காவிரி அம்மன் கப்பல்!

காவிரி ஆறு தமிழர் வாழ்வோடு, தமிழ் நிலத்தோடு, வளத்தோடு பின்னிப்பிணைந்தது.
காவிரி அம்மன் கப்பல்!

காவிரி ஆறு தமிழர் வாழ்வோடு, தமிழ் நிலத்தோடு, வளத்தோடு பின்னிப்பிணைந்தது. காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார்ப்பட்டினமே உலகம் எல்லாம் ஆண்ட சோழனுக்குத் தலைநகரமாக விளங்கியது. சிலப்பதிகாரத்தில் கானல்வரிப் பாடலில் ""நடந்தாய்
வாழி காவேரி'' என்று இளங்கோவடிகளால் போற்றப்பெற்றது.
கரிகாற்சோழன் காவிரிக்கு அணை கட்டினான். அந்த அணையே "கல்லணை' எனும் பெயரால் இன்றும் இருக்கிறது. இவ்வாறு வரலாற்றுத் தொடர்புடைய காவிரி ஆற்றைக் "காவிரி அம்மன் கப்பல்' என்ற பாடலும் கொண்டாடுகிறது. இதை இயற்றியவர் வி.எஸ். வாலாம்பாள் என்ற அம்மையார்; மூன்றாம் பதிப்பாக வெளிவந்த ஆண்டு 1949. இது "குறவஞ்சி' என்ற நூலில் "தர்மாம்பாள் குறம்' என்ற இலக்கியத்தின் முடிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
வி.எஸ். வாலாம்பாள் எழுதிய முகவுரையில், ""இதில், தர்மாம்பாள் குறம், வேதாந்தக் குறம், அகண்டவெளிக் குறம் என வழங்கும் மூன்று பாடல்கள் அடங்கியிருக்கின்றன. கலியாண காலங்களில் சொல்லத் தகுந்த காவிரியம்மன் கப்பல் ஒன்று தர்மாம்பாள் குறத்தின் முடிவில் சேர்க்கப்பட்டிருக்கிறது'' என்று கூறியுள்ளார்.
காவிரி உற்பத்தியாகும் ஊரிலிருந்து அது கடலொடு கலப்பது வரை இடையிலுள்ள முதன்மையான ஊர்கள் அனைத்தையும் "காவிரி அம்மன் கப்பல்' கவிதை நயம் ததும்பப் பட்டியல் இடுகிறது. "காவேரி அம்மன் செல்லுகின்ற தலங்கள் எல்லாம் சொல்லுவோம்' என்று முன்னுரை அமைகிறது. "ஸஹ்யகிரி' என்ற இடத்தில் உற்பத்தியாகி குடகுமலை காட்டின் வழி வந்து, உன்னதகிரி கடந்து சிவசமுத்திரம் கபிலை, திருமுக்கூடல், ஸ்ரீரங்கப்பட்டணம் முதலானவற்றை அழகாக வருணித்துள்ளார் ஆசிரியர் வாலாம்பாள். சான்றுக்குச் சில வரிகள்:

ஆனைக்குந்தி மலையைவிட்டு அமராவதி சேர
சொந்தமாய் ஈரோடுவிட்டு கொடுமுடியைச் சேர்ந்து
............ ............... ................. ..........
அழகான ஊர்களெல்லாம் அன்புடனே பரவி
பாச்சலூர் கருவூர் குழித்தலையும் பார்த்து
பெருகமணி சிறுகமணி(திருப்) பளாத்துரையுமோடி
அகண்டகா வேரியாகி அடியார்களைக் கார்த்து
தலைமகளாம் கொள்ளிடத்தை வடபுரத்தில் செலுத்தி
திருச்சினாப் பள்ளிமலை ஈசனையும் ஸ்துதித்து
ஜம்புநாதர் ஸ்ரீரங்கர்க்கு திருமாலையும் தரிசித்து
சிந்தாமணி தன்னைவிட்டுத் திருவானைக்கா கடந்து
............ ............... ................. ..........
கணபதி அக்ரகாரம் கபிஸ்தலமும் கண்டு
வளமையான சுவாமிமலை கும்பகோணம் வந்து
பேரான மருதூரின் பரமரையும் பணிந்து
பேர்பெற்றகோ விந்தபுரம் வஞ்சிநாடு புகுந்து
குத்தாலம் ஆடுதுரை உச்சிதமாய் கடந்து
கோனேரி ராஜபுரம்நர சிங்கன் பேட்டை வந்து
கெüரீமா யூரநாதன் சந்நதியைக் கண்டு
களிப்புடன் துலாமா தக் கடைசிமட்டு மிருந்து
கண்டவுடன் ஜீவர்களின் கர்மங்களை யொழித்து
அன்புடனே கெüரீநாதன் அனுக்கிரம மடைந்து
சந்தோஷமாய் காவேரி சாயாவனந் தாண்டி
சங்கமுகத் துறையடைந்து சமுத்திரரைச் சேர்ந்தாள்
அன்புடனே கூடி அலையுடன் போராடி
கண்கலங்கி வாடி கணவரிடம் ஓடி
களிக்கக் கடல் கொந்தளிக்க
முத்தைக் குளிக்க தண்ணி சிவக்க சேர்ந்து
காதலுடன் கடல் மன்னனுடன் காவேரியும் கலந்துவிட
ஏலேலோ ஏலேலோ காவேரி கடலுடனே கலந்த கப்பல்!

என்று நிறைவு (பாடல் மூன்றாம் பதிப்பில் உள்ளபடி) செய்துள்ளார். காவிரியைப் பெண்ணாகவும் கடலைக் கணவராகவும் இப்பாடல் அற்புதமாக உருவகிக்கிறது. அன்று நம் நாட்டையும் நாட்டு மக்களையும் வளப்படுத்தினாள் அன்னை காவிரி! ஆனால், இன்று...?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com