கருவூலம்: தேனி மாவட்டம்

இந்து மதக் கோட்பாடுகளின்படி முக்தி கொடுக்கும் தலங்களாகக் கூறப்படும் 5 ஊர்களில் இதுவும் ஒன்று! அக்காலத்தில் அரிகேசநல்லூர் எனப்பட்டது. 
கருவூலம்: தேனி மாவட்டம்

சென்ற இதழ் தொடர்ச்சி.....

புகழ் பெற்ற பழமையான வழிபாட்டுத் தலங்கள்!
சின்னமனூர் - பூலாநந்தீஸ்வரர் ஆலயம்!


இந்து மதக் கோட்பாடுகளின்படி முக்தி கொடுக்கும் தலங்களாகக் கூறப்படும் 5 ஊர்களில் இதுவும் ஒன்று! அக்காலத்தில் அரிகேசநல்லூர் எனப்பட்டது. 
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில். வீரபாண்டியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த ராஜசிங்கன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. இக்கோயில் வளாகத்தில் 27 கல்வெட்டுகள் உள்ளன. 
இங்குதான் சின்னமனூர் செப்பேடுகள் கிடைத்தன. முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்ட கன்னிகா பரமேஸ்வரி கோயிலும் சின்னமனூரில் உள்ளது. 

பெரியகுளம் பாலசுப்ரமணியர் ஆலயம்!
திருமூலரால் பாடல் பெற்ற தலம். இப்போது உள்ள கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. மூலவருக்கு "ராஜ ராஜ சோழீஸ்வரர்' என்ற பெயர். ஆனால் முருகன் பெயரில் கோயில் உள்ளது. 

உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோயில்!
300 ஆண்டுகளுக்கு முன் பூஜையா நாயக்கரால் கட்டப்பட்டது. 

குச்சனூர் சனீஸ்வரர் கோயில்!
நவகிரகங்களில் ஒன்றான சனி பகவானுக்கு கட்டப்பட்ட கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் கம்பம் பள்ளத்தாக்கில் சுருளியாற்றின் கரையில் குச்சனூரில் இருக்கிறது. தமிழகத்தில் சனி பகவானுக்கென உள்ள தனிக்கோயில் இது மட்டும்தான். "தினகரன் மான்மியம்' என்னும் பழைய நூல் இதன் சிறப்புகளைக் கூறுகிறது. 

அபுபக்கர் மஸ்தான் தர்கா!
மிகவும் பழமையான தர்கா. இங்கு 1630 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த இறைத் தொண்டர் அபுபக்கர் மஸ்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். 
இவற்றைத் தவிர 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கவுமாரி அம்மன் கோயில், தீர்த்தத் தொட்டி சித்திர குப்த நயினார் ஆலயம் மற்றும் மாவூத்து வேலப்பர் கோயில் போன்றவையும் பிரசித்தி பெற்றவை.

மேலும் சில தகவல்கள்!
முல்லை பெரியாறு அணை!

இந்த அணை தமிழக கேரள எல்லையில் கேரள மாநிலத்திற்கு உட்பட்ட இடத்தில் இருக்கிறது. ஆனால் தமிழக பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்படும் தமிழக அணை. 

பெரியாறு!
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து கேரளாவைக் கடந்து அரபிக் கடலில் கலக்கிறது. 300 கி.மீ. நீளம் கொண்ட பெரியாறு நதிதான், கேரளத்தின் மிக நீளமான நதி. கேரள மாநிலத்தின் முதன்மையான பொருளாதார ஆதாரமாகவும் இருக்கிறது. வற்றாத இந்நதி கேரளத்தின் உயிர்நாடி என்றும் போற்றப்படுகிறது. 
இந்நதியின் உற்பத்தி ஸ்தலம் தமிழகப் பகுதியிலுள்ள சிவகிரி மலையின் சுந்த மலை பகுதியில் இருக்கிறது. இங்கிருந்து 56 கி.மீ. தூரம் தமிழகப் பகுதியில் பயணித்து கடலில் கலக்கிறது. இதன் நீர்பிடிப்புப் பகுதியான 5396 ச.கி.மீ. பரப்பில்தான் தேக்கடி வன உயிரின சரணாலயம் உள்ளது. 

அணை!
மேற்கு நோக்கி பாயும் பெரியாற்றின் நீரினை கிழக்கு நோக்கி திருப்பி, மழை மறைவு பிரதேசமான தமிழகப் பகுதிகளுக்கு பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டதுதான் "முல்லை பெரியாறு அணை!'
1798 இல் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி, பெரியாற்றின் குறுக்கே அணைகட்டி, நீரைத் திருப்பி, மதுரை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளை வளம் பெறச் செய்ய திட்டமிட்டார். ஆனால் இத்திட்டம் நிறைவேறவில்லை. அதன் பின்னும் பலராலும், பல முயற்சிகள் செய்யப்பட்டு பலவிதமான தடங்கல்களால் நிறைவேறவில்லை. 
தற்போதுள்ள அணை ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் 1887 இல் கட்டத் தொடங்கப்பட்டு 1895 இல் கட்டி முடிக்கப்பட்டது. முதலில் இவ்வணையை ஆங்கிலேயே அரசு நிதியளித்து ஆங்கிலேயப் பொறியாளர் "ஜான் பென்னி குயிக்' அவர்களின் தலைமையில் கட்டுமானம் தொடங்கியது. பாதி கட்டுமான வேலைகள் நடக்கும்போது பெரும் வெள்ளத்தால் அணை முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டது. அதன்பின் அரசும் திட்டத்தைக் கைவிட்டது. 
ஆனாலும் ஜான் பென்னி குயிக் அவர்கள் இங்கிலாந்திலிருந்த தன் சொத்துக்களை விற்று தன் சொந்த செலவில் பெரும் முயற்சி செய்து பல்வேறு இன்னல்களை சமாளித்து கட்டி முடித்தார். 
இவ்வணை கட்டயதால் உருவான 26 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட பெரியாறு - தேக்கடி ஏரி மற்றும் நீர்தேக்கம் "பெரியாறு தேசிய பூங்கா' விற்குள் உள்ளது. இங்கிருந்துதான் ஒரு பகுதி தண்ணீர், ஒரு சுரங்கம் வழியாக தமிழகப் பகுதிக்கு திருப்பி விடப்படுகிறது. 
இந்த அணை பெரியாற்றுடன் அதன் துணையாறான முல்லையாறு சேரும் இடத்தில் கட்டப்பட்டுள்ளதால் "முல்லை-பெரியாறு அணை' என்று அழைக்கப்படுகிறது.
முல்லை பெரியாறு அணை 155 அடி உயரம் கொண்ட இவ்வணை 155.5 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டது. 
பெரியாறு நீர்த்தேக்க பகுதியிலிருந்து முதலில் குமுளிக்கு அருகிலுள்ள ஃபோர்பே அணைக்கு தண்ணீர் திருப்பிவிடப்படுகிறது. 
அங்கிருந்து பெரியாறு நீர் தேக்கடிக்கு அருகே மலையைக் குடைந்து வெட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதை வழியாக தமிழகத்திற்குள் வருகிறது. அதன் பின்...
கம்பம் பகுதியில் மலையடிவாரத்தில் லோயர் கேம்ப் என்ற இடத்தில் பெரியாறு தண்ணீரைக் கொண்டு மின் உற்பத்தி செய்யும் நிலையம் உள்ளது. இங்கு கொண்டு வரப்படும் நீர், பின்னர் சுருளி ஆற்றில் இணைந்து, அதன் மூலம் வைகையை அடைகிறது. தேனி மாவட்டத்தின் செழுமைக்கே நீர்வளம்தான் முக்கிய காரணம். இச்செழுமைக்கு பெரியாற்றின் பங்களிப்பு பெரியது. மேலும் இந்நீர் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் பயனளிக்கிறது. சுமார் 2.23 லட்சம் ஏக்கர்கள் இத்திட்டத்தினால் பாசன வசதி பெறுகின்றன. "ஜான் பென்னி குயிக்' அவர்களின் நினைவு மண்டபம் அரசால் அமைக்கப்பட்டுள்ளது. தேனி பேருந்து நிலையத்திற்கும் அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

கோம்பை நாய்! 
நாட்டு நாய் இனங்களில் வேட்டையாடும் தன்மையும், கீழ்ப்படிதலும் உள்ள நாய்கள் இவை. காவலுக்கும், வேட்டையாடுவதற்கும் வளர்க்கின்றனர். 

புளிகுளம் மாடுகள்!
நிலம் காக்கும் பட்டி மாடுகள். இம்மாடுகளை நிலத்தில் பட்டி போட்டால் நிலம் இயற்கையாகவே வளம் பெற்று விடும். தென் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்த இவை இப்பொழுது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் உள்ளன. தமிழகத்தின் பாரம்பரியமான நாட்டு மாடுகள் வகையைச் சேர்ந்தது. 

போடி மேடு!
கேரள எல்லையை ஒட்டி போடிநாயக்கனூர் தாலுகாவில் உள்ள மலைவாசஸ்தலம். 4500 அடி உயரத்தில் உள்ள இவ்வூரில் ஏலக்காய் அதிகம் விளைகிறது. 

சேரன் பொழுது போக்கு பூங்கா!
பெரியகுளம் பகுதியில் உள்ள இந்த பூங்கா அனைத்து வயதினருக்கும் பொழுது போகும் வகையில் வீடியோ கேம்ஸ், படகு சவாரி, திறந்த வெளித் திரையரங்கம், அழகான புல்வெளி என பல வகையான அம்சங்களைக் கொண்டது. 

மகாத்மா காந்தி கோயில்!
கம்பம் நகருக்கு அருகில் உள்ளது காமையா கவுண்டன் பட்டி. இங்கு மகாத்மா காந்திக்கு கோயில் கட்டி அவரை போற்றி வணங்குகிறார்கள். இக்கிராமத்தைச் சேரந்த 14 பேர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றுச் சிறை சென்றுள்ளனர். அவர்களே முன்னின்று ஊர் மக்களின் உதவியுடன் இக்கோயிலைக் கட்டியுள்ளனர். 
1985, டிசம்பர் 29 ஆம் தேதி நடந்த விழாவில் அன்றைய துணை ஜனாதிபதி திரு ஆர்.வெங்கட்ராமன் இக்கோயிலைத் திறந்து வைத்துள்ளார். 14 தியாகிகளின் படங்களும் வைக்கப்பட்டுள்ளன. 

தேனி மாவட்டத்திற்கு மிக அருகிலுள்ள கேரள மாநிலச் சுற்றுலாத் தலங்கள்!
தேக்கடி!
பெரியாறு தேசியப் பூங்காவின் ஒரு பகுதி. பசுமை மாறாக் காடுகளுக்கும், புல்வெளிகளுக்கும் புகழ் பெற்றது. யானைகள், புலிகள், சோலை மந்திகள், காட்டெருமைகள் உள்ளிட்ட பல வகையான உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. பச்சை பசேலென பரந்து விரிந்து கிடக்கும் இப்பகுதி அருமையான சுற்றுலாத்தலம். 

குமுளி!
இடுக்கி மாவட்டத்தில் ஏலமலை பகுதியில் பெரியாறு வனப்பூங்கா அருகில் இருக்கிறது. புகழ் பெற்ற மலைவாசஸ்தலம். மன்னராட்சி காலத்தில் வனமாக இருந்த இவ்விடம் பிரிட்டிஷாரால் மிளகு, காபி, ஏலக்காய் போன்றவை பெரிய அளவில் பயிரிடப்படும் இடமாக மாற்றப்பட்டது. 
இப்பொழுது வாசனைப் பொருட்கள் விற்பனை மையமாகவும் குளிர்ச்சியான புத்துணர்வூட்டும் மனதுக்கு இதமான சூழ்நிலை கொண்ட முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது. 

மங்களா தேவி கோயில்! (கண்ணகி கோயில்!) 
குமுளிக்கு 14 கி.மீ. தொலைவிலும் தேனி மாவட்டத்தின் கூடலூர் வனப்பகுதியில் உள்ள புளியங்குடியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் கேரள எல்லைக்குள் உள்ளது. தமிழகத்தில் இதற்கு சரியான பாதை இல்லை. 
சிலப்பதிகாரத்தின் நாயகியான கண்ணகிக்கு அமைக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. 2000 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது! இக்கோயில் சுற்றிலும் பசுமை சூழ்ந்த மலை உச்சியில் 1337 மீ. உயரத்தில் உள்ளது. 
சேர மன்னன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல் கொண்டுவந்து கண்ணகிக்கு சிலை வடித்து கோயிலும் கட்டி சிறப்பிக்கிறான். அக்கோயில்தான் இந்த மங்களா தேவி கோயில்! தற்போது மிகவும் சிதிலமாகிவிட்டது. சிலையும் காணாமல் போனதால் பக்தர்கள் சந்தனத்தில் உருவம் செய்து வைத்து வழிபடுகின்றனர். 

மூணார்!
1600 மீ. உயரத்தில் உள்ள இயற்கை எழில் மிக்க அழகிய நகரம். தென்னகத்துக் காஷ்மீர் எனவும் அழைக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியே முக்கியத் தொழில். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள். அருகிலேயே தெரியும் மேகக் கூட்டங்கள். மிதமான குளிர். வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை என மனதைக் கவரும் சுற்றுலாத் தலம். 
மொத்தத்தில் தேனி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மிக அழகிய சுற்றுலாத் தலங்கள் நிறைந்தது! 

தொகுப்பு: கே.பார்வதி, 
திருநெல்வேலி டவுன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com