பெயரறியாப் புலவரின் பெருமைமிகு பாடல்!

தனிப்பாடல் திரட்டில் (இரண்டாம் தொகுதி) இடம்பெற்றுள்ள பாடல்களுள் 425 பாடல்கள் பெயர் அறியப்படாத பல்வேறு புலவர்களால் எழுதப்பட்டவை.
பெயரறியாப் புலவரின் பெருமைமிகு பாடல்!

தனிப்பாடல் திரட்டில் (இரண்டாம் தொகுதி) இடம்பெற்றுள்ள பாடல்களுள் 425 பாடல்கள் பெயர் அறியப்படாத பல்வேறு புலவர்களால் எழுதப்பட்டவை. சொற்பொருள் நயம்மிக்க இப்பாடல்கள் படித்து இன்புறத்தக்கவை. அவற்றுள் ஒரு பாடலில் மேஷம் முதல் மீனம் வரையுள்ள பன்னிரண்டு ராசிகளில் பிறந்தவர்களுடைய குணநலன்கள் கூறப்பட்டுள்ளன. ஜோதிடம், ஜாதகம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இப்பாடல் மிகவும் பயன்படும்.

""ஆடொ டெதிரிடேல் மாடோடு சேரேல்
தண்டு கொண் டிற்புகேல் நண்டுக் கிடங்கொடேல்
சிங்கத் தானோடே துங்கப் போர் செயேல்
கன்னி மகனைத் துன்னி விடாதே
கோலா னென்றிலுந் தோலான் றேளான்
தன்னைப் பேண வுன்னிக் கொள்ளுக
வில்லான் றன்னைச் சொல்லால் வளைத்திடு
மானா னோடே யானா வழக்கிடேல்
குடத்தான் படையெலாம் படத்தான் வெல்லுவான்
மீனதா னட்பைத் தானுகந் திடுகவென்
றோதினர் மூதறி வுடைய நாவலரே''

"ஆடொடு எதிரிடேல் - மேட(மேஷ) ராசியில் பிறந்தவனை எதிர்க்காதே; மாடோடு சேரேல் - இடப (ரிஷபம்) ராசிக்காரனுடன் கூடாதே; தண்டு கொண்டு இல்புகேல் - மிதுன ராசிக்காரனுடைய வீட்டினுள் செல்லாதே; நண்டுக்கு இடம் கொடேல் - கடக ராசியுடையவனுக்கு இடம் கொடுக்காதே; சிங்கத் தானோடே துங்கப் போர் செயேல் - சிம்ம ராசியில் பிறந்தவனுடன் உக்கிரமான சண்டை போடாதே; கன்னி மகனைத் துன்னி விடாதே - கன்னி ராசியில் பிறந்தவனோடு நெருங்காதே; கோலான் ஒன்றிலும் தோவான் - துலா ராசியில் பிறந்தவன் தோல்வி அடைய மாட்டான்; தேளான் தன்னைப் பேண வுன்னிக் கொள்ளுக - விருச்சிக ராசியில் பிறந்தவனைப் பாதுகாப்பதில் யோசனை செய்; வில்லான் தன்னைச் சொல்லால் வளைத்திடு - தனுசு ராசியில் பிறந்தவனைப் பேச்சினாலே இணங்கச் செய்யலாம்; மானானோடே யானா வழக்கிடேல் - மகர ராசியில் பிறந்தவனோடு தொலையாத விவகாரஞ் செய்யாதே; குடத்தான் படையெலாம் படத்தான் வெல்வான் - கும்ப ராசியில் பிறந்தவன் சேனைகளை அழித்து வெல்வான்; மீனத்தான் நட்பைத் தானுகந்திடுக என்று - மீன ராசியில் பிறந்தவனுடைய நட்பைத் தேடிக்கொள்க; ஒதினர் மூதறிவுடைய நாவலரே - இவ்வாறாகப் பழைமையான அறிவுடைய பெரியோர் கூறினர்' என்பது இப்பாடலின் பொருள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com