க்ரீன் கேபிள்ஸ் ஆனி! 

."இல்லை....நான் இந்தத் தவறு செய்திருக்கக்கூடாது...உங்களுக்கு சுவையான கேக் செய்து தர வேண்டுமென்று விரும்பினேன்....'' என்றாள்
க்ரீன் கேபிள்ஸ் ஆனி! 

......."இல்லை....நான் இந்தத் தவறு செய்திருக்கக்கூடாது...உங்களுக்கு சுவையான கேக் செய்து தர வேண்டுமென்று விரும்பினேன்....'' என்றாள் ஆனி.
 "உன்னுடைய எண்ணத்தைப் பாராட்டுகிறேன்...குழந்தாய்!...இனிமேல் அழக்கூடாது...' என்று கூறிய ஆலன்ஆனியின்
 மனநிலையை மாற்ற "உன்னுடைய பூந்தோட்டத்தைக் காட்டு!...எனக்கு மலர்கள் பிடிக்கும்!'' என்று கூறினார்.
 அதற்குப் பிறகு யாரும் தைல "கேக்' கைப் பற்றி எதுவும் பேசவில்லை. விருந்தினர்கள் போன பிறகு மாத்யூ ஆனியைப் பார்த்து சிரித்தார்.
 மரிலாவைப் பார்த்து வெட்கப்பட்ட ஆனி, "இனிமேல் எந்தத் தவறும் செய்ய மாட்டேன்....'' என்று கூறினாள். ஆனால் அடுத்த வாரமே ஒரு தவறு செய்து துன்பத்தை அனுபவித்தாள் ஆனி!
 துன்பமும் இன்பமும்!
 ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்க சில நாட்களே இருந்தன. அதனால் ஆனியும் பள்ளித் தோழிகளும் டயானா வீட்டில் கூடினர். விளையாட்டும் அரட்டையுமாக பொழுது கழிந்தது.
 அவர்களுக்குள் ஒரு விளையாட்டு நடந்தது. ஒருவர் சொல்வதை இன்னொருவர் செய்ய வேண்டும். ஒருவர் சொல்வதை இன்னொருவர் செய்யவேண்டும். அது ஒருவரின் தைரியத்தை சோதிக்கும் விளையாட்டு.
 முதலில் கேரி, ரூபியை மரத்தின் மீது ஏறி கிளைக்குக் கிளை தாவச் சொன்னாள். அதை ரூபி செய்தாள். அடுத்து ஜேனி, ஜோஸியை தவளை மாதிரி தோட்டம் முழுவதும் குதிக்கச் சொன்னாள். ஜோசி குதித்தாள். எல்லோரும் சிரித்தனர். ஆனி, ஜேனியை மதில் சுவரில் நடக்கச் சொன்னாள். ஜேனி நடந்தாள். ஜேனி ஆனியை டயானா வீட்டின் கூரை மேல் நடக்கச் சொன்னாள். "நடக்க வேண்டாம்!....எதுவும் விபரீதம் நடந்துவிடும்'' என்று தோழிகள் எச்சரித்தனர்!
 ஆனி கேட்கவில்லை. "இது என் கெளரவப் பிரச்னை!'' என்று கூறிய ஆனி, கூரையின் உச்சி மீது ஏறி நடக்க முயன்றாள். ஆனி கவனமாக நாலைந்து அடிகள் நடந்திருப்பாள்...பிறகு அவளுக்கு நிதானம் இல்லை. கூரையிலிருந்து சறுக்கி தரையில் விழுந்தாள்.
 தோழிகள் அருகே ஓடினர். சத்தம் போட்டனர், டயானாவின் அம்மாவும் வந்து விட்டார். ஆனி எழுந்திருக்க முயன்றாள். அவளால் முடியவில்லை.
 "என்ன நடந்தது?...எங்கே அடிபட்டது?'' என்று ஆனியிடம் டயானாவின் அம்மா கேட்டார்.
 கணுக்காலை காட்டினாள் ஆனி!...டயானா அப்பா அங்கே வந்தார். அவர் ஆனியைத் தூக்கிக் கொண்டு நடந்தார். அவர் பின்னால் டயானாவும் தோழிகளும் கவலையுடன் நடந்தனர்.
 மிஸ்டர் பெரி ஆனியைத் தூக்கிக் கொண்டு வருவதைப் பார்த்த மரிலா, "என்ன ஆச்சு அவளுக்கு?'' என்று பதட்டத்துடன் கேட்டார்.
 "பயப்படவேண்டாம்....கூரையிலிருந்து விழுந்து விட்டேன்...காலில் அடி!...'' என்று தலையைத் தூக்கிச் சொன்னாள் ஆனி.
 அவளை சோபாவில் கிடத்தச் சொன்னார் மரிலா. டாக்டரை அழைத்து வர மாத்யூவை அனுப்பினார். ஆனிக்கு வலியைத் தாங்க முடியவில்லை.
 டாக்டர் வந்து பரிசோதித்தார். கணுக்காலில் இலேசாக முறிவு ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார். முறிவுக்குக் கட்டு போட்ட டாக்டர், ஆறு வாரங்கள் படுக்கையில் இருக்க வேண்டும் என்று கூறி விட்டார்!
 பள்ளி திறக்கும் நாளில் பள்ளிக்குப் போக முடியவில்லையே என்று ஆனி வருந்தினாள். புது ஆசிரியையை வரவேற்க முடிய வில்லையே என்ற கவலையை மரிலாவிடம் சொன்னாள்.
 "நீ ஒரு அதிர்ஷ்டம் கெட்ட குழந்தை...'' என்றாள் மரிலா.
 ஆறு வாரங்களில் ஆனியைப் பார்க்க நிறைய பேர் வந்தனர். அது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. திருமதி ஆலன் இருமுறை பார்க்க வந்தார். டயானா தோழியைப் பார்க்க தினமும் வந்தாள். பள்ளிச் செய்திகளை ஒன்று விடாமல் சொன்னாள். புதிய ஆசிரியையின் பெயர் மிஸ்.ஸ்டேசி என்றும் பஃப் வைத்த ஸ்லீவ்ஸ் போடுகிறார் என்றும் தலைமுடி சுருண்டிருக்கிறது என்றும் சொன்னாள்.
 டயானாவிடம் ஆனி எப்போதும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, ""கூரை மீதிருந்து விழுந்து ஆனிக்கு காலில்தான் காயம் ஏற்பட்டது,...நாக்கில் ஏற்படவில்லை...'' என்று மரிலா சொன்னார்.
 ஆனிக்கு காலில் ஏற்பட்ட காயம் குணமடைந்து விட்டது. பள்ளிக்குப் போக ஆரம்பித்துவிட்டாள். மாலையில் ஒரு நாள், தோழிகளுடன் சேர்ந்து ஆனி விளையாடிக் கொண்டிருந்தாள். குழு நடுவில் அவள் நின்று கொண்டிருந்ததை மாத்யூ பார்த்தார். ஆனியிடம் மட்டும் ஒரு வித்தியாசம் தெரிவதை மாத்யூ உணர்ந்தார். மற்ற பெண் பிள்ளைகளெல்லாம் "பஃப் ஸ்லீவ்ஸ்' அணிந்திருக்கு ஆனி சாதாரண உடை அணிந்திருந்தாள்.
 டயானா எப்போதும் அழகான ஆடைகளே அணிவாள். ஆனிக்கு ஒன்றாவது இருக்க வேண்டும் என்று மாத்யூ நினைத்தார்.
 இன்னும் இரண்டு வாரங்களில் கிறிஸ்துமஸ் வரவிருந்தது. அதனால் ஆனிக்கு ஒரு அழகான உடை வாங்கிப் பரிசளிக்க மாத்யூ முடிவு செய்தார்.
 அடுத்த நாள் மாத்யூ டவுனுக்குச் சென்றார். அவருக்கு கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதில் அனுபவம் கிடையாது. விற்பனை செய்யும் பெண்ணிடம் கேட்டு வாங்குவதற்கு வெட்கப்பட்டுக்கொண்டு அவர் ஒன்றும் வாங்காமல் திரும்பி வந்து விட்டார்.
 ஆனிக்கு உடை வாங்க ஒரு பெண்ணின் உதவியைத்தான் நாட வேண்டும் என்று நினைத்தார். மரிலாவின் உதவியை நாட அவர் விரும்பவில்லை. திருமதி ரேச்சலிடம் சொன்னதும் அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். "லேஸ்' வைத்துத் தைத்த "பஃப் ஸ்லீவ்ஸ்' உடை ஒன்றை வாங்கி மாத்யூவிடம் கொடுத்தார்.
 கிறிஸ்துமஸ் "ஈவ்' அன்று ஆனி மரிலாவுக்கும், மாத்யூவுக்கும் வாழ்த்துச் சொன்னாள்.
 மாத்யூ "பஃப் ஸ்லீவ்ஸை' கொடுத்தபோது, "ஓ!....இது எனக்காக!...'' என்று ஆச்சரியத்தில் திகைத்தாள் ஆனி!
 "இது என் கிறிஸ்துமஸ் பரிசு!'' என்றார் மாத்யூ. ஆனி மீது மாத்யூவுக்கு இருந்த பாசத்தை மரிலா பாராட்டினார்.
 ஆனி வளர்ந்து விட்டாள்!
 ஆனியின் ஆசிரியை மிஸ் ஸ்டேசி வீட்டுக்கு வந்த போது ஆனி இல்லை.
 "குயின்ஸ் கிளாஸ்' என்கிற ஆசிரியைப் பயிற்சி படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத ஆனிக்கு விருப்பமா என்று கேட்பதற்காக மிஸ்.ஸ்டேசி வந்தார். தானும், மாத்யூவும் சம்மதம் தெரிவித்ததாக மரிலா சொன்னார். ஆனிக்கும் ஆசிரியை ஆக விருப்பம் இருந்தது.
 நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு வகுப்பு தொடங்கியது. டயானாவைத் தவிர எல்லா மாணவர்களும் சேர்ந்திருந்தனர். டயானா சேராதது ஆனிக்கு வருத்தமாக இருந்தது. கில்பர்ட் சேர்ந்திருந்தான். அவனுக்கும் ஆனிக்கும் எப்போதும் வகுப்பில் போட்டி இருந்தது.
 சிறப்பு பயிற்சி வகுப்பு முடிந்து ஆனி வீட்டுக்கு வந்தபோது மரிலாவும் திருமதி ரேச்சலும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
 "சர்ச்சில் நடந்த பெண்கள் சங்க கூட்டத்திற்கு ஏன் வரவில்லை??'' என்று மரிலாவை ரேச்சல் கேட்டார்.
 "மாத்யூவுக்கு நெஞ்சு வலி...அவரை கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது'' என்றாள் மரிலா.
 மரிலாவுக்கும் ரேச்சலுக்கும் "டீ' கொண்டு வந்தாள் ஆனி. அவளைப் பார்த்த ரேச்சல், "ஆனி நன்றாக வளர்ந்து விட்டாள்!...'' என்றார்.
 தொடரும்...
 -எல்.எம். மாண்ட்கோமெரி
 தமிழில் சுகுமாரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com