அரங்கம்: பிஞ்சு நெஞ்சம்!

அரங்கம்: பிஞ்சு நெஞ்சம்!

அவனுடைய தாய் அமுதா துவரம்பருப்பு வாங்கி வரச்சொன்னதால் கடைக்குப் போகிறான்.... பொட்டலத்தோடு திரும்புகிறான்....ஒரு பச்சைக்கிளி பறக்க முடியாமல் அவன் காலடியில் வந்து விழுகிறது....

காட்சி  - 1,   

இடம் - சாலை,   மாந்தர் - முரளி, பால்காரர் வேலன்.
(முரளி ஏழாம்வகுப்பு மாணவன். 

அவனுடைய தாய் அமுதா துவரம்பருப்பு வாங்கி வரச்சொன்னதால் கடைக்குப் போகிறான்.... பொட்டலத்தோடு திரும்புகிறான்....ஒரு பச்சைக்கிளி பறக்க முடியாமல் அவன் காலடியில் வந்து விழுகிறது....
பொட்டலம் அவனையறியாமல் கீழே விழுகிறது.....பதறிப்போய்க் கிளியைக் கையில் எடுக்கிறான்)

முரளி: "கீச் கீச்' சின்னு மகிழ்ச்சியா ஒலி எழுப்பற கிளி வலியால வேறே மாதிரி கத்துதே....உடம்பு துடிக்குதே....யாரோ கல்லால அடிச்சிருக்காங்க..... இறக்கையிலே இரத்தம் தெரியுதே....
(கண்கள் கலங்குகின்றன)
பால்காரர் வேலன்: முரளி,....அம்மா துவரம்பருப்பு வாங்கிவரச் சொன்னது என்ன ஆச்சு? (அப்போதுதான் முரளிக்கு அந்த நினைவு வருகிறது) ....சீக்கிரமாப் போ!......வரச் சொன்னாங்க....
(வலக்கையில் கிளியைத் தன் நெஞ்சோடு சேர்த்து வைக்கிறான்.....இடக்கையில் பொட்டலம்...) 
முரளி: கிளியை எப்படியும் காப்பாத்தணும்....
(கவலையோடு இதயம் துடிக்கிறது...வீட்டிற்கு வருகிறான்....)

காட்சி - 2  

இடம் - வீடு,   மாந்தர் - முரளி, தாய் அமுதா, தந்தை வடிவேல்.

முரளி: அம்மா, அம்மா,.....சீக்கிரம் வாம்மா!.....
(அவள் வீட்டின் பின்புறம் வேலையாக இருக்கிறாள்....பொட்டலத்தைச் சமையலறை மேடையில் வைத்துவிட்டு வடிவேலின் அறைக்கு ஓடுகிறான்)
முரளி: அப்பா, அப்பா!....
(அவர் அந்தக் கிளியை அவன் நெஞ்சோடு அணைத்திருப்பதைப் பார்க்கிறார்...)
வடிவேல்: (கோபத்தோடு) ஏய்,.....என்ன இது?.....டர்ட்டி!.....சட்டையிலே ரத்தக்கறை?....உனக்குப் பள்ளிக்கூடத்திற்கு நேரமாகலை?.....இதைப் போட்டுட்டு வேலையைப் பார்....
முரளி: அப்பா,....இந்தக் கிளியோட இறக்கையிலே அடிபட்டு ரத்தம் வருது.....(கண்களில் நீர்...)
வடிவேல்: இது யாரோட கிளி?.....உனக்கு என்ன இது மேல அக்கறை?
முரளி: பக்கத்து மாந்தோப்பிலே இருக்கிற கிளியா இருக்கும்!.....கடைக்குப் போய் வரும்போது என் காலடியில் வந்து விழுந்தது.....வலியிலே துடிக்குது....உங்க வண்டியை எடுங்க....அடுத்த தெருவிலே கால்நடை மருத்துவர் இருக்காரு....காட்டலாம்....(அதைக் காப்பாற்ற மனம் தவிக்கிறது...)
வடிவேல்: (அக்கறையின்றி)உனக்கு வேறே வேலை இல்லை?.....சாலையிலே கிடந்ததைத்தானே எடுத்து வந்தே.....செத்துப் போனா குப்பைத் தொட்டியிலே போடு.....
(அந்தச் சொற்கள் அவனுடைய உணர்வைப் பாதிக்கின்றன. அழுதுகொண்டே பின்புறம் செல்கிறான்.....அமுதா ஓடி வருகிறாள்....
கண்ணீரைத் துடைக்கிறாள்)
அமுதா: முரளி, நீ அழாதே....உன் கிளியைக் காப்பாற்றுவது என்னோட பொறுப்பு.... (மஞ்சளை அரைத்துக் கிளியின் காயத்துக்குப் பற்றுப் போடுகிறாள்) இந்தக் கிளிக்கு ஒண்ணும் ஆகாது கவலைப்படாதே....(அவனுடைய முதுகில் ஆதரவாகத் தட்டிக் கொடுக்கிறாள்...)
வடிவேல்: அமுதா,....இங்கே வா...
அமுதா: (மெதுவாக) எதையாவது சொல்லி அவனை மறுபடி அழ வெச்சுடாதீங்க....
வடிவேல்: எல்லாம் முதுகில் ரெண்டு போட்டால் சரியாகிவிடும்!.....
அமுதா: நீங்க இப்படி எதிர்மறையாகப் பேசினா அது அவனோட மனசை ரொம்பவும் பாதிக்கும்....கொஞ்சம் பொறுமையா இருங்க.....கவனமாப் பேசுங்க....
வடிவேல்: சரி,சரி,.....அந்த உதவாக்கரைக்கு பணிவிடை செய்தது போதும்!.....நான் அலுவலகம் போகணும்....வேலையைப் பார்!....
(சமையற்கட்டுக்கு வருகிறாள்)
முரளி: அம்மா....பாலை வெச்சேன் கிளி குடிக்கலே.....மஞ்சள் வெச்சா போதாது.....மருத்தவரிடம் காட்டணும்....
அமுதா: இதோ....,இன்னும் கொஞ்ச நேரத்திலே புறப்படலாம்.....(அவனுடைய கன்னத்தில் அன்பாகத் தட்டிக் கொடுக்கிறாள்)
(சமையற்கட்டில் அமுதா முரளிக்கு ஆறுதல் கூறுவதைக் கேட்டு வடிவேல் எரிச்சல் அடைகிறார்.)
வடிவேல்: அமுதா,.....என்ன இது?....சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கு!.....அலுவலகத்திலே இன்று தணிக்கை (ஆடிட்) செய்ய வர்றாங்க.....நான் கோப்புக்களை (ஃபைல்ஸ்) சரி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.....எது முக்கியம்?....
அமுதா: அவனுக்கு கிளி முக்கியம்!.....உங்களுக்கு அலுவலகம் முக்கியம்!....
வடிவேல்: சரி,....நான் என்ன செய்யணும்?....
அமுதா: அவனோட மனசைக் காயப்படுத்தாம இருந்திருக்கலாம்.....உங்களைப் போலவே நானும் இருந்தா அவனோட நிலை என்னாகும்னு பாருங்க..... உங்க வேலை முக்கியம்தான்....அதே நேரத்திலே அவனோட உணர்வுகளையும் புரிஞ்சுக்கிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்..... (வடிவேல் அமைதியாக இருக்கிறார்) ... உயிர்களிடத்திலே அன்பா இருக்கணும்னு படிக்கிறான்.... சொல்லித் தர்றோம்....செயல்னு வரும்போது பின் வாங்கறோம்.... அதுதான் அவனுக்குப் பிடிக்கலே.....அழறான்.... குழந்தையோட மனசு காசு,...பணத்தைப் பெரிசா நினைக்காது.....துன்பப்படற உயிரைப் பார்த்துத் துடிக்கும்......எப்பாடுபட்டாவது காப்பாற்ற நினைக்கும்!.....
(வடிவேல் தம் தவற்றுக்கு வருந்துகிறார்...)
அமுதா: உங்க வேலைக்கு எந்த இடையூறும் இல்லாம இந்த விஷயத்தை நீங்க வேற மாதிரி கையாண்டிருக்கலாம்....
வடிவேல்: எப்படி?...
அமுதா: இந்தக் கிளியை நாம் குணப்படுத்திடலாம்....உன்னையும் அம்மாவையும் காரில் கூட்டிப் போறேன்....போகிற வழியிலே மருத்துவர் வீட்டிலே விடறேன்.....நீங்க கிளினிக்கிலே வைத்தியம் பார்த்திட்டு ஆட்டோவிலே வீட்டுக்குப் போங்கன்னு சொல்லியிருந்தா அவன் ஏன் அழப்போறான்?.....சரி,....அவனுக்கு ஆறுதல் சொல்லி வண்டியிலே ஏற்றிக்குங்க....நானும் வர்றேன்....

காட்சி - 3,    

இடம் - வீடு,    மாந்தர் - முரளி, வடிவேல், அமுதா.

வடிவேல்: (தனக்குள்) அவனோட இரக்கத்தை  அக்கறை, ஆதரவு, பரிவு என்ற மலர்களைத் தூவிப் பாராட்ட வேண்டிய நான் எந்திரத்தனமா நடந்து அவனை அழவைச்சிட்டேனே....   
(முரளியை அன்போடு அழைக்கிறார். அவன் அச்சத்தோடு தயங்கித் தயங்கி வருகிறான். அவர் அவனைத் தலையில் தடவிக் கொடுக்கிறார்.....பாசத்தோடு அரவணைக்கிறார். )
முரளி: அப்பா,.....கிளி,...கிளி என்கையிலே இருக்கு.....அழுத்திடாதீங்க.....
வடிவேல்: நீயும், அம்மாவும வாங்க.....கிளியை மருத்துவரிடம் காட்டலாம்....அதற்குப் பிறகு நான் அலுவலகம் போறேன்.....போதுமா?.....இப்போ என்மேலே உனக்குக் கோபம் இல்லையே.....
முரளி: (முகம் மலர்ந்து) .....இல்லே....அது பறந்து போச்சு!
(ஒரு கையில் கவனமாகக் கிளியை வைத்துக்கொண்டு மறுகையால் அவருடைய கையைப் பாசத்தோடு பற்றிக் கொள்கிறான்... --அந்தக் காட்சியைக் கண்டு அமுதா மகிழ்கிறான்)

திரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com