கதைப் பாடல்!: ஆமையின் அடக்கம்! 

ஆழக் கடலில் ஆமையொன்று அடக்கமாக வாழ்ந்ததாம்!
கதைப் பாடல்!: ஆமையின் அடக்கம்! 

ஆழக் கடலில் ஆமையொன்று 
அடக்கமாக வாழ்ந்ததாம்!
நாளும் கொஞ்ச நேரம் அது 
கரையில் ஓய்வு எடுக்குமாம்!

கரையில் இருந்த தவளையொன்று 
ஆமை தன்னை அண்டியே  
கர்வம் கொண்டு அதனிடம் 
தர்க்கம் செய்ய நினைத்ததாம்!

...""தரையில் ஊனம் கொண்டவர்போல் 
மிக மெதுவாய் நடக்கிறாய்!...
...என்னைப் போல வேகமாக 
தாவ உன்னால் முடியுமா?....

....தத்தளித்துத் தடுமாறி 
நகருகின்ற ஆமையே!
தத்தித் தத்தி வேகமாக 
நான் குதிப்பேன் தெரியுமா?....

...மழை பெய்தால் எனது குரல்
எங்கும் ஒலிக்கும் தெரியுமா?
ஆமையாரே ஊமையா நீர்?
ஒன்றும் பதில் இல்லையா?.....''

அடக்கம் கொண்ட ஆமை இதனை 
செவி மடுத்துக் கேட்டதாம்!
அன்பு கொண்டு தவளையிடம் 
அழகாய் பதில் சொன்னதாம்!

.....""நன்று!....நீயும் சொன்னதெல்லாம்
நானும் எண்ணிப் பார்க்கிறேன்....
தாக்க வேண்டி எதிரி என்னை 
நெருங்குகின்ற வேளையில்.....

.....காக்க முடியும் கை, கால்கள், 
தலையை மறைத்து ஓட்டுக்குள்!
....உன்னைக் காத்துக் கொள்வதற்கு 
உனக்கு உண்டோ உறுப்புகள்?....

.....உன்னைவிட சில விதத்தில் 
உயர்ந்தவன் நான் தெரிந்துகொள்!
அடங்கிப் போகும் யாவரும் 
அச்சமுற்றோர் இல்லையே!...

....அடக்கத்திற்கு என்னை சிறந்த 
உவமை சொன்னார் வள்ளுவர்!....
"நுணலும் தன் வாயால் கெடும்'
என்ற வார்த்தை உமக்குத்தான்!.....

....பணிவு கொண்ட உயிர்களை 
பரிகசித்துப் பேசாதே!
பணிவு உயர்ந்த பண்பென்று 
பதிவு செய் நீ நெஞ்சிலே!...''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com