ஆயிரத்தில் ஒருத்தி

தன் வீடு, தன் நலம் என வாழ்வோர்களே அதிகமுண்டு. அதிலும் பெண்கள் பெரும்பாலும் தன் கணவன், பிள்ளைகளுக்காக இறை வழிபாடு செய்வதும், கவலைப்படுவதும்தான் அதிகம்.
ஆயிரத்தில் ஒருத்தி

தன் வீடு, தன் நலம் என வாழ்வோர்களே அதிகமுண்டு. அதிலும் பெண்கள் பெரும்பாலும் தன் கணவன், பிள்ளைகளுக்காக இறை வழிபாடு செய்வதும், கவலைப்படுவதும்தான் அதிகம். இது இயல்பானதே!ஆனால், பெண்களுள் சிலர் சமுதாய நலனை சிந்தித்து, தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றுவோரும் உள்ளனர்.
தலைவி ஒருத்தி, தன்னைப் பிரிந்து சென்ற கணவனைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், நாட்டு நலனுக்காகக் கவலைப்பட்டிருப்பதை ஐங்குறுநூறு எடுத்துரைக்கிறது.
தன்னலம் கருதாத தலைவி, தலைவன் வரும் நேரம் வரை உலகம் உய்வுபெற வேண்டி காலத்தை வேண்டுகிறாள். புலம் பெயர்ந்த தலைவன் திரும்பி வந்து தலைவியின் தோழியைப் பார்த்து, "நான் என் மனைவியை விட்டுப்பிரிந்த பின் நீயும் அவளும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?' என வினவ, அதற்குத் தோழி தந்த பதில் பாடலாக அமைந்துள்ளது.

"வாழி ஆதன் வாழி அவினி
பால் பல ஊறுக, பகடு பல சிறக்க
என வேட் டோளே யாயே யாமே
வித்திய உழவர் நெல்லோடு பெயரும்
பூக்கழல் ஊரான் தன் மனை
வாழ்க்கை பொலிக என வேட்டேமே'

தோழியோ, தன் தோழி தலைவனுடன் சிறப்புற வாழ வேண்டினான்; தலைவியோ "பால் ஊறுக, பகடு சிறக்க; செல்வம் வளர்க; செழிப்பு தழைக்க!' என வேண்டினானாம். தலைவி மேலும்,

"நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க
விளைக வயலே வருக இரவலர்
பகைவர் புல் ஆர்க பார்ப்பர் ஓதுக
பசி இல்லாகுக பிணி சேன் நீங்குக
வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக
அறம் நனி சிறக்க அல்லது கெடுக
அரசு முறை செய்க கனவு இல்லாகுக
மாரி வாய்க்க வளம் நனி சிறக்க'

என்கிறாள். நாடு பகை நீங்கி, மழை பொழிந்து வேளாண்மை செழித்து, வேதங்கள் ஓதப்பட்டு பசி, பிணி நீங்கி தன் தாய்நாடு முறையான ஆட்சியோடு வாழ வேண்டும் என்று தலைவி தன் மனத்தை தெள்ளிய நீரோடையாய் வைத்து வேண்டுகிறாள்.
ஐங்குறுநூறு அடையாளம் காட்டும் இத்தலைவி தன் கணவன் பிரிந்த நிலையிலும்கூட நாட்டு நன்மையையே சிந்தித்திருப்பது வியப்பான செய்தி!
ஐங்குறுநூற்றுத் தலைவியை வேட்கைப் பத்தில் பாடிச் சிறப்பித்தவர் புலவர் ஓரம் போகியார். இத்தலைவி ஆயிரத்தில் ஒருத்திதான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com