மரங்களின் வரங்கள்!

நான் தான் பனை மரம் பேசுகிறேன்.  என்னுடைய தாவரவியல் பெயர் பொராஸஸ் ஃபலாபெல்லிஃபெர். நான் பனை குடும்பத்தைச் சேர்ந்தவன்.
மரங்களின் வரங்கள்!

பனை மரம்!    

என்ன குழந்தைகளே நலமாக  இருக்கிறீர்களா ?

நான் தான் பனை மரம் பேசுகிறேன்.  என்னுடைய தாவரவியல் பெயர் பொராஸஸ் ஃபலாபெல்லிஃபெர் (க்ஷடிசயளளரள குடயநெடடகைநச). நான் பனை குடும்பத்தைச் சேர்ந்தவன்.  எனக்கு உங்களிடம் பேசும் போது  அழுகைஅழுகையாக வருகிறது. ஏனெனில், நகர்ப்புறங்களில் வாழுபவர்கள் என்னை மறந்தே விட்டார்கள். தமிழ்நாட்டின் மாநில மரம் என்ற பெருமை கொண்டவன் நான் தான்.  நான் வறட்சியைத் தாங்கி வளரக் கூடியவன். என்ன செய்வது? கிராமங்கள் விரிவடையும் போது, மனிதர்கள் என்னைத் தான் முதலில் வெட்டுகிறார்கள். மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கையான அரணாக கருதி நம் முன்னோர்கள் என்னை வயல்வரப்புகளிலும், குளம், கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிதிளிலும் வளர்த்தனர். 

சங்கக் காலத்தில் "ஓலைச்சுவடி' என அழைப்பது என்னைத் தான். தமிழ் மொழியின் எழுத்துகள் என் மீது தான் முதன் முதலில் பதியப்பட்டது. பழங்காலத்தில் என்னுடைய ஓலையில் தான் இலக்கியங்களும், இதிகாசங்களும், புராணங்களும் எழுத்தாணிக் கொண்டு எழுதப்பட்டன. தெய்வப் புலவர் திருவள்ளுவரின் திருவுருப்படங்களில் என் ஓலைச் சுவடிகள் அவர் கைகளில் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதனால் தான் என்னை 104, 433, 1282 ஆகிய திருக்குறள்களில் தினை அளவையும், பனை அளவையும் உவமையாக வைத்து பல விஷயங்களை தெளிவுப்படுத்தி இருக்கிறார். கிருஷ்ணனின் சகோதரன் பலராமன், அவனுடைய கொடி பனைக் கொடி. இவை எனக்குப் பெருமை. 

என்னிடமிருந்து தயாரிக்கப்படும் பனை வெல்லம், பனங்கல்கண்டு மருத்துவ குணம் கொண்ட இயற்கை மருந்தாக பயன்படுகிறது. நான் தரும் நுங்கு தாதுக்கள், வைட்டமின்கள், நீர்ச்சத்துகளைக் கொண்ட ஆரோக்கிய உணவு. உங்கள் உடல்நலனுக்கு மிகவும் நல்லது. கோடைக்காலத்தில் மின்தட்டுப்பாடு ஏற்படும் போதெல்லாம் உங்கள் கையில் விசிறியாய் இருப்பேன். என் குச்சி குப்பைக் கூட்டும் துடப்பமாகவும், ஓவியம் வரைய தூரிகைகளாகவும் உதவுகின்றன. மெலிந்த உடல்வாகு உள்ளவர்களுக்கு நான் கொடுக்கும் பதநீர் அருமருந்தாகும். சிறுகால்வாய்கள், வாய்க்கால்களைக் கடக்க உதவும் மரப் பாலமாகவும் நான் உதவுகிறேன்.  என் ஓலையில் வைக்கப்படும் பொருள்கள் என்றும் கெட்டுக் போகாது. ஏழை, எளிய மக்கள் வீடு கட்டுவதற்கு குளுமையான ஓலைகளைத் தருகிறேன். அழும் குழந்தைகளுக்கு வண்ண நிறக் கிலுகிலுப்பை என் ஓலையினால் விதவிதமாகப் பின்னி அதன் உள்ளே பொடியான கற்களைப் போட்டு பிடிப்பதற்கும் பிடியும் வைத்து கிலுக்கிலுப்பு என ஆட்டி குழந்தைகளை அழுவதை நிறுத்துவார்கள்.  அப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

"உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்கு பனை போல்வரே' என்று நீதி வெண்பா என்னை பெருமைப்படுத்துகிறது. "பனங்காட்டு நரி சலசலப்பு அஞ்சுமா?' என்ற பழமொழி எனது வீரத்தை எடுத்துரைக்கிறது.  நான் பிறரின் நன்மைக்காகத் தான் இருக்கிறேன். கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரமான கற்பகதருவுக்கு ஒப்பிட்டு "பூலோகத்து கற்பகதரு' என நம் முன்னோர்கள் என்னை அழைத்தனர். இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழி யானைக்கு மட்டுமல்ல எனக்கும் பொருந்தும். நான் இப்போது மரணப் படுக்கையில் தான் இருக்கிறேன். அதனால் எங்கள் இனத்தை அழிக்காமல் காப்பாற்றுங்கள்.  உங்களுக்கு அனைத்து வகையிலும் பயன்படும் என்னை காப்பாற்றுவது உங்கள் கடமையல்லவா?  நான் தமிழ் ஆண்டில் ரவுத்ரி ஆண்டை சேர்ந்தவள். 

மரங்கள் இல்லா நிலம் பயங்கரமானது! 

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com