கிறிஸ்துவத் தாலாட்டுப் பாடல்கள்!

பிறந்த குழந்தைக்குத் தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பது தமிழ் மரபு. நாட்டுப் பாடல்களில் தாலாட்டுப் பாடல்களுக்குத் தனியிடம் உண்டு.
கிறிஸ்துவத் தாலாட்டுப் பாடல்கள்!

பிறந்த குழந்தைக்குத் தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பது தமிழ் மரபு. நாட்டுப் பாடல்களில் தாலாட்டுப் பாடல்களுக்குத் தனியிடம் உண்டு. இலக்கியங்களில் கூடத் தாலாட்டு முக்கிய இடத்தைப் பெறுகிறது. சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகிய பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் இடம்பெறும் தாலப்பருவம் மிகவும் சுவையானது. கிறித்துவத் தமிழ் இலக்கிய நூல்களுள் சிலவற்றில் பல தாலாட்டுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
தஞ்சைப் புலவர் சூ. தாமசு இயற்றிய "வேளை மரியன்னை பிள்ளைத்தமிழ்' என்னும் நூல் வேளாங்கண்ணியில் கோயில் கொண்டுள்ள ஆரோக்கிய அன்னை மீது பாடப்பெற்றதாகும். பாலஸ்தீன நாட்டில் பிறந்த மரியாள் இந்நூலில் தமிழ்நாட்டுக் குழந்தையாகவே சித்திரிக்கப்படுகின்றாள். விண்ணகத் தந்தையாகிய இறைவன் தன் மடிமீது வைத்து மகிழாத காரணத்தால்தான் குழந்தையாகிய மரியாள் தூங்காமல் அழுகின்றாளோ என்னும் பொருளில்,
""வானுறு தந்தை மடித்தலம் மீதுனை
வைத்து மகிழ்ந் திலரோ''
எனப் புலவர் தாலாட்டுப் பாடுகிறார். அவ்வாறே தென்னை மரங்களும் பாக்கு மரங்களும் அடர்த்தியாக மண்டியுள்ள வேளாங்கண்ணித் திருக்குழந்தையாகிய மரியாளை,
""தெங்கொடு கமுகு நெருங்கிய வேளைச்
சேயே தாலேலோ''
என்றும், ஊரை அடுத்து மலர்ந்துள்ள தாழை மலர்களின் நறுமணம் கமழும் வேளை நகரின் வாழ்வே மரியன்னைதான் என்பதைச் சுட்டித் தாலாட்டுப் பாடும் வகையாக,
""வனமுறு தாழையின் மனமுறு வேளையின்
வாழ்வே தாலேலோ''
என்றும் பாடி மகிழ்கின்றார். தஞ்சைப் புலவர் யேசுவின் அன்னைக்குத் தாலாட்டுப் பாடினாரென்றால், கவியரசு கண்ணதாசன் தம் இறவாக் காப்பியமாகிய யேசு காவியத்தில் இறைமகனாகிய யேசுவுக்கே தாலாட்டுப் பாடுகிறார். உலக மீட்பராகிய யேசு பெருமான் எங்கு பிறப்பார் என்னும் செய்தியெல்லாம் ஏற்கெனவே இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட வரலாறு. அதனைச் சுட்டிக்காட்டி,
""அந்நாளில் நூலோர்கள் ஆன்றோர்கள்
பெரியோர்கள்
சொன்னபடி மீட்பதற்குத் தோன்றிவந்தாய்
தாலேலோ''
என்று கவியரசர் பாடுகிறார். மேலும்,
போட்ட விதை முளைக்கும் பொன்னான பூமியிலே
வாட்டமில்லாப் பயிராக வந்து விளைந்தவனே
என்று தெய்வத் திருமகனைப் போற்றும்
கவியரசர்,
""மாரியிலே மடைபொழிந்து மக்களினம்
வாழவைக்கும்
காரியம்போல் உன் தந்தை காலத்தே
அனுப்பிவைத்தார்''
என்று புகழ்கின்றார். யூத குலத்தில் பிறந்தாலும் உலகத்தையே மீட்பவராகிய யேசு பெருமானை,
""சோதிமணிப் பெட்டகமே, சுடரொளியே யூதருக்கு
ஆதிமகனாய்ப் பிறந்த அருந்தவமே தாலேலோ''
என்று கண்ணதாசன் தாலாட்டி மகிழ்கின்றார். கண்ணதாசனுக்கு முந்திய தலைமுறையைச் சார்ந்தவர் தூத்துக்குடிக் கவிஞர் எம்.பி. மாஸ்கரேனஸ். யேசு பிரானைப் போற்றி, ""சேசு பிறந்தனன் சேசு பிறந்தனன்'' என்று மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும் அவர்,
""மாடமும் கூடமும் நம்மவர்க்கோ - சிறு
மாட்டுத் தொழுவம் கடவுளுக்கோ?
வீடும் பெருமையும் நம்மவர்க்கோ - மனம்
பேதுறும் கோலம் கடவுளுக்கோ?''
என்னும் வரிகளில், உலகெலாம் ஒரு சொல்லால் படைத்தாலும் உத்தமத் தேவமகன், மாடுகள் அடையும் தொழுவத்தில் பிறந்த எளிமையையும் வறுமையையும் நினைந்து தாம் மனம் கலங்குவதை அற்புதமாக உணர்த்துகின்றார். ஆயினும் மனம்
தளராதவராய்,

""போனவரை மீட்க வந்தவன் நீ - நல்ல
போதனை நல்க எழுந்தவன் நீ
வானவர் போற்றித் துதிப்பவன் நீ
வாழ்த்துவம் யாம் வெகு சீர்த்திபெற'' எனவும்,
தேடில கோடெங்கள் பூவுலகை நன்கு
சேர்த்துற வாக்கிட வந்தவன் நீ
ஆவலாய் நிற்கிறோம் ஆண்டவனே உயர்
ஆசி பொழிந்திட வேண்டினமே''
எனவும் இறைமகனின் ஆசியைப் பணிந்து வேண்டுகின்றார்.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்த புதுவை வித்துவான் சாமிநாதப்பிள்ளை "யேசுநாதர் பிள்ளைத்தமிழ்' என்னும் நூலை இயற்றியுள்ளார். அந்நூலில் தாலப்பருவத்தில் அவர் பாடியுள்ள பாடல்கள் மிகவும் அருமையானவை. யேசுபிரான் மானிடரின் பாவங்களை அழிக்கப் பிறந்தவர் என்னும் கருத்தினை வலியுறுத்தி,
""திருத்தி மனிதர் பாவம் அகற்றும்
திறமே தாலோ தாலேலோ''
என்றும், இறைமையையே அணிகலனாகப் புனைந்த அன்னைமரி ஈன்ற திருமகன் என்பதை நினைவூட்டி,
""இமிழார் இழை மாமரி வியந்த
இறைவா தாலோ தாலேலோ''
""நோயற அருள்தரும் யேசுவே
தாலோ தாலேலோ''
என்றும் வித்துவான் பாடிக் களிக்கின்றார். இன்றும் நம்மிடையே வாழ்ந்துவரும் திருச்சிப் பாவலர் அருள். செல்லத்துரை "யேசுபிரான் பிள்ளைத்தமிழ்' என்னும் நூலை இயற்றியுள்ளார். அந்நூலில் தாலப்பருவத்தின் முதற்பாட்டிலேயே யேசுபெருமானை மலர், தென்றல், பனிக்குன்று, திங்கள் ஒளி, செஞ்சுடர், சொரிதேன், செம்மணி, பூம்புனல் என்றெல்லாம் பல்வேறு மங்கலச் சொற்களால் பாடி மகிழும் கவிஞர், பாடலின் முத்தாய்ப்பாக,
""தங்கத் தமிழை செங்கதிரே
தலைவா தாலோ தாலேலோ''
எனப் பாடி மகிழ்கின்றார், இவ்வரிகளையே தாலப்பருவத்தின் முதல் ஐந்து பாடல்களின் நிறைவு வரியாக அமைத்து நம்மையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கச் செய்கின்றார். இறைவனை அம்மையப்பனாகக் கொண்டு போற்றும் தமிழ் மரபினையொட்டி,
""தந்தையாய்த் தாயுமாய் நின்று விளங்கினை
தாலோ தாலேலோ''
என அருமையாக இசைக்கின்றார். இவ்வாறு தமிழ் மரபினைப் போற்றி, கிறிஸ்துவக் கோட்பாடுகளையும் உள்ளடக்கியனவாக அமைந்துள்ள தாலாட்டுப் பாடல்களும் பிற பாடல்களும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள வல்லவை.
-அமுதன் அடிகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com