அரங்கம்: ஜும்! ஜான்! ஜின்!

(அண்ணன் சாரதி படித்துக்கொண்டிருக்கிறான். தங்கை மீனா தன் தோழி சரளாவுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். அப்பொழுது அழைப்பு மணி பலமுறை ஒலிக்கிறது)
அரங்கம்: ஜும்! ஜான்! ஜின்!


காட்சி - 1 
இடம் - சாரதி வீடு, 
மாந்தர் - சாரதி, மீனா, சரளா, அப்பா, கதிர்வேல்.

(அண்ணன் சாரதி படித்துக்கொண்டிருக்கிறான். தங்கை மீனா தன் தோழி சரளாவுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். அப்பொழுது அழைப்பு மணி பலமுறை ஒலிக்கிறது)
சாரதி: ஏ, மீனா!....மணி அடிக்கிறது...காதிலே விழலையா?....போய்க் கதவைத் திற!....

மீனா: மூணு தடவை நான்தான் போய்க் கதவைத் திறந்தேன்!....இப்போ நீ போ!....நான் சரளாவோடு பாட சம்பந்தமா பேசிக்கிடிட்டிருக்கேன்!

சாரதி: நான் மாட்டேன்!

அப்பா: (அங்கு வந்தபடி) ஏ, சாரதி!... மீனா!..., என்ன இது?.... கதவைத் திறக்கறதுக்கு இப்படிப் போட்டியா? (என்றபடி கதவைத் திறக்க) ... ஓ!.... வாங்க, கதிர்வேல்!..... உங்களைத்தான் எதிர்பார்த்து காத்திக்கிட்டு இருக்கேன்!....வாங்க, பின்கட்டுக்கு.... கழட்டி வெச்ச சின்டெக்ஸ் தண்ணி டாங்கை காட்டறேன்.... மீனா,...கதவைத் 
தாழ்ப்பாள் போடு!

மீனா: சரளா, நீயும் வா...பின்கட்டுக்கு....அங்கே புதுசா தோட்டம் போட்டிருக்கோம்!.... பார்க்கலாம்!....(கூட சாரதியும் செல்கிறான்)

கதிர்வேல்: ஐயா, டாங்க் நல்லாத்தானே இருக்கு! ஏன் விலைக்குக் கொடுத்துடறீங்க?....

அப்பா: ஒரு மாசம் முன்னால மேலே இருக்கிற நீர்த்தொட்டி பழுதடைஞ்சு போச்சு!....அதுக்கு பதிலா இதை வெச்சு கட்டணும்னு வாங்கினேன். ஆனா இதை வைக்க வாட்டப்படலே!....பழைய தொட்டியையே சரி பண்ணியாச்சு! அதனாலதான் இதை விக்க முடிவு பண்ணியிருக்கேன்.... மூணு நாள்தான் பயன்படுத்தினோம்! 
இரண்டாயிரம் ரூபாய்க்கு கொடுத்துடறேன். 

கதிர்வேல்: சரி, இது நிறைய தண்ணீர் இருக்கே! எப்படி?

அப்பா: போனவாரம் மூணு நாளா அடை மழை! மாடித்தண்ணி அத்தனையும் பைப் வழியா இதுலே கொட்டியிருக்கு! 

கதிர்வேல்: சரி, தண்ணியக் காலி பண்ணிட்டு போன் பண்ணுங்க!....ஆமாம் மூடி என்னாச்சு?

அப்பா: தேங்காய் பறிக்கறப்போ,....ஒரு பெரிய குலை விழுந்து மூடி உடைஞ்சு போச்சு! 

கதிர்வேல்: சரி, பரவாயில்லே....நான் வரேன்....

காட்சி - 2
இடம் - சாரதி வீடு, மாந்தர் - சாரதி, மீனா, சரளா

(மீனா அறையில் தரையில் எதையோ தேடிக் கொண்டிருக்கிறாள். சரளா வருகிறாள்.)
சாரதி: ஏய்!....மீனா, என் சைகிளை கொஞ்சம் வெளியே எடுத்து வை!....

மீனா: அதை நீயே செஞ்சுக்க....

சாரதி: ஏய்!....நான் உன் அண்ணன்!

மீனா: நியாயமா பார்த்தா நீதான் தங்கைக்கு உதவி பண்ணனும்!

சாரதி: (சற்று யோசித்துவிட்டு...) சரி, என்ன 
செய்யணும்? 

மீனா: ஒரு "ஸ்டேப்ளர் பின்' தவறி தரையிலே விழுந்துட்டுது!....யார் கால்லேயாவது குத்திட்டா கஷ்டம்!....அதைத்தான் அரை மணி நேரமா தேடிக்கிட்டிருக்கேன்!.....பெருக்கியும் பார்த்துட்டேன்....கிடைக்கலே....

சாரதி: அவ்வளவு தானே! ஒரே நிமிஷத்துலே நான் எடுத்துத் தரேன் பாரு!....

மீனா: அது எப்படி? 

சாரதி: (யோசித்துவிட்டு...) ம்....அதுதான் "ஜும்... ஜான்... ஜின்!' ...

மீனா: என்ன..என்ன... என்ன? 

சாரதி: அதை அப்புறம் சொல்றேன்..... நீ இங்கேயே இரு!.... வரேன்!.... (என்றபடி அடுத்த அறைக்குப் போய்விட்டு சிறிது நேரத்தில் வருகிறான்...)

மீனா: ஏ, சாரதி, அது என்ன வலக்கை உள்ளங்
கையைச் சுத்தி துணிக்கட்டு? 

சாரதி: அதுதான் ஜும்...ஜான்...ஜின்! இது ஒரு மந்திரம்!....இதை வாய் திறந்து சொல்லிட்டு கூடவே மனசுக்குள்ளேயே ஒரு மந்திரம் 
சொல்லணும்!....இப்போ பார்! ஒரே நிமிஷத்துலே அந்தப் பின் கிடைச்சுடும்!....ஜும்...ஜான்....ஜின்!... (என்றபடி உள்ளங்கையைத் தரையை நோக்கியபடி ஒரு சுற்று வந்த பிறகு உள்ளங்கையை நிமிர்த்திப் பார்த்துவிட்டு ) ...ஏ, மீனா!....இதோ பார்!.... 
அந்தப் பின் இந்தத் துணிமேல் ஒட்டிக்கிட்டு வந்திருக்கு!

மீனா: சரி, சரி,....அதை அந்தக்குப்பைத் தொட்டியில் போட்டுடு!....சாரதி, எனக்கும் அந்த 
மந்திரத்தைக் கத்துக் குடுடா!

சாரதி: இரு, இதே மந்திரத்தாலே உங்களுக்கு இன்னொரு வித்தையும் காட்டறேன்....
வாங்க....என் அறைக்கு!...(சாரதி மேசை மேல் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கிறான்....
அருகில் ஒரு இரும்புத் துண்டையும், சணல் கயிற்றையும் வைக்கிறான்!...) சரளா, இந்த சணல் கயிற்றை நெருப்பு ஜுவாலை மேலே தொங்கும்படியா பிடிச்சுக்கோ!...பார்க்கலாம்!

மீனா: ஐயய்யோ! வேண்டாம்...இந்த சணல் கயிறு பத்தி எரிஞ்சுடும்! 

சாரதி: சரி, இதே சணல் கயிற்றை என் மந்திரத்தால் எரியாம செய்து காட்டட்டுமா? 

மீனா: செய்...பார்க்கலாம்!

சாரதி: இரும்புத் துண்டை எடுத்து ஜும்...ஜான்...ஜின்....என்று சொல்லியபடி அதில் அந்த சணல் கயிற்றை அழுத்தமாகச் சுற்றி முடிபோட்டுவிட்டு) மீனா, சரளா,....இப்போ பாருங்க....
மெழுகு வர்த்தி நெருப்பிலே இந்த சணல் கயிற்றைக் காட்டறேன்....ஜும்...ஜான்...ஜின்!....நல்லாப் பாருங்க சணல் கயிறு எரியயறதா?....

மீனா: ஆமா!....கயிறு எரியாம அப்படியே 
இருக்கு!.....ஆச்சரியமா இருக்கு!....

சாரதி: ஆமா!....அதுதான் ஐயாவோட மந்திர சக்தி!

சரளா: இரும்புத் துண்டு இல்லாம சணல்கயிறை மட்டும் நெருப்பிலே காட்டு!....பார்க்கலாம்!...

சாரதி: அது முடியாது!....மந்திரத்துக்கு ஒரு பீடம் வேணும்!

மீனா: டேய்!....இந்த மந்திர சக்தியை எனக்கு சொல்லிக்குடுடா!....

சாரதி: கொடுக்கறேன்....ஆனா தினமும் நீ, நான் சொல்ற வேலையைச் செய்யணும்....என் சைக்கிளை துடைச்சு வைக்கணும்....டைம் டேபிள் பிரகாரம் என் புக்ûஸ பையில் அடுக்கித் 
தரணும்....ம்....

மீனா: சரி....இப்பவே மந்திரத்தை எனக்கு 
சொல்லிக்குடு!

சாரதி: மூணு நாள் நான் சொல்றபடி நடந்து
காட்டு!..... அப்புறம் சொல்லித் தரேன்....

காட்சி -3
இடம் - சாரதி வீடு, மாந்தர் - சாரதி, மீனா, சரளா, அப்பா. 

சாரதி: ஏய், மீனா, நான் சொன்ன வேலை எதையும் நீ செய்யலே.... உனக்கு மந்திரம் வேண்டாமா?....

மீனா: வேண்டாம்!....எனக்கு வேறே மந்திரம் தெரியும்!....இப்போ நானும் பெரிய பெரிய 
வித்தையெல்லாம் செய்ய முடியும்!

சாரதி: ஏய்!....நீ சும்மா கதை விடறே...
(அவன் செய்த எல்லா வித்தைகளையும், "ஜாஹோ...ஜாஹோ' என்று ஒரு மந்திரத்தைக் கூறி செய்து காட்டுகிறாள்...)

சாரதி: ஏய்!....நீ என்னைப் பார்த்து காப்பியடிச்சு அதே மாதிரி செய்யறே!

சரளா: ஆனா அவள் உன் மந்திரத்தை உபயோகப்படுத்தாம் செய்திருக்காளே!....

மீனா: இப்ப பார் ஒரு புது வித்தை!... நீ செய்யாதது! (என்றபடி தண்ணீரோடு இருக்கும் ஒரு டம்ளர் மேல் ஒரு பிளாஸ்டிக் தட்டை மூடி, அதன் மேல் உள்ளங்கையை வைத்து, அழுத்தியபடி "ஜாஹோ!...ஜாஹோ!' என்று தலைகீழாக டம்ளரைகவிழ்த்து உள்ளங்கையை எடுத்துக் கொள்
கிறாள்! ---தண்ணீர் சிறிதும் கொட்டவில்லை!) 

அப்பா: (அறையில் நுழைந்தபடி) என்ன செஞ்சுக்கிட்டிருக்கீங்க?....இன்னும் கொஞ்ச நேரத்தில் கதிர்வேல் வந்துடுவாரு.... தொட்டியை காலி செஞ்சாகணும்!....எல்லோரும் வாங்க பின்கட்டுக்கு!....ஆளுக்கொரு வாளி கொண்டு வாங்க!....நான் செங்கல் அடுக்கு மேலே ஏறி தண்ணியை மொண்டு தரேன்!....நீங்க அதை மரம், செடி, கொடிகளுக்கு ஊத்துங்க!....

மீனா: அப்பா!....வேணாம்!....போன தடவை இந்த மாதிரி செஞ்சு உடம்பு வலி வந்திடுச்சு! அவஸ்தைப் பட்டீங்க!..

அப்பா: வேறே வழியில்லை!...
(சரளா, மீனாவின் காதில் ஏதோ கிசுகிசுக்கிறாள்!)

மீனா: இருக்குப்பா! நான் ஒரு மந்திரம் வெச்சிருக்கேன்! ....நீங்க இறங்குங்க...சொல்றேன்!

அப்பா: (சிரித்துக் கொண்டே இறங்குகிறார்.) என்ன மந்திரம்?.....

மீனா: ஜாஹோ!....ஜாஹோ!....(12 அடி நீளத்தில் அருகிலிருந்த ஒரு பிளாஸ்டிக் குழாயை தொட்டியில் இறக்குகிறாள்...மறு முனை கீழே தொங்குகிறது! ட்யூபின் மறுமுனையில் வாயை வைத்து உறிஞ்சுகிறாள்! சிறிது நேரத்தில் குழாய் வழியே தண்ணீர் வரத்தொடங்கியதும் உறிஞ்சுவதை நிறுத்திவிடுகிறாள்! தண்ணீர் வேகமாக தொடர்ச்சியாக இறங்கியது!) .....அப்பா! நீயும் சாரதியும் வாளியிலே தண்ணீரைப் பிடிச்சுக்குங்க!

அப்பா: நல்ல ஐடியா!
(சாரதி அதிசயத்தோடு யோசிக்கிறான்!

மீனா: என்ன சாரதி யோசிக்கிறே?....நீ என்னை வேலை வாங்கணும்னு எங்கேயோ பார்த்த வித்தையை உன் மந்திரத்தோடு சேர்த்து சொல்லி ஏமாத்தப் பார்த்தே!....ஆனா நாம செய்த எந்த வித்தைக்கும் எந்த மந்திரமும் தேவையில்லை!.....எல்லா வித்தைக்கும் அறிவுதான் அடிப்படைக் காரணம்! ....உள்ளங்கைத் துணிச்சுற்றுக்குள் இருந்த காந்தம்தான் "பின்' னை இழுத்துக் கொண்டது!....சணல் கயிறு எரியாம இருந்ததுக்குக் காரணம் ...நெருப்போட சூட்டை இரும்புத்துண்டு வேகமாக இழுத்துக் கொண்டது....இரும்புத் துண்டுக்கு வெப்பத்தை இழுக்கிற சக்தி அதிகம்!
சரளா: அது போல டம்ளர் தண்ணி கொட்டாம இருந்ததுக்கு வெளிக்காற்று மண்டல அழுத்தம்தான் காரணம். 

மீனா: ஆமாம்! இந்தத் தொட்டி நீர் வடிஞ்சதுக்குக் காரணமும் காற்றழுத்தம்தான்! நான் குழாயிலே இருந்த காற்றையெல்லாம் உறிஞ்சினதும் அந்த இடம் வெற்றிடமா ஆயிடுச்சு! அதை நிரப்பத்தான் வெளிக்காற்று தொட்டித் தண்ணி மேற்பரப்புலே அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கு!....அதனால மேட்டுத் தண்ணி பள்ளத்துக்கு வரமாதிரி குழாய் வழியா மேல்மட்டத்துத் தண்ணி வேகமா இறங்கிடுத்து!

சாரதி: இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும்? 

மீனா: உன்னோட ஏமாத்து வேலையை சரளா கண்டுபிடிச்சிட்டா!.... பதிலுக்கு உன்னை ஏமாத்தற வழியையும், இந்த நீரை இறக்கற வழியையும் இந்த சரளாதான் எனக்கு சொல்லிக்கொடுத்தா!.....இனிமே மந்திரத்தை சொல்லி என்னை ஏமாத்தப் பார்க்காதே!......சரளா, உனக்கு என் நன்றி!

சாரதி: ஆனா, வேறே ஒரு மந்திரத்தை இப்போ நானே கண்டுபிடிச்சுட்டேன்!....

மீனா: திரும்பவும் மந்திரமா?

சாரதி: ஆமாம்!...."ஜாம்...ஜூம்!'...அறிவியலே வாழி! 
(எல்லோரும் சிரிக்கிறார்கள்!)

திரை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com