ஞானக்கிளி!

ஞானக்கிளி வரப்போகிறது! அது தெரியாமல் அந்த மாந்தோப்பில் அணில்கள்,... சிட்டுக்குருவிகள்,....மைனாக்கள்,....மரங்கொத்திக் குருவிகள், வழக்கம்போல் வந்து ஆடின!....பாடின!...துள்ளின!
ஞானக்கிளி!

1. ஞானம் வந்தது!
 ஞானக்கிளி வரப்போகிறது! அது தெரியாமல் அந்த மாந்தோப்பில் அணில்கள்,... சிட்டுக்குருவிகள்,....மைனாக்கள்,....மரங்கொத்திக் குருவிகள், வழக்கம்போல் வந்து ஆடின!....பாடின!...துள்ளின!
 பாபு, பீட்டர், ரகுமான், பாத்திமா, மேரி, சிவகாமி போன்ற மாணவர்களும் வந்தனர். பள்ளியின் வெவ்வேறு வகுப்பு மாணவர்கள் அவர்கள்!
 அப்போது ஒரு நிகழ்ச்சி!....அது கனவா?...நனவா?....வியந்தார்கள்!
 அழகான ஒரு பச்சைக்கிளி! அதன் சிறகுகள் மாலை வெய்யிலில் மின்னின!.. மயிலைப் போல அழகிய கொண்டை!...அதைப் பார்த்ததும் அணில்களும், பறவைகளும், மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தன!
 சோலைமலையில் உள்ள இலுப்பைத் தோப்புதான் அதன் பூர்வீகம். ஒரு மரத்தின் பொந்துதான் அதன் இருப்பிடம்!
 தோப்பின் அருகில் ஒரு குடிசை. அதில் தங்கமணி என்று ஒரு பெரியவர் இருந்தார். காடும், மலையும் பறவைகளும் விலங்குகளும் அவருக்கு மிகவும் பிடிக்கும்!
 அவர் அந்தக் கிளியிடம் மிகவும் பாசத்தோடு பழகினார். அவர் அதற்கு வைத்த பெயர்தான் ஞானக்கிளி! காரணம் அது தோற்றத்திலும், அறிவிலும்,பிற கிளிகளையும் பறவைகளையும்விடச் சிறந்து விளங்கியது. தங்கமணிக்கு அது நல்ல துணையாக இருந்தது!
 அன்று ஞானக்கிளி சோலைமலையைத் தாண்டிப் பறந்தது. பசுமை நிரம்பிய மருதூர் கிராமம் அதற்குத் தென்பட்டது. அங்கே ஒரு பெரிய மாந்தோப்பு இருந்தது.பறவைகளின் ஒலி!....மாலை நேரத்தின் இதமான வெய்யில்....சிறுவர், சிறுமியரின் ஆட்டம்!....பாட்டு!....
 ஞானத்துக்கு மிகுந்த மகிழ்ச்சி!
 மேலே வட்டமிட்டு அந்தத் தோப்பில் இறங்கியது. பிள்ளைகள் குழுமியிருந்த இடத்துக்கு அருகே ஒரு தாழ்வான மரக்கிளை இருந்தது! அங்கே அமர்ந்தது.
 பறவைகள் சிறகடித்தப் பறந்து வரவேற்றன. அணில் விடாமல் ஒலி எழுப்பியது. பிள்ளைகளும் பறவைகளாக மாறினார்கள்.
 ஞானம், "அனைவருக்கும் வணக்கம்!...'' என்றது!
 அதைக் கேட்டதும் பிள்ளைகள் ஆனந்த வெள்ளத்தில் ஆடினார்கள்!...."இந்தக் கிளி நம்மைப் போலவே பேசுதே?...'' இது உலக அதிசயம்தான்!''
 "சோலைமலையில் என் குரு தங்கமணி இருக்கிறார்! எனக்கு அவர் உதவி!...நான் அவருக்குத் துணை!....அவர்தான் எனக்குப் பேசக் கற்றுக் கொடுத்தார். அவர் என்னிடம், "குழந்தைகள் இருக்கிற இடத்திற்குப் போ!....அந்த உலகம் இனிமையானது!....உனக்கு ஆனந்தமாக இருக்கும்!.....இனிமேல் வாரத்தில் ஒரு நாள் உங்களைப் பார்க்க இங்கே வருவேன்!....உங்களோட மகிழ்ச்சியை எனக்கும் சொல்லுங்க!.... கவலை,...கஷ்டம் இருந்தாலும் அதையும் சொல்லலாம்!....அதைப் போக்க நான் வழி சொல்வேன்!''
 எல்லோருடைய முகத்திலும் புன்னகை!
 "ஞானக்கிளின்னு நீங்க என்னை ஒதுக்கிடாதீங்க....எனக்குத் தெரியாத விஷயமும் நிறைய ....''
 அவர்களுக்கு ஞானம் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது!.....வயிற்றுப் பசியே தெரியவில்லை!
 மேரி எழுந்தாள்! ஞானத்திடம் ஒரு கேள்வி கேட்டாள்!...அது என்ன கேள்வி?
 ....கிளி வரும்...

 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com