க்ரீன் கேபிள்ஸ் ஆனி! - 11

ஆனி பட்டம் பெறுவதை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் மரிலா! ""சிறந்த மாணவருக்கு தங்கப்பதக்கம் கொடுக்கப்படுகிறது!'' என்று ரூபி சொன்னாள். ஆனி தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்றும் வாழ்த்தினாள்!
க்ரீன் கேபிள்ஸ் ஆனி! - 11

ஆனி பட்டம் பெறுவதை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் மரிலா! 
""சிறந்த மாணவருக்கு தங்கப்பதக்கம் கொடுக்கப்படுகிறது!'' என்று ரூபி சொன்னாள். ஆனி தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்றும் வாழ்த்தினாள்!

மாதம் 250 டாலர் உதவித்தொகையுடன் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு "அவெரி' என்னும் திட்டம் இருக்கிறது. மூன்று பேருக்குத்தான் கிடைக்கும். அதை ஆனி வெல்ல வேண்டும் என்று ஜேனி சொன்னாள்.

தோழிகள் சொன்னதைக் கேட்டு ஆனி உள்ளம் வேகமாக அடித்துக் கொண்டது!  "அவெரி' உதவித் தொகையைப் பெற வேண்டும் என்ற ஆசை ஆனிக்கு ஏற்பட்டது! அதனால் மறுபடியும் மாத்யூவும், மரிலாவும் பெருமையடைவார்கள் எனறு ஆனி நினைத்தாள்.

கிறிஸ்துமஸ் வந்தது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்ஸூக்கு அதிகமாகப் பனி பெய்தது. மாணவர்கள் படிப்பில் மூழ்கியிருந்தனர். கில்பெர்ட், ஆனி, இன்னும் சிலர் மட்டுமே படிப்பில் முதன்மையாக இருந்தார்கள். இவர்களில் யாராவது மூவருக்குத்தான் "அவெரி ஸ்காலர்ஷிப்' கிடைக்கும். 

ஆனி கடுமையாக உழைத்தாள். இப்போதும் ஆனிக்கு, கில்பர்ட்டுடன் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. முன்பு இருந்ததுபோல் கோபம் இல்லை. கில்பர்ட்டுக்குப் பரிசு கிடைத்தாலும் அவளுக்கு மகிழ்ச்சிதான். 

இளவேனிற்காலம் வந்துவிட்டது. மரங்களெல்லாம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. 

தேர்வு எழுதி மூன்று நாட்கள் முடிந்திருந்தது. ஆனியும் ஜேனியும் "குயின்ஸ் அகாடமி' க்கு நன்றாக வந்தனர். ஆனி மனதில் பதட்டம் இருந்தது. இன்னும் சில நிமிடங்களில் யாருக்குத் தங்கப்பதக்கம், "அவெரி' ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்பது தெரிந்தது விடும்.

சற்று தொலைவில் சில மாணவர்கள் கில்பர்ட்டை தோளில் சுமந்துகொண்டு வாழ்த்தொலி எழுப்பினர். அந்த நிமிடத்தில் ஆனி மிகப் பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளானாள். அவள் தோற்று விட்டாள்!....."மாத்யூ என்னை மன்னித்து விடுங்கள்...' என்று சொல்லிக்கொண்டாள். 

சிலர் ஆனியைப் பார்த்து குரல் எழுப்பினர்! ....""ஆனி ஷெர்லி'க்கு, "அவெரி ஸ்காலர்ஷிப்' கிடைத்திருக்கிறது!''....

""ஓ!....ஆனி!....எனக்குப் பெருமையாக இருக்கிறது!'' என்று ஜேனி வாழ்த்தினாள். மற்ற மாணவர்களும் அவளுடைய கையைக் குலுக்கி வாழ்த்துக்கள் சொல்லினர். 

"குயின்ஸ்' படிப்பு பட்டமளிப்பு விழாவிற்கு மாத்யூவும், மரிலாவும் வந்திருந்தனர். ஆனி பட்டம் பெறுவதை மரிலா வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். 

""என் மகிழ்ச்சிக்கு அளவில்லை!....'' என்று மாத்யூ சொன்னார்.

அன்றிரவே கிரீன் கேபிள்ஸூக்கு எல்லோரும் திரும்பினர். டயானாவை பார்த்த ஆனி, ""நல்லவிதமாக திரும்பிவிட்டேன்!....நாளைக்கு தோட்டத்திற்குப் போய் விளையாடுவோம்!....'' என்றாள். 

அடுத்த நாள் காலை உணவின்போது ""மாத்யூவுக்கு உடல் நலமில்லையா?'' என்று மனதில் நினைத்ததைக் கேட்டாள். 

""ஆமாம்!....அவருக்கு இதயம் பலவீனமாக இருக்கிறது...'' என்றார் மரிலா கவலையுடன். 

மரிலாவைக் கூர்ந்து கவனித்த ஆனி, ""நீங்களும் நலமாக இல்லை....இனிமேல் ஓய்வெடுங்கள்!....நான் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்கிறேன்...'' என்றாள் ஆனி. 

""எனக்கு தலைவலி அதிகமாகிவிட்டது!.....பார்வையும் குறைபாடக இருக்கிறது. படிக்க முடியவில்லை...'' என்று மனக்குறைகளை சொல்ல ஆரம்பித்த மரிலா, தொடர்ந்தார். ""மாத்யூ பணம் வைத்திருக்கும் வங்கி சரியாக இல்லை....அவர் பணத்தைத் திருப்பி எடுக்கவும் இல்லை....ஒன்றும் பிரச்னை ஆகாது என்று சொல்லுகிறார்கள்....''

மாலையில் "லேக் ஆஃப் ஷைனிங் வாட்டர்ஸ்' வரைக்கும் ஆனி நடந்து போனாள். திரும்பி வரும்போது தோட்டத்தில் மாத்யூவைப் பார்த்தாள். 

""மாத்யூ, நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள்....குறைத்துக் கொள்ளலாமே....'' எனறாள் ஆனி. 

""வயதாகிவிட்டாலும் கடுமையாக உழைப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை....'' என்றார் மாத்யூ. 

""நான் ஒரு பையனாக இருந்தால் உதவி செய்திருப்பேன்'' என்றாள் ஆனி. 

""ஆனி, நீ ஒரு டஜன் பையன்களுக்குச சமம்!... ஒரு பையனால் "அவெரி ஸ்காலர்ஷிப்' வாங்கியிருக்க முடியுமா?... நீ என்னுடைய பெண் என்பதில் பெருமையடைகிறேன்!....'' 

அமைதியான இரவின் அழகை ஆனி ரசித்தாள். அவள் வாழ்க்கையில் வரப்போகிற துன்பத்திற்கு முந்தைய இரவு அது என்பது அவளுக்குத் தெரியாது. 

மறுநாள்... 

""மாத்யூ, என்ன விஷயம்?.....உங்கள் உடம்புக்கு என்ன?....'' மரிலா பதட்டத்துடன் கேட்டார்.

கையில் செய்தித்தாளுடன் வாசல் பக்கம் மாத்யூ நின்று கொண்டிருந்தார். அவர் முகம் வெளுத்திருந்தது. ஆனியும் மரிலாவும் அவரை நோக்கி ஓடினார்கள். தாங்கிப் பிடிப்பதற்குள் மாத்யூ கீழே விழுந்துவிட்டார். 

ஆனி டாக்டரைக் கூப்பிட ஓடினாள். மரிலா மாத்யூ அருகில் அமர்ந்திருந்தார். மாத்யூவின் முகத்தைத் தொட்டு எழுப்பினார்.  அவர் எழுந்திருக்கவில்லை. 
டாக்டர் வந்து மாத்யூவை பார்த்துவிட்டு அவர் இறந்து விட்டதாகக் கூறினார்..... திடீர் அதிர்ச்சிதான் அவரது மரணத்திற்குக் காரணம் என்றார். 

அவர்கள் மாத்யூ கையிலிருந்த செய்தித் தாளைப் பார்த்தனர். வங்கி திவாலாகிவிட்டது என செய்தி....மாத்யூ போட்டிருந்த பணமெல்லாம் போய்விட்டது!....

இந்த அதிர்ச்சிச் செய்தி ஊரெல்லாம் பரவி விட்டது. அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் எல்லோரும் வந்து பார்த்தனர். 

பாவம் ஆனி!....அவளால் அழக்கூட முடியவில்லை....சோக நெருப்பு அவள் மனத்திற்குள் எரிந்து கொண்டிருந்தது. அது அவளை எரித்துக் கொண்டிருந்தது. இரவு அவள் படுக்கைக்குப் போனபோதுதான் அழுதாள். அவள் மாத்யூவை அதிகமாக நேசித்தாள். இதயம்தான் அழுதது....கண்ணீர் வரவில்லை....

நடு இரவு...ஆனி திடீரென்று எழுந்துகொண்டாள். மாத்யூ பற்றிய நினைவுகள் எல்லாம் படையெடுத்தன. அவருக்கு மாத்யூவின் குரல் கேட்டது. "ஆனி என்னுடைய பெண்....என்னுடைய பெண் என்பதில் பெருமைப்படுகிறேன்'....ஆனி விம்மி அழுதாள்!.........இதயம் உடைந்து விட்டது!......கண்ணீர் இப்போது வந்துவிட்டது!....

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com