பர் சமாதி
 தமிழ் மொழிக்குப் பெரும் தொண்டாற்றியவர் கம்பர்.(கி.பி.1180 - 1250) சமஸ்கிருதத்தில் வால்மீகி எழுதிய ராமாயண காவியத்தை தமிழில் எழுதியவர் என்பது எல்லோரும் அறிந்ததே! மேலும் ஏரெழுபது, சிலையெழுபது, திருக்கை வழக்கம், மும்மணிக் கோவை, சரஸ்வதி அந்தாதி ஆகிய நூல்களையும் கம்பர் இயற்றியுள்ளார். 

இவருடைய சமாதி நாட்டரசன் கோட்டையில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் உள்ளது. தற்போது இதனை அரசு பெற்று மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

வைரவன்பட்டி - தெய்வம் ஒண்டர்லாண்ட்
ஆப்கனிஸ்தான், அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்து, இலங்கை, உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள, மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ள விநாயகர்களின் பலவிதமான அற்புத வடிவங்கள் சுதைசிற்பங்களாக, இங்குள்ள அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

வெட்டன்குடி பறவைகள் சரணாலயம்
திருப்பத்தூர் பகுதியில் 3 விவசாய குளங்களை ஒட்டி இந்த சரணாலயம் இருக்கின்றது. இங்கு ஐரோப்பா, மற்றும் வட ஆசிய பகுதியிலிருந்து பறவைகள் வலசை வருகின்றன. நவம்பர் முதல் பிப்ரவரி வரை பறவைகளைப் பார்த்து ரசிக்கலாம். 

காரைக்குடி சுற்றுலா நகரம்
 இங்கு நகரத்தாரின் அரண்மனை போன்ற வீடுகள் நிறைய உள்ளன.  அவற்றில் சில வீடுகள் மிகவும் சிறப்பானவை. தமிழக அரசால் "பாரம்பரியம் மிக்க நகரம்' என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் பல இடங்கள் இங்கு உள்ளது.
 
செட்டிநாடு அரசர் அரண்மனை (கானாடுகாத்தான் அரண்மனை)
 காரைக்குடி அருகில் உள்ள கிராமம் கானாடு
காத்தான். ராஜா அண்ணாமலை செட்டியார் ஐரோப்பிய கட்டிடக்கலை மீது கொண்ட ஈடுபாட்டால் அதன் பிரதிபலிப்போடு கட்டிய புதுமையும், பழைமையும் கலந்த கட்டிட அமைப்பு கொண்டது. அரங்கம் போன்ற வரவேற்பறை, தூண்கள், பருத்த சுவர்கள், வளைவுகள், வண்ணக் கண்ணாடி ஜன்னல்கள், மேற்கூரையில் வரிசைகட்டி நிற்கும் வரிச்சட்டங்கள், டைல்ஸ் பதிக்கப்பட்ட அழகான தரைதளம், வெளிச்சம் மற்றும் காற்று வீசும் சாளரங்கள், குதிரை லாயம், வேலைப்பாடுகளோடு கூடிய நிலைகளும், கதவுகளும் கொண்ட அரண்மனை! 

தமிழ்த்தாய் கோயில்  
 தமிழகத்தில் தமிழ் அன்னைக்கு கட்டப்பட்ட  முதல் கோயில். இங்கு மூலதெய்வமாக தமிழ் அன்னையும் பக்கத்தில் அகத்தியர் மற்றும் தொல்காப்பியரும் உள்ளனர். மேலும் ஆலயத்தில் கம்பர், வள்ளுவர், இளங்கோவடிகள் சன்னதிகளும் உள்ளன. 

கம்பன் மணி மண்டபம்
 நகரத்தாரால் கட்டப்பட்ட கம்பன் மணிமண்டபம் இங்குள்ளது. ஆண்டுதோறும் கம்பன் விழாவும் நடைபெறுகிறது. 

கண்ணதாசன் மணி மண்டபம்
கவிஞர் கண்ணதாசன் காரைக்குடி அருகே உள்ள முக்கூடல்பட்டியில்தான் பிறந்தார். ஏராளமான திரைப்பாடல்களும், ஏராளமான தனிப்பாடல்களும் மற்றும் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவருக்கு மரியாதை செய்யும் வகையில் இம்மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. 

செட்டிநாடு அருங்காட்சியகம்
 நகரத்தார் இன மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், பாரம்பரியத்தையும், பெருமைகளையும் பிரதிபலிக்கும் வகையில் "யுனெஸ்கோ' உதவியுடன் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அபூர்வமான அணிகலன்கள், நகைகள், ஆடைகள், பெரிய தானிய கூடைகள், பாத்திரங்கள் என பல தரப்பட்ட பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

மேலும் சில தகவல்கள்​: மருது சகோதரர்கள் 
 மருது சகோதரர்கள் எனப்படும் பெரிய மருதுவும் சின்ன மருதுவும் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகள்! கி.பி. 1785 முதல் 1801 வரையில் ஆயுதம் ஏந்தி போராடினர். இவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்குளம் கிராமத்தில் பிறந்தவர்கள். இவர்களின் பெற்றோர் உடையார் சேர்வை, மற்றும் ஆனந்தாயி அம்மாள் ஆவர். 
 இவர்கள் இருவரும் சிவகங்கைச் சீமையின் அரசர் முத்து வடுகநாதரின் படையில் வீரர்களாக சேர்ந்து தங்களின் திறமையால் தளபதியாக பதவி
பெற்று முக்கிய பொறுப்பு வகித்தனர். போரில் முத்து வடுக நாதர் இறந்தபின் மறைந்து வாழ்ந்த ராணி வேலு நாச்சியாரை அரியணையில் அமரச் செய்வதற்காக 1779 இல் கிளர்ச்சியைத் தொடங்கி 1780 இல் வெற்றி பெற்று வேலு நாச்சியாரை ராணியாக்கினார்கள். 

 ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 1801 மே 5  ஆம் தேதி ஆங்கிலேய ர்கள் இவர்களுடன் போர் புரியத் தொடங்கினர். போர் சுமார் 150 நாட்கள் நடந்தது! மருது பாண்டியர் பிடிக்கப்பட்டு 1801 அக்டோபர் 24 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.

மருது பாண்டியர்கள் சிறந்த போர்வீரர்கள்! அதோடு சிறந்த நிர்வாகிகளாகவும் இருந்தனர். காளையார்கோயிலில் உள்ள காளீஸ்வரர் கோயில் உட்பட பல கோயில்களை கட்டினர்.  மேலும் ஊருணிகளையும், குளங்களையும் அமைத்தனர். 

 காளையார்கோயில் என்ற ஊரில் உள்ள காளீஸ்வரர் கோயிலுக்கு எதிரில் இவர்களின் சமாதிகள் உள்ளன. 

 2004ஆம் ஆண்டு இவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இந்திய அரசு இவர்களின் உருவம் பொறித்த தபால்தலையை வெளியிட்டது.

 மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம்
இந்தியாவில் உள்ள 40 தேசிய ஆய்வு கூடங்களில் இதுவும் ஒன்று. 1953 இல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடங்க டாக்டர்.அழகப்பா செட்டியார் அவர்கள் 300 ஏக்கர் நிலமும் ஏராளமான பொருளுதவியும் நன்கொடையாகக் கொடுத்தார். 

 50 ஆண்டுகளுக்கு மேலாக இம்மையம் இந்தியாவில் மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஆசியாவில் முதன்மை மையமாக உள்ளது!

மரச்சிற்ப வேலை    
 மிகவும் நுட்பமாக செதுக்கப்பட்ட நுணுக்கமான வேலைப்பாடுகள் மிகுந்த கோயில் திருத்தேர்கள், மரச்சிற்பங்கள், கலைப்பொருட்கள்,  ஓவிய, புகைப்படச் சட்டங்கள் இங்கு சிறப்பான முறையில் செய்யப்படுகின்றன. 

அழகப்பா பல்கலைக் கழக மூலிகைப் பண்ணை
 மூலிகை செடிகளின் பலன்களை பிரபலப்படுத்தவும், விவசாயிகளை மூலிகைச் செடிகளை வளர்ப்பதற்கு ஊக்குவிப்பதற்காகவும் "அழகப்பா பல்கலைக் கழகம்' தங்கள் வளாகத்திற்கு உள்ளேயே 10 ஏக்கர் பரப்பில் இதனை அமைத்துள்ளனர்.
வீரத்தின் சான்றுகளும், கலைகளும், பாரம்பரியக் கலாச்சாரமும் செறிந்தது சிவகங்கை மாவட்டம்! 

தொகுப்பு: கே. பார்வதி, திருநெல்வேலி டவுன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com